பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை

குறள் 252
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி 
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு
[அறத்துப்பால், துறவறவியல், புலான்மறுத்தல் ]

பொருள்
பொருள் - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

ஆட்சி -  உரிமை; ஆளுகை அதிகாரம் ஆன்றோர்வழக்கு; அனுபவம் தாயமுறையில்வந்தஉரிமை; மக்கள்அணையலாகாதெனக்கட்டளையிடப்பட்டஇடம்; கோள்நிலை; கிழமை

போற்றுதல் - வணங்குதல்; துதித்தல்; பாதுகாத்தல்; வளர்த்தல்; பரிகரித்தல்; கடைப்பிடித்தல்; உபசரித்தல்; விரும்புதல்; கருதுதல்; மனத்துக்கொள்ளுதல்; கூட்டுதல்.
போற்றாதார்க்கு  - பாதுகாத்தாருக்கு, வளர்க்காதாருக்கு

இல்லை - இருக்காது, தங்காது

அருள்  - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

ஆங்கு - அவ்விடம்; அக்காலத்தில்; அப்படி ஓர்உவமஉருபு; ஏழன்உருபு; ஓர்அசைநிலை
இல்லை -  நிலைத்து தங்காது, இருக்காது

ஊன் -  தசை, இறைச்சி; கொழுப்பு; உடம்பு

தின்பவர்க்கு  -  உட்க்கொள்ளுபவர்

முழுப்பொருள்
இவ்வுலகில் பொருட்செல்வம் என்பது மிகுந்து மதிக்கபடுவதாக இருக்கிறது. இந்த சமுதாயத்தில் வாழ பொருளும் தேவை படுகிறது. பொருள் இல்லாமல் வாழ்வது என்றால் அது துறவறம் பூண்டால் மட்டுமே முடியும். ஆனால் இல்லற வாழ்வில் பொன்னும் பொருளும் மிகவும் முக்கியம். ஆனால் அப்பொன்னையும் பொருளையும் ஒருவர் வணங்கவில்லை என்றால், மதிக்கவில்லை என்றால், காக்கவில்லை என்றால், அதனை வளர்க்கவில்லை என்றால் பொருள் செலவு ஆகும். ஆதலால் பொன் தங்காது. அதனால் தான் திருவள்ளுவர் சொல்கிறார் பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை என்று.

அதுபோல வாழ்வில் நல்விணையால் ஒருவர் பெருவது அருள் ஆகும். ஆனால் ஒருவர் புலாலை தின்பதால் அவருக்கு அந்த அருள் நிலைக்காமல் நீங்கி விடும். ஆதலால் மாமிசம் தின்பதால் ஒருவர் பெற்ற அருளும் செலவாகி கடைசியில் ஒன்று இல்லாமல் ஆகிவிடும்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”பொருள்தனைப் போற்றிவாழ்” (ஆத்திசூடி)

பரிமேலழகர் உரை
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை - அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை. (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-பொருளைக் கையாளுதல் அதைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அதுபோல அருளைக்கையாளுதல் ஊன் உண்பவர்க்கு இல்லை.

ஊனுண்பவர்க்கு அருளில்லை யென்பது இங்கு முடிந்த முடிபாகக் கூறப்பட்டது. இம் முடிவிற்கு முந்தின குறள் ஏதுவாம்.

மணக்குடவர் உரை
பொருளினை யாளுதல் அதனைக் காக்கமாட்டாதார்க்கு இல்லை. அதுபோல அருளினை யாளுதல் ஊன் தின்பவர்க்கு இல்லை. இஃது ஊனுண்ண அருட்கேடு வருமென்றது.

மு.வரதராசனார் உரை
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை

பொருள்: பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை-செல்வத்தை (ஈட்டி) ஆளுந்தன்மை (அதனைப்) பேணாதவர்க்கு இல்லை ; ஆங்கு- அதுபோல, அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை-அருளை (ஈட்டி) ஆளுந்தன்மை புலால் உண்பவர்க்கு இல்லை.

கருத்து: புலால் உண்பவர்பால் அருள் நிற்றல் இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போ னன்றூக்கா தொன்ற
னுடல்சுவை யுண்டார் மனம். (223)

No comments:

Post a Comment