வறியார்க்கொன்று ஈவதே ஈகை

குறள் 221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
[ அறத்துப்பால், இல்லறவியல், ஈகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
வறிஞர் - வறியோர், வறுமை, வறிஞோர்
வறியார்க்கு ஒன்று -  வறுமையில் வாடுகின்ற ஒருவருக்கு
ஈவதே -  கொடுத்தல்; வறியவருக்குத்தருதல்; 
ஈகை - கொடை; பொன் கற்பகம் இண்டு புலிதொடக்கி காடை காற்று மேகம் கற்பகமரம்; இல்லாமை ஈதல் கொடுத்தல்
மற்று எல்லாம் - மற்ற கொடுத்தல் எல்லாம்
குறியெதிர்ப்பை - அளவு குறித்து வாங்கி அவ்வாறே திருப்பிக் கொடுக்கும் பொருள்
நீரது - சலம்,இரசம்,மூத்திரம்,குணம்,நிலை    
உடைத்து -  உடையது

முழுப்பொருள்
இவ்வுலகில் இன்று எல்லாமே ஒரு கணக்கிலேயே செய்யப்படுகிறது. அது வேதனைக்கூறியது. எல்லாமே ஒரு பிரதிபலனை எதிர்ப்பார்த்தே செய்யப்படுகிறது.  அது போலவே இன்று பிறருக்கு உதவுவது, கொடை அளிப்பது ஒர் தர்மசெயலாக நினைத்து அதனால் வரும் புண்ணியம் என்ற பலனை எதிர் நோக்கி செய்கிறார்கள். உதாரணமாக, ஒரு வாரம் முன்பு எனது தோழியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவள் சொன்னாள் எனது கணவர் அவ்வப்போது மாற்றம், அகரம் போன்ற தொண்டு நிறுவனங்களுக்கு ஏதாவது பணம் செலுத்துவார். ஏன் என்றால்? நம்ம எவ்வளவோ பாவம் செய்கிறோம். அதனை கழிப்பதாக எண்ணி இந்த மாதிரி நிறைய செய்வார்.

ஆனால் திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்றால் வறுமையில் வாழும் ஒருவருக்கு கொடை அளிப்பதே கொடை. கைமாறு எதிர்பாராமல், புண்ணியம் எதிர்பாராமல் கொடை அளிப்பதே கொடை. மற்றது எல்லாம், மற்றவருக்கு உதவுவது எல்லாம் கொடையே அல்ல. மற்றவை எல்லாம் அலுவகங்கலில் வரவு செலவு கணக்கு பார்த்து செய்யபடும் செயல்களை போன்ற குணம் உடையது.

நாம் இங்கே பார்க்க வேண்டியவார்த்தை குறியெதிர்ப்பை. மற்றெல்லாம் ஈகையே அல்ல என்று திருவள்ளுவர் கூறி இருக்கலாம். ஆனால் அவர் அதனை ஒரு வரவு-செலவு போன்ற ஒன்றோ ஒப்பிட்டு அதனுடைய குணத்தை போட்டு உடைக்கிறார்.  

மேலும்: அஷோக் உரை
 
குரு நித்ய சைதன்ய யதியின் யதி:தத்துவத்தில் கனிதல் என்ற புத்தகத்தில் “ப்ரக்ஞையின் நதியில்” என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட வாரு வறுமை, பசி ஆகியவற்றைப் பற்றி வருகிறது
பகிர்தல்

எங்கள் ரயில் முக்கிய ஸ்டேஷனில் வந்து நின்ற பொழுது உண்ணுவதற்காக இரண்டு உணவு பொட்டலங்களை வாங்கினோம். குரு (நடராஜ குரு) தன் பொட்டலத்தை பிரித்து முதல் கவளத்தை கையில் எடுத்த பொழுது, ஜன்னலின் வெளியே ஏழு அல்லது எட்டு வயது நிரம்பிய சிறுவன் கையை நீட்டி யாசித்தான். குரு அந்த சோற்றுருண்டையை அவனிடம் கொடுத்தார். அவன் அவசரமாக அதை முழுங்கிவிட்டு குரு இரண்டாவது உருண்டையை சாப்பிடுவதற்கு முன்பே மறுபடியும் கையை நீட்டினான்.

எனக்கு அது எரிச்சலூட்டியது. நான் அந்த பிள்ளையை தள்ளி விலக்கி விட நினைத்தேன். அனால் குரு நான் அப்படி செய்வதை தடுத்தார். அவர் இரண்டாவது உருண்டையை தான் சாப்பிட்டு விட்டு மூன்றாவது உருண்டையை அந்த சிறுவனுக்குக் கொடுத்தார்.
அவர் திரும்பி என்னைப் பார்த்து சொன்னார், “மனிதர்கள் பிச்சைக்காரர்களால் எரிச்சலடைவார்கள் என எனக்குத் தெரியும். வறுமை மோசமானது அனால் அது ஒரு குற்றம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் அவனால் முடிந்த அளவிற்கு வாழ முயற்சிக்கிறான். நீ இந்தியாவில் காண்பது மேலை நாடுகளில் நடக்க சாத்தியமேயில்லை. இந்த சிறுவன் நமக்கு முற்றிலும் அறிமுகமற்றவன், ஆனால் மற்றவர்களின் அன்பின் மீதும், கருணையின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். ஒரு மனிதன் மீது மற்றொரு மனிதன் வைத்திருக்கும் நம்பிக்கையே அவனை நம் முன் கைநீட்ட வைக்கிறது. உனக்கு இந்த காட்சியை கண்டு கண்களில் நீர் வரவேண்டும். இந்த பரஸ்பர பகிர்தலும் அடையாளப்படுத்துதலும் மேலை சமூகங்களில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன.”

“வறுமை ஒழிப்பதையும், உதவி தேடி நிற்கும் மனிதரின் நிலையை புரிந்து கொள்வதையும் குழப்பிக் கொள்ளாதே. முதல் பிரச்சனையை எடுத்துக் கொள்ள விரும்பினால் நீ மொத்தமாக உலக பொருளாதாரத்தை சரிப்படுத்த வேண்டியிருக்கும். உன்னால் முடிந்தால் போய் அதைச் செய். ஆனால் இரண்டாவது பிரச்சனைக்கு உடனடியான தீர்வு தேவை. அதற்காக உன் மகிழ்ச்சியை துறக்க வேண்டாம், உனக்கு இருப்பதை பகிர்ந்தால் மட்டும் போதும். உன்னுடைய மகிழ்ச்சி மற்றவருடைய மகிழ்ச்சியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.”

 

ஒப்புமை
”ஆற்றுத லென்பதொன் றலந்தவர்க் குதவுதல்” (கலி 133:6)
“வறுமையுற்ற எங்களுக்கு ஒன்றை இடுவோரன்றோ பயன் கருதாது
பிறர்க்கு இடுமவர்களாவார்” (புறநா 136)
“வறுமை நோக் கின்றவன் கைவண் மையே” (உரை 141:15)
”ஏற்றகை மாற்றாமை யென்னானும் தாம்வரையா
தாற்றாதார்க் கீவதா மாண்கடன்” (நாலடி 98)

“நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி யோர்க்கும்” (புறநா 163:4)
“குறித்துமா றெதிர்ப்பை பெறாமையின்” (புறநா 333.11)
“கூற்றுங் குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே” (முத்தொள்ளாயிரம்)

பரிமேலழகர் உரை
[அஃதாவது, வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல். இது மறுமை நோக்கியது ஆகலின், இம்மை நோக்கிய ஒப்புரவு அறிதலின் பின் வைக்கப்பட்டது.)

வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - ஒரு பொருளும் இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக் கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - அஃதொழிந்த எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும் நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன: வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக் கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும் தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து' என்றார். இதனால் ஈகையது இலக்கணம் கூறப்பட்டது.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச் செயலாம்; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - மற்றக் கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம்.

குறியெதிர்ப்பாவது அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறுங் கடன். நீரது என்பதில் அது என்பது முதனிலைப் பொருளீறு. "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே".(928) என்னும் தொல்காப்பிய நெறிப்படி, ஈகை என்னும் சொல் சிறப்பாகத் தாழ்ந்தோர்க்கு ஈதலைக் குறிக்கும்.

மணக்குடவர் உரை
ஈகையாவது இல்லாதார்க்கு யாதானும் ஒன்றைக் கொடுத்தல்; இஃதொழிந்த கொடையெல்லாம் குறியெதிர்ப்பைக் கொடுத்த நீர்மையாதலையுடைத்து. இது கொடுக்குங்கால் இல்லார்க்குக் கொடுக்கவேண்டுமென்றது.

மு.வரதராசனார் உரை
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை
ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை; பிற எல்லாம் கொடுத்ததைத் திரும்பப் பெறும் நோக்கம் உடையதே.

பொருள்: வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - (பொருள்) இல்லாதார்க்கு (அவர் வேண்டுவது) ஒன்றை ஈதலே ஈகை; மற்று எல்லாம் குறியயதிர்ப்பை நீரது உடைத்து - ஏனையோர்க்கு ஈதலெல்லாம் குறியயதிர்ப்பையின் தன்மையை யுடைத்து.

அகலம்: குறியயதிர்ப்பை - ஒரு பொருளைக் கொள்ளக் குறித்து அதற்கு எதிராகக் கொடுப்பது. அஃதாவது, பண்டமாற்று. ‘நிரப்பிடும்பை மிக்கார்க் குதவவொன் றீதல், சுரத்திடைப் பெய்த பெயல்’ - பழமொழி நானூறு. ‘ஏற்றகை மாற்றாமை யயன்னானுந் தாம் வரையார், ஆற்றாதார்க் கீவதா மாண்கடன் - ஆற்றின், மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதல், பொலிகட னென்னும் பெயர்த்து’- நாலடியார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.

கருத்து: வறியார்க்கு ஈவதே ஈகை

English Meaning - As I taught a kid - Rajesh
Charity is giving to the poor (helping the poor). All else have the quality of anticipating return. Return here is not just the return we expect from the poor. Things such as punya (புண்ணியம்), favors, returns done for favors done to us should not come to mind while giving to the poor. Guru Nityachaitanya Yati says that one some is begging for alms it means that one has trust on humanity that it would eradicate his hunger. So, it is the duty of humanity to feed him. One has to two choices 1) Eradicate poverty in the world (which is very difficult for one person to accomplish) or 2) eradicate the hunger of the need person around him (is more pragmatic).

Questions that I ask to the kid
What is charity?
Is helping a non-poor charity?
When you anticipate a return is it charity?
Can you eradicate poverty in this world? What you can do about it?

No comments:

Post a Comment