இன்பத்துள் இன்பம் பயக்கும்

குறள் 854
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
[பொருட்பால், நட்பியல், இகல் ]

பொருள்
இன்பத்துள் - இன்பம் எனப்படுவதில் எது இன்பம் என்றால்
இன்பம் - மனமகிழ்ச்சி; இனிமை ஒன்பான்சுவைகளுள்ஒன்று; சிற்றின்பம், காமம் திருமணம் நூற்பயன்களுள்ஒன்று.
பயக்கும்- உருவாகும்
இகல் - பகை; போர் வலிமை சிக்கு அளவு புலவி
என்னும் - என்கிற
துன்பத்துள் - துன்பங்களில் மிகுந்த துன்பம்
துன்பம் - மனவருத்தம்; மெய்வருத்தம்; நோய்; கெடுதி; வறுமை.
கெடின் - கேடு

முழுப்பொருள்
ஒரு மனிதனுக்கு துன்பங்கள் பல வரும். ஒவ்வொரு துன்பமும் ஒரே அளவு துன்பத்தை தராது. ஆனால் மனவேறுபாட்டால், பகையால் வரும் துன்பமே மிக அதிகம் (உதாரணமாக இந்திய பாகிஸ்தானுக்கு இடையே யான பகை இரு நாட்டிற்கு 1947 ஆண்டு முதல் இன்று வரை 70 ஆண்டுகளாக மிகுந்த துன்பத்தை தருகிறது) . அத்தகைய (மன) பகை என்னும் துன்பத்தை அழித்தால் (குழித் தோண்டி புதைத்தால்) இன்பங்களில் எல்லாவற்றிலும் இன்பத்தை அது உருவாக்கும்.

ஆகவே நாம் மன வேறுபாடு, பகை என்னும் உணர்வுகளை மனதில் வளர்த்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும். இத்தகைய எண்ணங்கள் நம் மனதில் காழ்ப்பை உருவாக்கும், நமது ஆற்றலை குறைக்கும். இவ்வாற்றலை வைத்து நாம் ஆக்கப்பூர்வமான செயல்கள் பலவற்றை செய்யலாம். அதுவே இன்பம் பயக்கும்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும். (துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைதலான் யாவர்க்கும் எளியனாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின்- மாறுபாடு என்று சொல்லப்படும் தலையாய துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும்- அவ்வில்லாமை அவனுக்குத் தலையாய இன்பத்தை விளைக்கும்.

'துன்பத்துள் துன்பம்' எல்லார்க்கும் பொல்லாதவனாய் எங்கும் எப்போதும் துன்புறுதல். 'இன்பத்துள் இன்பம்' எல்லார்க்கும் நல்லவனாய் எங்கும் எப்போதும் இன்புறுதல்.

மணக்குடவர் உரை
இன்பத்தின் மிக்க இன்பம் எய்தும்: மாறுபாடாகிய துன்பத்தின் மிக்க துன்பம் கெடுமாயின். எல்லா இன்பத்தின்மிக்க வீடுபேற்றின்பம் எய்தும் என்றவாறு.

மு.வரதராசனார் உரை
இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது அவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தை கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை
துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகக் கொடிதான மனவேறுபாடு எனும் துன்பம், ஒருவனது உள்ளத்துள் இல்லை என்றால், அது அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றிலும் சிறந்த இன்பத்தைத் தரும்.

No comments:

Post a Comment