அறைபறை அன்னர் கயவர்தாம்

குறள் 1076
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்
[பொருட்பால்,  குடியியல்,  கயமை]

பொருள்
கயமை - kayamai   n. Inferiority, baseness,despicableness; கீழ்மை (குறள், 108, அதி

அறை - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை

பறை - தோற்கருவி; தப்பு; பறையடிக்குஞ்சாதி; வட்டம்; சொல்; விரும்பியபொருள்; ஒருமுகத்தலளவை; மரக்கால்; நூல்வகை; வரிக்கூத்துவகை; குகை; பறத்தல்; பறவைஇறகு; பறவை

அன்னர் - They are like. அன்னர்--அன்னார். Such persons

கயவர் -  கீழ்மையானவர்; கீழ்மையான செயல்களை செய்பவர்

தாம் - அவர்கள்; மரியாதைகுறிக்கும்முன்னிலைச்சொல்; ஓரசைச்சொல்; ஒருசாரியை; தாகம்; விலை

கேட்ட - கேட்டல் - செவிக்குப்புலனாகுதல்; பாடங்கேட்டல்; வினாவல்; விசாரித்தல்; வேண்டுதல்; கேள்விப்படுதல்; கொடுக்கச்சொல்லுதல்; தண்டித்தல்; இரத்தல்; நோய்முதலியனநீக்குதல்; விலைகேட்டல்; ஏற்றுக்கொள்ளுதல்; பொறுத்தல்; தணிதல்; கீழ்ப்படிதல்; ஒலிஎட்டுதல்; செவியாற்கேட்குதல்; அனுமதிபெறுதல்.

மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.

பிறர் - அயலார், அன்னியர்
பிறர்க்கு - அயலாருக்கு; அன்னியருக்கு

உய்த்து - உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்

உரைக்கலான் - பிறரிடம் சொல்லிவிடுவர்.

முழுப்பொருள்
ஏதேனும் ஒரு செய்தி கிடைத்தால் அதை எல்லோரிடத்திலும் சொல்லி இன்பமடைந்து, அமைதியாக வாழும் நல்லவர்களை கண்டு வயிறெரிச்சல் கொண்டு அவர்களை இகழ்ந்துப்பேசி, பிறரிடத்து வம்பு பேசுவோர் செய்யும் இச்செயல் பறையை அறைந்து ஊருக்கு சொல்லுவதற்கு சமம். இச்செயல் கீழ்மையானது. செய்பவர்கள் கீழ்மையானவர்கள்.

பறையை அறைந்து சொல்லப்படும் செய்தியானது எல்லோருக்கும் கேட்கும். ஆனால் குசுகுசுவென வம்பு பேசுவது எல்லோருக்கும் கேட்காது என்று நினைப்பர். ஆனால் பறை அறைந்து சொல்லப்படும் செய்தி எப்படி எல்லோரிடத்திலும் சென்று அடைகிறதோ அதுப்போல வம்பாக பேசப்படும் செய்தி எல்லோரிடத்திலும் சென்றடைந்துவிடும். வம்பு பேசுவதின் வீர்யம் அறிந்தும் (அறியாமல் இருக்க வாய்ப்பு மிக மிக அபூர்வம்) வம்புபேசுவதை தொழிலாக வைத்து இருப்பவர்கள் கீழ்மையானவர்கள் கயவர்கள் என்கிறார் திருவள்ளுவர்.

”பெருமலை நாட பிறரறிய லாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் - அருமறையை
நெஞ்சில் சிறியார்க் குரைத்தல் பனையின்மேல்
பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று” (பழமொழி 91)

“.................சான்றோர்
கயவர்க் குரையார் மறை” (பழமொழி 229)


இதையே சுப்ரமணிய பாரதியும் கீழ்வரும் பாடலில் சொல்லுகிறார். வம்பு (சின்னஞ்சிறுகதைகள்) பேசுவதினால் பிறருடைய மனம் வாடும். இவர்கள் வெறும் கிழப்பருவம் எய்துவார்கள். ஞானத்தை எய்தமாட்டார்கள். இப்படி வம்பு பேசி பிறர் மனதை வாடச்செய்வது கொடுங்கூற்று என்கிறார் பாரதியார்.

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தாம் கேட்ட மறை உய்த்துப் பிறர்க்கு உரைக்கலான் - தாம் கேட்ட மறைகளை இடந்தோறும் தாங்கிக்கொண்டு சென்று பிறர்க்குச் சொல்லுதலான்; கயவர் அறை பறை அன்னர் - கயவர் அறையப்படும் பறையினை ஒப்பர். (மறை: வெளிப்படின் குற்றம் விளையும் என்று பிறரை மறைத்து ஒருவன் சொல்லிய சொல். பிறர், அம்மறைத்தற்குரியார். 'உய்த்து' என்றார், அவர்க்கு அது பெரும்பாரமாதல் நோக்கி. பறை ஒருவன் கையால் தன்னை அறிவித்ததொன்றனை இடந்தோறும் கொண்டு சென்று யாவரையும் அறிவிக்குமாகலான், இது தொழில் உவமம். இதனான் அவரது செறிவின்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
கயவர் அறையும் பறைபோல்வர்; தாங்கேட்ட மறைகளைப் பிறர்க்குக் கொண்டு சென்று அறிவித்தலான். இஃது அடக்கமில ரென்றது.

மு.வரதராசனார் உரை
கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை
தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

  ஏதேனும் ஒரு செய்தி இவரிடத்தில் கிடைத்திட்டால்
  எல்லோர்க்கும் அதைச் சொல்லி இன்பமதை அடைவார்கள்
  சூதாக வாழ்வார்கள் நல்லவர்கள் வாழ்வதனை
  சுகமதனைப் பார்த்தாலோ அவர் குறித்து இகழ்வார்கள்
  தோதாக பார்ப்பதற்கு மனிதரைப் போல் இருப்பார்கள்
  தொழில் எங்கும் நடிப்பதுவே அச்சம் இவர் குலச்சொத்து
  வேதனைகள் வரும் போது தங்களையே விற்றிடுவார்
  வெட்கம் மானம் சூடு இவர் விட்டு விட்ட நற் குணங்கள்

No comments:

Post a Comment