ஒழுக்கமும் வாய்மையும் நாணும்

குறள் 952
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
[பொருட்பால், குடியியல், குடிமை]

பொருள்
ஒழுக்கமும் - ஒழுக்கம் - நடை, முறைமை; நன்னடத்தை, ஆசாரம்; சீலம்; உலகம் ஓம்பிய நெறி; உயர்ச்சி; தன்மை; குலம்.

வாய்மையும் - வாய்மை - உண்மை; சொல்; தவறாச்சொல்; பௌத்தசமயஉண்மைகள்; வலி.

நாணும் - நாணம் - எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்
நாணால் - நாணத்தினால் - வெட்கபடவைக்கும் உணர்வால்

இம் மூன்றும் - இவை மூன்றும்

இழுக்கார் - இழுக்கு - குற்றம்; பொல்லாங்கு நிந்தை தாழ்வு மறதி வழுக்கு தவறு

குடிப் - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

பிறந்தார் - பிறந்தவர்கள்

முழுப்பொருள்
நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் அவச்சொல்லுக்கு அஞ்சி வெட்கபடுகின்ற செயல்களை செய்ய மாட்டார்கள். ஆதலால் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒழுக்கம், வாய்மை, நாணம் ஆகிய முன்றும் குறையும் எந்த ஒரு செயலையும் செய்ய வெட்கப்பட்டு செய்ய மாட்டார்கள்.

ஆக ஒரு குடும்பம் நல்ல குடும்பம் என ஆவது கல்வியினாலோ, பொருள் செல்வத்தினாலோ மட்டும் அல்ல. அவை ஒழுக்கம் (ஒழுக்கமுடைமை), வாய்மை (வாய்மை), நாணம் (நாணுடைமை) ஆகிய பண்புகளின் அடிப்படையில் ஆகும்.

ஒழுக்கம் (ஒழுக்கமுடைமை), வாய்மை (வாய்மை), நாணம் (நாணுடைமை), முறையே, மெய் மொழி மனம் என்னும் முக்கரணம் பற்றியன.

நாலடியார்ப் 142 பாடலொன்று, பெருந்தன்மை, மென்மை, கடைப்பிடித்தல் என்னும் இவை மூன்றும் உயர்வு பொருந்திய குடியிற் பிறந்தவர்க்கல்லது மிக்க செல்வம் உண்டான காலத்தும் பிறர்க்கு உண்டாகமாட்டா என்று கூறுகிறது. அப்பாடல்:

சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவைமூன்றும்
வான்றோய் குடிப்பிறந்தார்க் கல்லது – வான்றோயும்
மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம்
எய்தியக் கண்ணும் பிறர்க்கு. (நாலடி.142)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். (ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குடிப்பிறந்தார்- நல்ல குடியிற் பிறந்தவர்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்முன்றும் இழுக்கார்- ஒழுக்கம் மெய்ம்மை பழிநாணல் ஆகிய முத்திறத்தும் ஒருபோதும் தவறார்.

ஒழுக்கம் முதலிய முன்றும், முறையே, மெய் மொழி மனம் என்னும் முக்கரணம் பற்றியன.

மணக்குடவர் உரை
ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.

மு.வரதராசனார் உரை
உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் ஒழுக்கம், உண்மை, நாணம் என்னும் இம்மூன்றிலிருந்தும் விலகமாட்டார்.

No comments:

Post a Comment