நாணால் உயிரைத் துறப்பர்

குறள் 1017
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் 
நாண்துறவார் நாணாள் பவர்
[பொருட்பால், குடியியல், நாணுடைமை]

பொருள்
நாணம் -  எதிர்கொள்ளாமல் பின்வாங்கும் கூச்ச உணர்வு, வெட்கம், அடக்கம், பணிவு,  கூசுதல்
நாணால் - நாணத்தினால் - வெட்கபடவைக்கும் உணர்வால்

உயிரைத் துறப்பர் - உயிரை மாய்த்துக்கொள்வார்கள்

உயிர்ப் - உயிருடன் வாழ

பொருட்டு - காரணம்; மதிப்பிற்குரியது; மேம்பட்டது, நிமித்தமாக.

பொருட்டால் - மதிப்பிற்காக

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

துறவார் - துறவாதவர்கள்

நாண் - வெட்கம்; மகளிர்க்குரியகூச்சம்; வில்நாண்; கயிறு; மாங்கலியங்கோத்தசரடு; காண்க:அரைஞா(நா)ண்.

ஆள்பவர் - ஆளுமை செய்பவர்கள்

முழுப்பொருள்
அறம் அல்லாத செயல்களை தீய வழி செயல்களை செய்தால் தனக்கும் தனது மதிப்பிற்கும் இழிவு என்று எண்ணம் உடையவர் நாணத்தின் சிறப்பை அறிவர்.  நாணத்தால் ஏற்படும் சிறப்பகளையும் அறிவர்.

உயிர் என்பது பிறப்பிற்கும் இறப்பிற்கும் மட்டுமே நீடிப்பது. ஆனால் நாம் இறந்த பின்பும் நம்மை பற்றி மக்கள் பேசுவர். ஆதலால் ஒருவரின் நாணம் உயிர் பிரிந்த பின்பும் வாழக்கூடியது. ஆதலால் நாணமே சிறந்தது. அது பல ஆண்டுகள்/நூற்றாண்டுகள் நிலைக்க தக்கது.

அப்படி நாணத்தை வேண்டுவோர் ஒரு நிலையில் வாழ உயிர் முக்கியமா நாணம் முக்கியமா என்றால் உயிரை துறந்து நாணத்தை பற்றுவர். நாணம் அல்லாது உயிர் வாழ்வ வெட்கபடுவர்.

ஆனால் சிறுமை வேண்டுவார் அதாவது சிறு ஆண்டுகள் மட்டுமே நிலைக்கத்தக்க உயிரை வேண்டுவோர் உயிரை ஒரு பொருட்டாக எண்ணி/வேண்டி நாணத்தை துறப்பார்கள். அவர்களை பற்றி அவர்கள் இறந்தபின்பும் இவ்வுலகம் இகழும்.

ஆதலால் பழிக்கு அஞ்சும் குணமுடையவர் பழி ஏற்பட்டால் உயிரை விடுவார்களன்றி, உயிர் வாழ்வதற்காக பழி வரும் செயல் செய்ய மாட்டார்கள்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”நாணில் வாழ்க்கை பசித்தலில் துவ்வாது” (முதுமொழி.4:3)
“ஈன்றவர் இடர்ப்பட எம்பி துன்புறச்
சான்றவர் துயருறப் பழிக்கும் சார்வுமாய்த்
தோன்றலின் என்னுயிர் துறந்த போதலால்
ஊன்றிய பெரும்பழி துடைக்க ஒண்ணுமோ” (கம்ப.கவந்தப்.25)


பரிமேலழகர் உரை
நாண் ஆள்பவர் - நாணினது சிறப்பு அறிந்து அதனை விடாதொழுகுவார்; நாணால் உயிரைத் துறப்பர் - அந்நாணும் உயிரும் தம்முள் மாறாயவழி நாண் சிதையாமைப் பொருட்டு உயிரை நீப்பர்; உயிர்ப்பொருட்டு நாண் துறவார் - உயிர் சிதையாமைப் பொருட்டு நாணினை நீக்கார். (உயிரினும் நாண் சிறந்ததென்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவர் செயல் கூற   ப்பட்டது.)

மணக்குடவர் உரை
நாணுடைமைப் பொருட்டாக உயிரைத் துறப்பார்: உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுபவர்.

இது நாண் உயிரினும் சிறந்ததென்றது.

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
நாண் ஆள்பவர்-நாணை உயிர்நாடிப் பண்பாகக் கொள்பவர்; நாணால் உயிரைத் துறப்பர் -நாணும் உயிருந் தம்முள் மாறானவிடத்து நாணைக் காத்தற் பொருட்டு உயிர் நீப்பர் ; உயிர் பொருட்டு நாண் துறவார் - உயிரை காத்தற் பொருட்டு நாணினை நீக்கார்.

'உயிரினும் நாண் சிறந்த்தென்பது கருத்து. உயிரினும் சிறந்தன்று நாணே.' (தொல், கள 22) இவ்விரு குறளாலும் நாணுடையார் செயல் கூறப்பட்டது. 'ஆல் ' அசைநிலை.

மு.வ உரை
நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்

சாலமன் பாப்பையா உரை
நாணத்தின் சிறப்பை அறிந்து அதன் வழி நடப்பவர் நாணமா, உயிரா,என்ற நெருக்கடி வரும்போது உயிரையே விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார்‌.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
ஊர் தூற்றிச் சிரிக்கின்ற ஒரு செயலை
ஒரு நாளும் செய்து விடார் நாணம் கொண்டார்
பேர் கெட்டுச் சீர் கெட்டுப் போனால் கூட
பிழையுள்ளார் வாழ்வது போல் வாழ மாட்டார்
ஆர் கெட்டுப் போனாலும் நாணம் உள்ளார்
அவர் சிறப்பு பெருஞ் சிறப்பு நாணம் காக்க
பேர் பெற்றார் தம் உயிரைத் தந்திடுவார்
பெரிதங்கு நாணம் என்றே உணர்த்திடுவார்

குறட் கருத்து 2 (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அற வாழ்க்கை தன்னையே அகமகிழ்ந்து ஆளுவார்
அன்பிலே வாழ்ந்து நிற்பார்
புற வாழ்க்கை அவலங்கள் தன்னையே கண்டவர்
பொறுக்காது நாணி நிற்பார்
ஒரு வேளை வாழ்க்கையில் துன்பமே சூழினும்
உயிரையே விட்டு வாழ்வார்
திருவான நாணத்தை ஒரு போதும் விட்டிடார்
தெய்வமே போற்ற வாழ்வார்


மேலும்: இதழ் (நன்றி)
விளக்கம்
நாம் செய்யும் செயல்களை மனிதவாழ்க்கைக்கு தகுந்த செயல்கள், தகாத செயல்கள் என இருவகையாகப் பிரிக்கலாம். தகாத செயல்களைச் செய்ய நாணப்படுவதை திருவள்ளுவர் ‘நாண் உடைமை’ என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார். அதில் நாணத்தை மதிப்பவர் எப்படிப்பட்டவராய் இருப்பார் என்பதை இக்குறளில் சொல்கிறார். 

நாணம் என்பது தனிமனிதப் பண்புகளிலே மிகமிக உயர்ந்த தனிச்சிறந்த பண்பாகும். நாணம்  என்னும் பண்பை எத்தகைய நிலையிலும் தனதாக வைத்திருப்பவரே நாண் ஆள்பவர் ஆவர். உடற்கூச்சத்தால் பெண்களுக்கு வரும் நாணம் வேறு, தகாத செயல்களைச் செய்ய மனம் கூசி, வெட்கிப் பின்வாங்கி நாணுவது வேறு. அத்துடன் தனக்கு தன்குடும்பத்துக்கு, தன் இனத்துக்கு நேர்ந்த பழியை, மாசை எண்ணி மனங்கூசி நாணுவதும் வேறு. இத்திருக்குறள் நாணம் என்று மனிதரின் மனக்கூச்சத்தையே குறிக்கிறது. சிலருக்கு தகாத செயல்களைச் செய்ய நாணப்படும் தன்மை இயல்பாகவே இருக்கும்.

இத்தகைய நாணம் உடையோர் உயிர்வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யத்தகாத செயல்களைச் செய்தும், மாற்றானிடம் கைகட்டி, வாய்பொத்தி நாணத்தை காற்றில் பறக்க  விட்டு உயிர் சுமந்து வாழமாட்டார்கள். அப்படி நாணத்தை ஆளும் பண்புடையோர், தாம் வாழும் வாழ்க்கைக்கும் நாணத்திற்கும் இடையே பெரும் சோதனை ஏற்படும் போது நாணம் எனும் உயர் பண்பை காப்பாற்றிக் கொள்வதற்காக தமது உயிரையே விட்டுவிடுவார்கள். 

நாணம் எனும் நற்பண்பை தன் உயர்பண்பாகக் கொண்ட பார்த்திபன் என்ற இயற்பெயர் கொண்ட திலீபனும் தன் இனத்துக்கு வந்த துன்பத்தைக் கண்டு நாணி, அதைத் துடைத்து எறிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்து நாணத்தை ஆள்பவனாக திருவள்ளுவரின் இக்குறளுக்கு இலக்கியமானான்.

திருவள்ளுவர் இக்குறளில் நாணம் உடையோருக்கு அவரது உயிரைவிட நாணம் மிகப் பெரியது என்று மிக  நுட்பமாகச் சொல்கிறார். 

No comments:

Post a Comment