வரைவிலா மாணிழையார் மென்தோள்

குறள் 919
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
[பொருட்பால், நட்பியல், வரைவின்மகளிர்]

பொருள்
வரைவு - அளவு; எல்லை; எழுதுகை; சித்திரமெழுதுகை; ஏற்றத்தாழ்வுநோக்குகை; திருமணம்; நீக்கம்; பிரிவு.
இலா - இல்லாத / இல்லாமல்
மாண் - மாட்சிமை; மடங்கு; மாணவன்; பிரமசாரி; குள்ளமானவர்.

இழைதல் - நூற்கப்படுதல்; உராய்தல் சோறுமுதலியனகுழைதல்; கூடுதல் நெருங்கிப்பழகுதல்; உள்நெகிழ்தல்; மூச்சுச்சிறுகுதல்; குறுமூச்சுவிடுதல்; மனம்பொருந்துதல்
இழையார் - நெருங்கிபழக மாட்டார்கள்; கூட மாட்டார்கள்; புணர மாட்டர்கள்
மென் தோள்- மெல்லிய தோள்கள்
புரை - குற்றம்; உட்டுளைப்பொருள்; குரல்வளை; விளக்குமாடம்; உள்ளோடும்புண்; கண்ணோய்வகை; பொய்; களவு; இலேசு; மடிப்பு; கூறுபாடு; வீடு; ஆசிரமம்; தேவாலயம்; அறை; பெட்டியின்அறை; மாட்டுத்தொழுவம்; இடம்; ஏகதேசம்; பூமி; பழைமை:ஒப்பு; உயர்ச்சி; பெருமை.
இலாப் - இல்லாத / இல்லாமல்
பூரியர்கள் - பூரியர் - கீழ்மக்கள்; கொடியவர்.
ஆழும் - ஆழும்பாழுமாய் - சீர்கேடாய்; வீணாக.
அளறு - குழைசேறு; குழம்பு காவிக்கல் நீர் நரகம்

முழுப்பொருள்
வரையேரு ஏதும் இல்லாமல் ஒழுக்கம் அறம் ஏதும் இல்லாமல் மாட்சிமைக்கு தீங்கு விளைவிக்கின்ற செயல்களை செய்வார்கள் விலைமாதர்கள் (பாலியல் தொழிலாளர்கள்). இவர்கள் எந்த ஒரு பேதமும் இன்றி கிடைக்கும் பொருளுக்காக தங்கள் உடலையும் உடலுறவையும் விற்று புணர்ச்சி செய்வர். இத்தகையவர்களின் மெல்லிய தோள்களை தழுவுவது என்பது பெருமை இல்லாத (வீடு பேறு தனை நாடாத, தேவலோகதை நாடாத, உயர்ச்சியை விரும்பாத) கீழ்மக்கள் (கொடியவர்கள்) சீர்கெடும் சேறு நிறைந்த சகதியாகும் (நரகமாகும்).

மேலும் அஷோக் உரை

ஒப்புமை
“கைக்கரி மதத்தவிலை மாதர்கலை யல்குல்
புக்கவரை ஒத்தன புனற்சிறைகள் ஏறா” (கம்ப.வரைக்காட்சி.26)

பரிமேலழகர் உரை
வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது, விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம். (உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வரைவு இலா மாண் இழையார் மெல்தோள்- உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் வேறுபாடு பற்றி ஒருவரையும் விலக்காது பொருள் கொடுத்தார் யாவரையுந் தழுவும் விலைமகளிரின் மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு-அக்குற்றத்தை யறியும் உயர்வில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகாம்.

'மாணிழையார்' சிறந்த அணிகல மணிந்த பெண்டிர்.இதனால் ஒப்பனையும் 'மென்றோள்' என்பதனால் உருவ அழகும் அறியப்படும். "புரையுயர் வாகும்" (தொல்.785), அளறு போல் துன்பந் தருவதை 'அளறு' என்றும் , விலைமகளிரொடு கூடின கீழ்மக்கள் அவரை ஒருகாலும் விடார் என்பது தோன்ற 'ஆழும்' என்றும், கூறினர்.

மணக்குடவர் உரை
முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். இஃது இழிந்தார் சார்வரென்றது.

மு.வரதராசனார் உரை
ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

சாலமன் பாப்பையா உரை
வேறுபாடு கருதாது பொருள் தருவார் எவரையும் தழுவும் பாலியல் தொழிலாளரின் மெல்லிய தோள்கள், அறிவற்ற கீழ்மக்கள் புகுந்து மூழ்கும் நரகம் ஆகும்.

No comments:

Post a Comment