ஊடலில் தோற்றவர் வென்றார்

குறள் 1327
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
[காமத்துப்பால், கற்பியல், ஊடலுவகை]

பொருள்
ஊடலின் - ஊடல் - ஊடுதல், தலைவன் தலைவியருள் உண்டாகும் பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

தோற்றவர் - தோற்றல் - தோன்றுகை; வலிமை; புகழ்; தோல்வி; வீண்எண்ணம்; வெற்றியின்மை

வென்றார் - வெற்றி - வென்றி; வாகைசூடுதல், வெல்-. Victory, success,conquest, triumph; செயம்.

அது - அஃதானது

மன்னும் - மன் - மன்னும் - பெரும்பான்மையும், ஓர்இடைச்சொல்.
மன்னு-தல் - maṉṉu-   5 v. intr. 1. To bepermanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2.To remain long; to stay; தங்குதல். உத்திரைவயிற்றின் மன்னிய குழவி (பாகவத. 1, பரிட்சத்து

கூடலின் - மதுரை; பொருந்துகை; புணர்தல்; ஆறுகள்கூடுமிடம்; தேடல்; தலைவனைப்பிரிந்ததலைவிஅவன்வரும்நிமித்தமறியத்தரையில்சுழிக்கும்சுழிக்குறி:அடர்த்தியானதோப்பு.

காணப்படும் - உணரலாம்

முழுப்பொருள்
ஊடல் என்பது தலைவன் தலைவியின் இடையில் உண்டாகும் ஒரு பொய்யான பிணக்கு. பிணக்கு உள்ள காலங்களில் ஒருவரை ஒருவர் வெறுப்பர். யார் விட்டுக்கொடுப்பது என்று சண்டை வரும். எந்த ஒரு சண்டையிலும் ஒருவர் தானே வெற்றி பெற முடியும். ஆதலால் மற்றொருவர் தோல்வியடைவர்.

தோல்வியடைந்தவர் தோல்வியில் துவண்டு இருப்பார். ஆனால் வெற்றி பெற்றவரோ சிறிது நேரம் சந்தோஷமாய் இருந்தாலும் தோல்வியடைந்தவரை கண்டு வருத்தம் கொள்வார். என்னால் தானே எனது தலையாய காதலுக்கு பாத்திரமானவர் துவண்டுள்ளார் என்று தன்னை வெறுப்பர். இந்த நிலைமை மாற்றுவதற்காக இருவரும் இரவில் கூடுவர். இரவு புணரும் பொழுது தோல்வியடைந்தவரின் அகம் உணரும் இந்த கோபம் எல்லாம் பொய் என்று. ஆதலால் இவையெல்லாம் தோல்வியல்ல என்று. கூடலில் மகிழ்ச்சி அடைவதனால் அவர் இறுதியில் வெற்றி பெற்றவர் ஆகிறார். இதுவே பெரும்பான்மையாக நடக்கும் [சில சமயம் அப்படி நடக்காமலும் போகலாம்]

ஒப்புமை
”தோற்றாரே வெல்வர் துணைமிசையார் கோட்டியானை
ஏற்றுக் கழல்தொடியார் மிக்காரை யாவரைவர்
போற்றளி கூடல் கரி” (இன்னிலை 29)

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(இதுவுமது)
ஊடலில் தோற்றவர் வென்றார் - ஊடலில் தோற்ற மகளிர் வென்றவராவர்; அது மன்னும் கூடலிற் காணப்படும்- அவ்வெற்றி மிகுதியும் பின்னர்ப் புணர்ச்சிக்கண் அவரால் அறியப்படும்.

தோற்றவர் ஊடலைக் கடைப்பிடிக்காது இடையில் விட்டு விட்டவர். அவர் கலவிக்கண் பேரின்பம் பெறுதலால் வென்றாராயினர். 'மன்' மிகுதிப் பொருளது.தலைமகன் கலவியால் பேரின்பம் பேறும்போதே தலைமகளும் பெறுதல் கண்டானாதலாலும், அவள் ஊடல் நீங்கிய பொழுது ஒருவகைத் தோல்வி மனப்பான்மை கொண்டிருந்ததனாலும் , அவளைப் பாராட்டி ஊக்குமுகமாகத் 'தோற்றவர் வென்றார்' என்றான். ஊடல் ஆடவருக்கின்மையின், தலைமகன் ஊடலில் தோற்றானென்று கூறுவது பெருந்திணையாகுமேயன்றி அன்பினைந்திணையாகாதென அறிக. அடுத்த குறளையும் பார்க்க.

மணக்குடவர் உரை
ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.

மு.வரதராசனார் உரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment