உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண்

குறள் 261
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை 
அற்றே தவத்திற் குரு
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]

பொருள்
உற்ற - adj. part. devoted, trusty true. உற்ற சிநேகிதன், a trustworthy friend. உற்றமனிதன், a trustworthy person. உற்ற விசேஷம், உற்றசெய்தி, true report; உற்ற, rel. part. Uncommonly de voted, trusty.
உற்றது -நேர்ந்தது, நிகழ்ந்தசெயல்; உண்மை; இடுக்கண்.
இடுக்கண் - மலர்ந்த நோக்கமின்றிமையல் நோக்கம் படவரும் இரக்கம்; துன்பம் வறுமை
நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.
உற்றநோய் - உண்ணாது நோன்பிருந்து உடலை வருத்தி 
நோன்றல் - பொறுத்தல்; தள்ளல்; நிலைநிறுத்தல்; துறத்தல்; தவஞ்செய்தல்.
உயிர்க்கு - உயிர் - காற்று; உயிர்வளி; சீவன் ஆதன் ஓரறிவுயிர்முதலியஉயிரினம்; உயிரெழுத்து ஓசை ஒருநாழிகையில்4320-ல்ஒருகூறு; சன்மலக்கினம்
உறுகண் - துன்பம்; நோய்; வறுமை; அச்சம்.
செய்யாமை - செய்யாதிருத்தல்
அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை
அற்றேல் - அப்படியானால்.
அற்றே - அப்படியானால்
தவத்திற்கு - தவம் - பற்று நீங்கிய வழிபாடு; புண்ணியம்; இல்லறம்; கற்பு; தோத்திரம்; தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு; வெப்பம்; காட்டுத்தீ.
உரு - வடிவழகு; தெய்வத்திருமேனி; நிறம் அச்சம் அட்டை பலமுறைசொல்லுகை; பருமை தோணி உடல் எலுமிச்சை இசைப்பாடல்; நோய் உருவமுள்ளது; உளியாற்செய்தசிற்பவேலை; தாலிமுதலியவற்றில்கோக்கும்உரு; தன்மை அகலம்

முழுப்பொருள்
உண்ணாது உடலை வருத்தி பொறிகளும் புலன்களும் அடங்க நோன்பிருத்தலும் (ஏனெனில்? மெய்ப்புலன் விழையும் பொறிகள் சார்ந்த இன்பங்களையே நோய் என்று கொள்வதே சரி. அந்நோய்களிலிருந்து விடுபட நோன்பிருத்தலே தவத்தின் முதலும், இன்றியமையாததுமான வழி), பிற உயிர்களுக்கு (மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள்) துன்பம் செய்யாதிருத்தலும் தவம் (என்ற பற்று நீங்கிய வழிபாடு) என்பதிற்கு வடிவமாக (இலக்கணமாக) கூறப்படுகிறது.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
உயிர்நோய்செய் யாமை யுறுநோய் மறத்தல்
செயிர்நோய் பிறர் கண்செய் யாமை - செயிர்நோய்
விழைவு வெகுளி இவைவிடுவா னாயின்
இழிவன் றினிது தவம் (சிறுபஞ்ச 31)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, மனம் பொறி வழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல்,புலான் மறுத்து உயிர்கண்மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது ஆகலின், இது புலால் மறுத்தலின்பின் வைக்கப்பட்டது.)

தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.

மு.வரதராசனார் உரை
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.

சாலமன் பாப்பையா உரை
பிறரால் தனக்குச் செய்யப்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது, துன்பம் செய்தவர்க்கும் துன்பம் செய்யாதிருப்பது என்னும் இவ்வளவுதான், தவம் என்பதன் இலக்கணம்.

No comments:

Post a Comment