விழையார் விழையப் படுப

குறள் 810
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
விழையார் - பகைவராலும்
விழைவு - விருப்பம், ஆசி
விழையப்படுப - விருப்படுவார்கள்
பழையார்கண் - பழகிய பழம் நட்பில் உள்ளவரிடம்
பண்பின்  - தம்முடைய பண்பின் காரணமாக
தலைப்பிரியாதார் - எப்போதும் பிரியாதார் (அவர்கள் குற்றம் செய்தாலும்)

முழுப்பொருள்
நல்ல நட்பு என்பது யாதெனில் பல ஆண்டுகளாக நல்ல நட்பில் இருப்பார்கள். அவர்களின் பயணத்தில் எத்தகைய நிலையிலும் ஒருவர் தவறே செய்தாலும், தவறான வழியில் சென்றாலும் அதற்காக கூசி அவர்களிடம் இருந்து பிரியாமல் இருப்பது. 

உதாரணமாக பால்யக்காலங்களில் நல்ல நட்பில் இருப்பர். பின்பு வேலைக்கு சென்று அந்தஸ்து, பதவி வந்ததும் பிரிந்து விடுவர்.  நண்பருக்கு வேலையிலோ அல்லது தொழிலிலோ நட்டம் ஏற்ப்பட்டால் அவர் எங்கு நம்மை கேட்ப்பாரோ என்று பயந்து பிரிந்துவிடுவர். நண்பர் ஒரு அவசரத்தில் செய்த தவறிர்க்காக அவரிடம் இருப்பது இழிவு கூடாநட்பு என்று பிரிந்து விடுவர். இத்தகையது நட்பல்ல.

எல்லா நேங்களில் நண்பருடன் உடன் இருந்து நட்பு பாராட்டுவதே நட்பாகும் அத்தகைய நட்பை எதிரியானாலும் போற்றுவர்.

இதற்கும் மகாபாரதத் கதையில் கர்ணன், நட்பின் பழைமையால், துரியோதனின் பிழைகளையும் பொறுத்து, நட்போடு இருந்ததை, அவர்களுடைய பகைவர்களும் போற்றியதைக் கூறலாம்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார் பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்; விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர். (தம் பண்பாவது, செய்யாத முன் போல அன்புடையராதல். மூன்றன் உருபும் சிறப்பு உம்மையும் விகாரத்தால் தொக்கன. அத்திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன் கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை
பழைய நட்டோர்மாட்டுக் குணத்தினின்று நீங்காதார்,விரும்பாதாராலும் விரும்பப்படுவர்.
இது பகைவரும் விரும்புவாரென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைமையான நண்பர் தவறு செய்தாராயினும் அவரிடத்துத் தம் நட்புத் தன்மையினின்றும் மாறுபடாதவர்; விழையார் விழையப்படுப - பகைவராலும் விரும்பப்படுவர்.

பண்பாவது நட்பிற் பிழைபொறுத்தல். மூன்றாம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன

மு.வ உரை
(தவறு செய்த போதிலும்)பழகிய நண்பரிடத்தில் தம் உரிமை பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குறிய சிறப்பை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை
பழைய நண்பர்கள் பிழையே செய்தாலும், அவருடன் பகை கொள்ளாது நம் நட்பை விடாதவர், பகைவராலும் விரும்பப்படுவர்

No comments:

Post a Comment