கருமத்தால் நாணுதல் நாணுந்

குறள் 1011
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
கருமம் - செயல்; வினைப்பயன்; தொழில்வேதசம்பந்தமானசடங்கு; இறுதிக்கடன்; செயப்படுபொருள்; வெம்மை; மும்மலங்களுள்ஒன்றாகியகன்மவிதி.

கருமத்தான் - செயலால்; வினைப்பயனால்

நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

நாணு - நாணம், வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

திரு - திருமகள்; செல்வம்; சிறப்பு; அழகு; பொலிவு; நல்வினை; தெய்வத்தன்மை; பாக்கியம்; மாங்கலியம்; பழங்காலத்தலையணிவகை; சோதிடங்கூறுவோன்; மகளிர்கொங்கைமேல்தோன்றும்வீற்றுத்தெய்வம்.

நுதல் - சொல்; நெற்றி; புருவம்; தலை; மேலிடம்.

திருநுதல் - அழகான நெற்றி

நல்லவர் - அறிஞர்; நல்லோர்; நண்பர்; பெண்கள்;

நாணு - நாணம், வெட்கம்; அறிவு; பயபக்தி; மானம்; தணிகை; கூச்சம்; மகடூஉக்குணம்நான்கனுள்ஒன்று

பிற - மற்றவை; ஓர்அசைச்சொல்.

முழுப்பொருள்
ஒவ்வாத செயல்களை (கருமங்களை) செய்தால் உயர்ந்தோர் பழிப்பார்கள். ஆதலால் ஒரு இழிவான கருமத்தை செய்யும் முன்பு அதனால் விளையக்கூடிய பழிக்கு அஞ்சி வெட்படுவது (மானத்தை காப்பாற்றிக்கொள்ள செய்யாதிருத்தல்) ஒருவித நாணமாகும். மற்றொன்று, ஒரு பெண்ணின் அழகிய நெற்றியில் பொலியும் கூச்சமும் நாணமாகும்.

எதற்கு இக்குறள் என்று சற்று யோசித்தால், எனக்கு தோன்றுவது - நாணம் என்பது இயற்கையாக மனதில் (அறிவில்) இருந்து வரும். ஒரு பெண்ணுக்கு நாணம் வரும் தருணம் அமையும். பெரும்பாலும் அதனை அவளை அறியாமலே வெளிப்படுத்துவாள். ஆனால் அதனை அறிந்துக்கொண்டு வெட்கத்தை அடக்குவோரும் உண்டு.  அதுப்போல இழிவான செயல் செய்யும் பொழுது நமது மனதிற்கு அது தவறு என்று இயல்பாக தெரியும். ஆனால் அதனை உள்வாங்கிக்கொள்ளும் நுண்ணறிவு நம்மிடம் இருக்க வேண்டும். இல்லை என்றால் நாம் அதனை எளிதாக கடந்து சென்றுவிடுவோம். அது தவறு.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பெண்ணென உற்ற பெரும்பழிக்கு நாணும்” (கம்ப.கைகேசிசிசூழ்வினை 15)

பரிமேலழகர் உரை
[அஃதாவது , மேற்சொல்லிய சால்பு பண்பு முதலிய குணங்களான் உயர்ந்தோர் தமக்கு ஒவ்வாத கருமங்களில் நாணுதல் உடையராந் தன்மை . அதிகார முறைமையும் இதனானே விளங்கும் .]

நாணுக் கருமத்தால் நாணுதல் - நன்மக்கள் நாணாவது இழந்த கருமங் காரணமாக நாணுதல்; பிற திரு நுதல் நல்லவர் நாணு - அஃதன்றி மனமொழிமெய்களது ஒடுக்கத்தான் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல, அழகிய நுதலினையுடைய குலமகளிர் நாண்கள். ('பிற குலமகளிர் நாண்' என்றதனான், ஏனையது 'நன்மக்கள் நாண்' என்பதும், 'நாணுதல்' என்றதனால் கருமத்தது இழிவும் பெற்றாம். 'திருநுதல் நல்லவர்' என்பது புகழ்ச்சிக் குறிப்பு. ஏதுப்பன்மை பற்றிப் 'பிற' என்றார். இனி, 'அற்றம் மறைத்தல் முதலியன பொதுமகளிர் நாணோடு ஒக்கும்' என்று உரைப்பாரும் உளர், அவர்க்கு நாண் கேடு பயக்கும் என விலக்கப்பட்டமையானும், அவர் பெயராற் கூறப்பட்டமையானும், அஃது உரையன்மை அறிக. இதனான் நாணினது இலக்கணம் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை 
தாம் செய்யும் வினையினாலே நாணுதல் நாணம். அஃதல்லாத நாணம் அழகிய நுதலினாலே நல்லாராகிய கணிகையர் நாணத்தோ டொக்கும். மேற்கூறிய நாணம் எத்தன்மைத் தென்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
தகாத செயல் காரணமாக நாணுவதே நாணமாகும், பெண்களுக்கு இயல்பான மற்ற நாணங்கள் வேறு வகையானவை.

சாலமன் பாப்பையா உரை
இழிவான செயல்களுக்கு வெட்கப்படுவதே அனைவர்க்கும் பொதுவான நாணம்; மற்றொன்று அழகிய நெற்றி கொண்ட பெண்களின் இயல்பான வெட்கம் ஆகும்.

No comments:

Post a Comment