தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

குறள் 251
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் 
எங்ஙனம் ஆளும் அருள்.
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல்]

பொருள்
தன் - தன்னுடைய
ஊன் - ūṉ   s. flesh, தசை; 2. meat, மாமிசம்; 3. marrow, fat, நிணம்; 4. proud flesh over a sore; 5. the body, உடல்; இறைச்சி; கொழுப்பு; உடம்பு.
பெருக்கற்குத் - பெருக்கம் / - வளர்ச்சி; மிகுதி; செல்வம்; வெள்ளம்; நிறைவு; நீடிப்பு;  பெருத்தல்  - peru-   11 v. intr. cf. bṛh. [T.perugu, M. peruguga.] 1. To grow thick,large, stout; பருத்தல். 2. To become numberous; மிகுதல்.
தான் - அதற்காக
பிறிது - பிற உயிர்களின்
ஊன் - ūṉ   s. flesh, தசை; 2. meat, மாமிசம்; 3. marrow, fat, நிணம்; 4. proud flesh over a sore; 5. the body, உடல்; இறைச்சி; கொழுப்பு; உடம்பு.
உண்பான் - உணவாக உட்கொள்ளுபவன்
எங்ஙனம்  -e-ṅ-ṅaṉ-am   adv. id. +. 1.How, in what manner; எவ்வாறு எங்ஙன மறந்துவாழ்கேன் (திவ். திருமாலை, 23). 2. Where, to whatplace; எவ்விடம் சிறுவர்க ளெங்ஙனம் போயினார் (கந்தபு. தக்கன்மக. 52).
ஆளும்  - ஆளுகை, v. noun. Rule, govern ment, domination, authority.
அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை, ஏவல், s. Grace, mercy, kindness, favor, benevolence, கிருபை. 2. The act of giving, ஈகை. 3. Power, சத்தி. 4. (fig.) Per mission, command, கட்டளை. (p.)

முழுப்பொருள்
தன்னுடைய உடம்பு வளரவேண்டும், தன்னுடைய உடல் கட்டுடல் மேனியாக (கட்டு மஸ்தானமாக) வளரவேண்டும் என்பதற்காக ஈவு இரக்கம் இன்றி பிறிதொரு உயிரை கொன்று அவ்வுடலின் ஊனை ஒருவன் உண்பான் என்றால் அவனிடத்தில் பிற உயிர்கள் மீது எவ்வாறு இரக்கம் உள்ளவராக இருக்க முடியும் ? என்கிறார் திருவள்ளுவர்.

இனியவை நாற்பது, “ஊனைத்தின்று  ஊனைப் பெருக்காமை முன்னினிதே”. என்கிறது. இதையே இன்னா நாற்பது(5), “ஊனைத்தின்று ஊனைப் பெருக்கல் முன் இன்னா” என்கிறது. சிறுபஞ்சமூலம், “ஓர்த்துடம்பு பேருமென்றூனவாய் உண்ணானேல்” என்கிறது சிறுபஞ்சமூலம் (18). சமண இலக்கியமான சீவகசிந்தாமணியில் (!235), “ஊன்சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல்” என்று ஊன் உண்ணலை நரகத்தில் வைக்கும் செயலாகச் சொல்லுகிறது.

இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில், “ஊனூண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்!”உயிர் கொன்றுஉண்டு வாழும்நாள் செய்யன் மின்;” என்கிறார்.
வளையாபதி என்னும் பெருங்காப்பியத்திலிருந்து, (முழு காப்பியமும் கிடைக்கவில்லையாயினும்), பிற இலக்கியங்களிலும், அவற்றின் உரைகளிலும் காணப்படும் மேற்கோள் செய்யுள்களைத் தொகுத்து, செய்யப்பட்ட “புறப்பாடல் திரட்டு” என்ற நூலும் புலால் மறுத்தலை பல இடங்களில் வலியுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக இச்செய்யுளைப் பார்க்கலாம். “காது உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்
அவாவிலையில் உண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலை விலங்காய்ப் பொறாதுபிற ஊன்கொன்று
அவாவிலையில் விற்பானும் ஆண்டு அதுவே வேண்டுமால்.”

இதையும்விட, “அறவகை ஓரா விடக்கு மிசைவோர்”, என்று அறமுறைகளை ஆராய்ந்துணராமல் ஊன் தின்பவர், என்று புலால் உண்பவர்களச் சாடுகிறது.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
[அஃதாவது, ஊன் உண்டலை ஒழிதல். கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது.)

தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.).

மணக்குடவர் உரை
தன்னுடைம்பை வளர்த்ததற்குத் தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன் அருளுடையவனாவது மற்றியா தானோ?. ஊனுண்ண அருள்கெடுமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.

சாலமன் பாப்பையா உரை
தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?.

No comments:

Post a Comment