உப்பமைந் தற்றால் புலவி

குறள் 1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்.
[காமத்துப்பால், கற்பியல், புலவி]

பொருள்
உப்பு - உவர்ப்பு; உவர்ப்புள்ளபொருள்; உவர்க்கடல், இனிமை, பெண்கள்விளையாட்டு; மணற்குவியல்; அன்பு

அமைந்து -  அமைதல் - உண்டாதல்; தகுதியாதல்; பொருந்தல் அடங்குதல் நிறைதல் உடன்படுதல் முடிதல்
அற்று - aṟṟu   அன்-று. n. One of suchquality, impers. sing.; அத்தன்மையது. (கந்தபு.உருத்திரர்கே. 6.)--v. Is like, of the same kind,impers. sing. finite appellative verb; அதுபோன்றது.--part. An adverbial word of comparison; ஒர் உவமவுருபு (தொல். பொ 286, உரை )

அமைந்தற்றால் - உணவின் அளவிற்கேற்ப / சுவைக்கேற்ப அமைவது போன்றது

புலவி - ஊடல்; வெறுப்பு; பிணக்கு
அது - அதானது
சிறிது - சிறிய அளவு,சிறுமை, சின்ன
மிக்க - மிகுந்த; உயர்ந்த.
மிக்கற்றால்
நீள - நெடுந் தொலைவாக; நெடுங் காலமாக; வெகு தொலைவில்.
விடல் - முற்றும் நீங்குகை (Leaving;renunciation) ; ஊற்றுகை; குற்றம்.

முழுப்பொருள்
நாம் அன்றாடும் வாழ்வதற்கு உணவை உண்ணுகிறோம். உணவுகளில் பல சுவைகள் உள்ளன. பல நாடுகளில் பல உணவுவகைகள் இருக்கின்றன. பல பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின்றன. பல மசாலா சாமான்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால் (நான் அறிந்த வரையில்) உப்பு என்பது எல்லா நாடுகளிலும் எல்லா மக்களாலும் உணவில் பொதுவாக சேர்த்துக்கொள்ளப்படும்  ஒரு பொருள். சுவையற்று இருக்கும் உணவிற்கு சிறிது உப்பு சேர்ப்பதனால் உணவில் சுவை கூடுகிறது. அவரவர் சுவைக்கேற்ப உணவில் உப்பின் அளவு மாறு படும். ஆனால் பொதுவாக யாரும் ஒரு அளவிற்கு மேல் உப்பை சேர்க்க மாட்டார்கள். ஏன் என்றால் உப்பு கரிக்க துவங்கிவிடும். உவர்ப்பான சுவையினை நமது நாக்கு ஏற்றுக்கொள்ளாது.

ஆதலால் உப்பினை சிறிது அளவே சேர்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் அதிகம் ஆனாலும் உணவு உவர்ப்பாகிவிடும். உணவின் நற்சுவைக்கு தேவையான சிறிதளவு உப்பைப் போலவே காதல் வாழ்க்கை சுவைக்க காதலர்களுக்கு நடுவே சிற்சில பிணக்குகள் (ஊடல்) விளையாட்டுக்கள் இருக்கலாம். இந்த ஊடல் முடிந்ததும் கூடலில் வரும் இன்பத்தில் ஊடலின் சிறப்பை சுவைக்கலாம். [குறல் 1325 தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. குறள் 1326 - உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. குறள் 1330 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப்]  ஆனால் இந்த பிணக்குகள் சிறிதுக்காலம் மட்டுமே நீடிக்க வேண்டும். நெடுந்நேரம் நீடித்தால் அது வாழ்க்கைக்கு உவர்ப்பினை கொடுக்கும். சுவை குறையும், காதல் குறையும்.

மேலும் அஷோக்  உரை

பரிமேலழகர் உரை
(புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவள் சொல்லியது.) புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும். (நீள விடல் - அளவறிந்துணராது கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல். 'சிறிது நீள விடலாகாது' என்றாள், நேர்விக்கின்றாளாகலின். 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கலவி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.).

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
(புலவி தீர்ந்து வாயில் நேரும்வகை தோழி சொல்லியது.)

புலவி உப்பு அமைந்த அற்று -புலவி கலவி இன்பஞ் செய்தற்கு வேண்டிய அளவாயிருத்தல்; உப்புச் சமைத்தவுணவு இன்சுவையாதற்கு வேண்டும் அளவினதாயிருத்தல் போலும்;சிறிது நீள விடல் அது மிக்க அற்று - இனி, அப்புலவியை அவ்வளவினுஞ் சிறிது மிக விடுதல் அவ்வுப்பு அளவிற்கு மிஞ்சினாற் போலும்.

பழகப் பழகப் பாலும் புளிப்பதுபோல, நாள்தொறும் நுகர்ந்து வரும் கலவியின்பம் நாளடைவிற் சுவைகுன்றியபோது அதற்குச் சுவையூட்டுதலின், புலவியை உப்பு என்றாள். ஆயினும் உப்பு மிக்கவிடத்து உணவுச்சுவை கெட்டாற்போல், புலவி அளவிற்குமேல் நீண்டவிடத்துக் கலவியின்பங்கெடும் என்றவாறாம். புலவியை நீளவிடுதலாவது, கலவிமேலெழுந்த குறிப்பும் ஆசையும் அடங்குமளவு புலத்தல் , வாயில் நேர்விக்கின்றாளாதலின், சிறிதும் நீளவிடலாகாது என்றாள். 'ஆல்' ஈரிடத்தும் அசைநிலை.

மணக்குடவர் உரை
நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல இனிமை யுண்டாக்கும் புலவி: அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல இன்னாதாம். இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்த விடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை
உணவின் அளவிற்கு ஏற்ப உப்பின் அளவு அமைவதை போல், கலவி இன்பத்திற்கு வேண்டும் அளவிற்கு ஏற்ப ஊடல் அமையட்டும்; அதை அளவு கடந்து கொஞ்சம் நீட்டினாலும், உப்பின் அளவைக் கூட்டுவது போல் ஆகும்.

No comments:

Post a Comment