அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

குறள் 361
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் 
தவாஅப் பிறப்பீனும் வித்து
[அறத்துப்பால், துறவறவியல், அவாவறுத்தல்]

பொருள்
அவா - ஆசை, எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம்; பெருவிருப்பம்; இறங்குகை.
என்ப - என்பது
எல்லா  - அனைத்து
உயிர்க்கும்  - உயிர்களுக்கும்
எஞ் ஞான்றும் - எக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.
தவா - தவாவினை tavā-viṉai   n. prob. தவு- + ஆneg. +. (அக. நி ) 1. Salvation, deliverance;முத்தி. 2. Hill, mountain; மலை  
அப் பிறப்பு  - உடனுக்குடனான பிறப்பு - தோற்றம்; உற்பத்தி; சாதி; தொடக்கம்; உடன்பிறந்தவர்; மகளிர்அணியும்தாலிவகை; ஒருவாய்பாடு; அச்சம்; நெருக்கம்; மயக்கம்.
ஈனும் - இயன்று தரும்
வித்து - மரஞ் செடி கொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை; விந்து; மரபுவழி; வழித்தோன்றல்; சாதனம்; காரணம்.

முழுப்பொருள்
அவா அல்லது ஆசை என்பது என்வென்றால் எல்லா உயிர்களுக்கும் எல்லா காலத்திலும் உடனுக்குடன் மறுபிறப்பு என்னும் துன்பத்தை ஓயாது கொடுப்பதற்கான விதை என்கிறார் திருவள்ளுவர்.

மறு பிறவி இருக்கிறாத என்று கேட்டால் எனக்கு தெரியாது. முந்தைய அதிகாரத்தில் "ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து" என்று கூறி இருப்பார் திருவள்ளுவர். அதாவது அடுத்தப் பிறவி என்றென்பது இருக்கிறதா போன்ற ஐயங்களில் இருந்து தெளிவு பேற்று மெய்யுணர்தல் ஆகும்.

ஆனால், என்னைப்பொருத்தமட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு பிறப்பே என்று சொல்லலாம். ஒவ்வொரு நாளும் 86400 விநாடிகள் கொண்ட கொடை. இந்த அவா இருந்தால் அது நம்முடைய ஒவ்வொரு நாளையும் அதன் பிடியில் வைத்துக்கொள்ளும். நாம் அவாவை நிறைவேற்றிக்கொள்ள சென்றுவிடுவோம். மெய்யுணர்தலில் நேரம் செல்விடமாட்டோம். மெய்யான இன்பங்களை அடையாமல் துன்பங்களில் ஆழ்ந்துவிடுவோம். ஆதலால் வீடு என்னும் பேறை அடைய முடியாது. வீடை அடையாவிட்டால் மறுபிறப்பிலும் துன்பப்படுவோம். உதாரணமாக இன்று ஒருவர் தான் ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார், வாங்குகிறார். அதற்கான கடனை அடைக்கிறார். பின்பு ஒரு காருக்கு ஆசைப்படுகிறார். அதற்கான கடனை அடைக்கிறார். முதலில் ஒரு வீடு வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். கொஞ்ச காலம் கழித்து சொந்தமாக ஒரு 2400 சதுர அடியில் இரண்டு தளங்கள் கொண்ட ஒரு வீட்டு கட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பொருள் மீதே ஆசைப்படுகிறார். அல்லது இன்று இதை சாப்பிட வேண்டும், நாளை அதை சாப்பிட வேண்டும் என்று சதா சர்வகாலமும் உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போரும் உண்டும்.  அதனால் தான் திருவள்ளுவர் அவா எல்லா துன்பங்களுக்கும் வித்து என்கிறார்.
மேலும் இப்படி புறவாழ்க்கைக்கே ஆசைப்பட்டுகொண்டு இருந்தால், ஒருவர் எப்படி அகவாழ்க்கையை வாழ்ந்து வீடு நோக்கிய பயணத்தை செய்ய முடியும்? 

மறுபிறப்பு என்பது அவ்வளவு கொடுமையான ஒன்றா? ஆம். பிறப்பு இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிக கடினமான எல்லையற்ற கடல்போன்றது என்று பஜகோவிந்தம் பாடலில் (”புனரபி ஜனனம் புனரபி மரணம், புனரபி ஜனனி ஜடரே சயனம், இஹ சம்சாரே பஹு துஸ்தாரே, க்ருபயா பாரே பாஹி முராரே ”என்று) ஆதி சங்கரர் கூறியுள்ளார்.

Bhaja Govindham  / பஜகோவிந்தம்
Snippet of the Hymm
Punarapi jananam punarapi maranam,
Punarapi janani jatare sayanam,
Iha samsaare khalu dusthare,
Krupayaa pare pahi murare.

Translation
Again and again one is born,
And again and again one dies,
And again and again one sleeps in the mother’s womb,
Help me to cross,
This limitless sea of Life,

Which is uncrossable, my Lord

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே

புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு
புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு
புனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது
க்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, முன்னும் பின்னும் வினைத்தொடர்பு அறுத்தார்க்கு நடுவுநின்ற உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களும் நின்றமையின் , வேதனை பற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள்மேல் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே? அந்நினைவும் அவிச்சை எனப் பிறவிக்கு வித்து ஆம் ஆகலின், அதனை இடைவிடாது மெய்ப்பொருள் உணர்வான் அறுத்தல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்]

எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர். (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கடகும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான், பிறப்பிற்கு அவா வித்து ஆதல்கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லாவுயிர்க்கும் எல்லா நாளுங் கேடில்லாத பிறப்பைக் கொடுக்கும் விதையாவது ஆசையென்று சொல்லுவர். இஃது ஆசை துன்பம் தருதலேயன்றிப் பிறப்பையும் தருமென்றது.

மு.வரதராசனார் உரை
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

No comments:

Post a Comment