தன்நெஞ் சறிவது பொய்யற்க

குறள் 293
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்
[அறத்துப்பால், துறவறவியல், வாய்மை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன் நெஞ்சு - தன்னுடைய மனம்/ நெஞ்சம் (பிறர் அறியாதது)
அறிவது - அறிந்துக்கொள்வது / அறிவது / தெளிந்துக்கொள்வது / உண்மையானது
பொய்யற்க - (அதனை) பிறர் அறியவில்லையே என்று எண்ணி பொய்யினை கூறாதே
பொய்த்தபின் - மீறி பொய் சொன்னால், அதன் பின்
தன் நெஞ்சே - தன்னுடைய நெஞ்சமே
தன்னைச் சுடும் - குற்ற உணர்ச்சியால் தன்னை சுட்டெரிக்கும் நெருப்பாக ஆகிவிடும்

முழுப்பொருள்
பல உண்மைகள் எல்லோருக்குமே தெரிந்து இருக்கும். ஆதலால் பொய் சொன்னாலும் மற்றவர்கள் சுட்டிக்காட்டி தகுந்த தண்டனை கொடுத்து ஒருவனை அழித்து விடுவர்.

ஆனால் பிறருக்கு தெரியாத சில உண்மைகள் தனக்கு மட்டும் தெரிந்த சில உண்மைகள் பல நேரம் அமையும். குறிப்பாக குடும்பங்களில், அலுவலங்களில், நட்பு வட்டாரத்தில். அத்தகைய நேரங்களில் பிறருக்கு தெரியாதே எனக்கு மட்டுமே தெரிந்த உண்மையாயிற்றே என்று எண்ணாமல் உண்மையை சொல்லுக. பொய்யை சொல்லாதே, உண்மையை மறைக்காதே.

மீறி உண்மையை மறைத்தாலோ பொய்யை கூறினாலோ, பொய் சொன்னாதற்காக தன்னுடைய மனமே தன்னை நெருப்பாய் சுட்டு எரித்து விடும். மன நிம்மதியை அழித்து விடும்.

ஆக வாய்மை மட்டும் மொழிக.


குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்ற சொலவாடையை நினைவில் கொள்க

அறநெறிச்சாரப்பாடல் (206),
தன்னைத்தன் நெஞ்சம் கரியாகத் தானடக்கிற் 
பின்னைத்தான் எய்தா நலனில்லை” என்று இதே கருத்தை ஒட்டி கூறுகிறது.

“அறிகரி பொய்த்தலின் ஆகுமோ வதுவே” (நற் 196:9)
“அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க் கில்லை” (குறுந் 184:1)

மேலும்: அஷோக் உரை

"Above all, do not lie to yourself." — Fyodor Dostoyevsky

வசுஷேணர் மண்ணிலிருந்து எழுந்து மூச்சுலகை அடைந்தபோது விம்மி அழுதுகொண்டிருந்தார். மூச்சுலகில் அவரை எதிர்கொண்ட கந்தர்வனாகிய சுகாலன் “அழுதபடிதான் நீங்கள் இங்கு வரமுடியும் அரசே, வருக!” என வரவேற்றான்.நான் ஏன் இத்தனை துயர்கொண்டிருக்கிறேன்?” என்று வசுஷேணர் கேட்டார். “நீங்கள் காம்பு கனிந்து உதிரவில்லை” என்று சுகாலன் சொன்னான். “ஏன்?” என்று வசுஷேணர் மீண்டும் கேட்டார். “களம்கொண்டு செல்லும் அம்புகள் முற்றொழியாமல் பாசறை திரும்புபவர்களுக்கு போர் முடிவதேயில்லை” என்றான் சுகாலன். அவர் பெருமூச்சுடன் “என்னால் எதையும் வகுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.
.......
.......
"ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.
===
மேற்சொன்ன வரிகளை வாசித்தால் நமக்கு மற்றொன்றும் புரியும். நாம் நமது முழு ஆற்றலுக்கு செயல்புரியவில்லை என்றால், பின்னாநாட்களில் நாம் வருந்துவோம்

பரிமேலழகர் உரை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தன்னெஞ்சினாற் பொய்யை நினையாது ஒழுகுவனாயின் உலகத்தார் நெஞ்சினுளெல்லாம் உளனாவான். இது பொய்யை நினையாதாரை எல்லாரும் போற்றுவாரென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க- ஒருவன் தன் நெஞ்சு அறிந்த தொன்றைப் பிறர் அறியவில்லை யென்று கருதிப்பொய் சொல்லா தொழிக; பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச்சுடும்-பொய் சொன்னானாயின், அதனை யறிந்த தன் நெஞ்சே தான் செய்த தீவினைக்குச் சான்றாக நின்று தன்னைக் குற்றஞ் சாட்டித் துன்புறுத்தும்.

"நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை." (கொன்றை.54) முக்கரணவினைக ளெல்லாவற்றையும் நெஞ்சு அறிவதனாலேயே அதற்கு மனச்சான்று என்று பெயர். மனச்சான்று உடனிருந்துரைக்கவும் அதை மறுத்துப் பொய் சொல்வது கொடிய தென்பதை யுணர்த்தவே, "நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்." என்றார் உலகநாதர். 'சுடும்' என்றதினால், மனச்சான்று குத்தியுணர்த்தி மன நோவை யுண்டுபண்ணுவது மட்டுமன்றி, தெய்வச் சான்றாக நின்று வெளிப்படுத்தி அரசன் தண்டனையையும் அடைவிக்கும் என்பது பெறப்படும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: தன்னெஞ்சு அறிந்தது பொய்யற்க - தன் மனச் சான்று அறிந்ததனை அறிந்ததற்கு மாறாகக் கூறற்க ; பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னை சுடும் - அறிந்ததற்கு மாறாகக் கூறிய பின்னர்த் தன் மனச்சான்றே தன்னை வருத்தும்.

அகலம்: தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடியே கூறுதல் வாய்மை என்றும், அறிந்ததற்கு மாறாகக் கூறுதல் பொய்ம்மை என்றும், பொய்ம்மை கூறுவதால் இன்னது விளையு மென்றும் கூறினார். ‘நெஞ்சு’ ஆகு பெயர், அதன் சான்றுக்கு ஆயினமையால். மனச் சான்று - மனத்தின்கண் சான்றாய் நிற்கும் அறிவு. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அறிவது’. ‘அறிந்தது’ என்பது பொருத்தமான பொருளைத் தருதலானும், இன்னோசை பயத்தலாலானும், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது. பரிமேலழகர் இக் குறளை மூன்றாங் குறளாகவும், இரண்டு, மூன்றாம் குறள்களை முறையே ஒன்று, இரண்டாம் குறள்களாகவும் கொண்டனர். இக் குறள் வாய்மைக்கு விதி கூறுகின்றமையாலும், இரண்டு மற்றும் மூன்றாம் குறள்கள் முறையே வாய்மைக்கு விலக்கும் பொய்மைக்கு விலக்கும் கூறுகின்ற மையாலும் இது முதற் குறளாகவும், அவை இரண்டு, மூன்றாம் குறள்களாகவும் அமைக்கப்பட்டன.

கருத்து:தன் மனச்சான்று அறிந்ததை அறிந்தபடி வெளியிடுதல் வாய்மை.

மு.வ உரை
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை
பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டா. சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
பொய்  கூறி  வாழ்ந்திடலாம்  என்று  எண்ணும்
             பொறுப்பற்றோர் தனைப் பார்த்து  வள்ளுவரும்
சொல்கின்றார்  ஒரு  செய்தி  ஆகா   ஆகா
             சோர  உணர்வுள்ளோர்கள்  உணர்வதற்காய்
எல்லார்க்கும்  தெரியாதே  பொய்கள்  சொல்லி
             ஏய்த்ததுவாய்  நினைக்கின்றீர் அய்யோ  பாவம்
உள்ளம்  உம்  உள்ளம்  அப்பொய்யைக்  கொண்டு
             உமைச் சுட்டு  உமைச்சுட்டுக்  கொன்றே  போடும்

Thirukkural - Management - Ethical Behavior
Valluvar would have anticipated that people would take undue advantages of his thought in Kural 291 
and has warned us immediately with another Kural, 293. The Kural says: 

Lie not against your conscience 
Lest it burn you.

One should not tell harmful or hurtful lies by deliberately knowing that that sort of lie would cause trouble for both the person who tells and the person who receives. That sort of lie disturbs the conscience of the person who tells. If we tell a lie consciously,  our consciousness will hurt us forever. In other words, telling a lie should not make us feel guilty. If telling a lie ends in regret for the person, that act becomes unethical.

Let us be honest with ourselves as we are
living our life.

English Meaning - As I taught a kid - Rajesh
Your heart knows the lies that your saying, your insincerity, your dishonesty etc. Hence, don't tell lies, don't be dishonest, don't be insincere because your heart itself will burn you with guilt. You cannot escape from your heart/conscience

Questions that I ask to the kid
1) What will burn your heart?
2) Your heart knows it is wrong. What should you do or don't do? why?
3) Your heart doesn't knows it is wrong. What should you do or don't do? why?

No comments:

Post a Comment