அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்

குறள் 169
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
[அறத்துப்பால், இல்லறவியல், அழுக்காறாமை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
அவ்வி - avvi   VI. v. i. become impatient; 2. pervert the mind, மனங்கோணு.  
அவ்வித்தல் - பொறுமைஇழத்தல்; மனம்கோணச்செய்தல்.

அவ்விய - பொறாமை, அழுக்காறு கொண்ட

நெஞ்சம் - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு.

நெஞ்சத்தான் -  நெஞ்சம் (மனம்) உடையவனுக்கு

ஆக்கம் -  ஆக்கக்கிளவி; அமைத்துக்கொள்ளுகை; கைகூடுகை; உண்டுபண்ணுகை; படைப்பு செல்வம் பொன் பெருக்கம் இலாபம் ஈட்டம் கொடிப்படை திருமகள் மங்களகரம் வாழ்த்து; உண்டாக்கப்பட்டது; பெறுகை; செல்வம்; நிவேதனம்; உணவுபரிமாறுதல்; காடு.

ஆக்கமும் - செல்வம்; பொன்; பெருக்கம்; இலாபம்

செவ்வி - காலம்; ஏற்றசமயம்; காட்சி; அரும்பு; பக்குவம்; புதுமை; அழகு; சுவை; மணம்; தன்மை; தகுதி; சித்திரைநாள்.

செவ்வியான் - நேர்மையுடையவன்

கெடுதல் - அழிதல்; பழுதாதல்; வறுமையடைதல்; ஒழுக்கங்கெடுதல்; உருவழித்தல்; தோற்றோடுதல்; விபத்து; தீங்கு; விகாரத்தால்எழுத்துக்கெடுதல்; வழிதவறிப்போதல்.

கேடும் - அழிவு; இழப்பு; வறுமை; தீமை; கெடுதல்; வேறுபாடு; அழகின்மை 

நினைத்தல் - கருதுதல்; ஞாபகத்திற்கொணர்தல்; ஆராய்தல்; தியானித்தல்; அறிதல்; நோக்கமாகக்கொள்ளுதல்; பாவித்தல்; மனனம்.

நினைக்கப் படும் - சில நேரங்களில் மனங்களிலே நினைத்துப்பார்க்கின் 

முழுப்பொருள்
மனதில் பொறாமை கொண்ட ஒருவன் செல்வந்தராக இருக்கக்கூடும். ஆனால் நேர்மையான ஒருவர் மிகவும் ஏழ்மையில் இருப்பார். இவ்வாறு நல்லவராக இருப்பவர் நமது எதிர்ப்பார்பிற்கு நேர்மறையாக ஏழ்மையில் இருப்பதும், மனதில் பொறாமை யுடையவர் செழிப்பாக இருப்பதை நம் மனம் ஏற்றுக்கொள்ளாது. 

ஆனால் இந்நிகழ்வை கண்டு நாம் வருந்தக்கூடாது. நாம் அதை பற்றி சிந்திக்க வேண்டும். இவ்வாறு உள்ளவர்கள் வாழ்வில் அடையும் உண்மையானவை வேறு. நல்லவர்கள் நற்பெயர் பெறுவர். உலகம் அவர்களை அவர்களுக்கு முன்னும் பின்னும் போற்றும். ஆனால் பொறாமை கொண்டவர்களை மூகஸ்துதி(முகத்துதி) செய்துவிட்டு பின்பு யேசும். அப்படி சிந்திக்கையில் நமக்கு உண்மை விளங்கும். 

பொதுவாக பொறாமை படுபவனிடம் செல்வமும் இருக்காது. பொறாமை படாதவனிடம் (அதாவது நல்லவரிடம்) செல்வம் இருக்கும். ஆனால் ஒருவேளை பொறாமை படுபவனிடம் செல்வம் இருப்பின் அல்லது நல்லவரிடம் செல்வம் இல்லை எனில் அவனை ஏசாது அதற்கான காரணத்தை இவ்வுலகம் ஆராய்ச்சி செய்யும். ஏனெனில் நல்லவன் கெட்டால் அதுபற்றி இவ்வுலகம் ஆராயும். 

சிலப்பதிகார அடைக்கலக் காதையில் மாடலமறையோன், கோவலனைப்பார்த்து இங்கனம் கூறுகிறான், “இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது” என்று. இப்பிறவியில் நீ செய்தன யாவும் நல்லறங்களே ஆகும், அவ்வாறிருக்க, திருமகளை ஒத்த இம்மாணிக்கக் கொழுந்தாகிய கண்ணகியோடு துன்புற்று இங்கு நீ வந்திருப்பது உன்னுடைய முற்பிறப்பின் தீவினை போலும்” என்கிறான்.

உதாரணம்
அண்ணாமலை படம் : 
"கெட்டுப்போனவன் வாழலாம். ஆனா நல்லா வாழ்ந்தவன் கெட்டுப்போக கூடாது" என்று அண்ணாமலை கதாபாத்திரம் நினைத்து உதவி செய்யும். 


(பாட்ஷா பட வசனம்)
நல்லவங்கள ஆண்டவன்
சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்,
கெட்டவனுக்கு நிறைய
கொடுப்பான் ஆனா ஆண்டவன்
கைவிட்டுடுவான். ...

(காண்க - 2:30 முதல்)


குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)


மனித வாழ்க்கை தருகின்ற பல அய்யப்பாடுகள் குறித்து வள்ளுவரைத் தவிர யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலும்.
என் தந்தை எனக்கு சிறு வயதில் இருந்தே சொல்லித் தந்தது. என்ன அய்யம் ஏற்படினும் அதனை ஒரு கேள்வியாக்கிக் கொண்டு
வள்ளுவரிடம் செல் உறுதியாகப் பதில் உண்டு என்பார்கள்.

மக்களுக்கு எப்போதும் இருக்கின்ற ஒரு பெரிய அய்யம்.

தவறுகளுக்கு அஞ்சாமல் தவறுகளையே வாழ்க்கையாக்கி வருவாய் ஈட்டி பெருஞ் செல்வந்தர்களாக வாழ்ந்து வருபவர்களும்
நேர்மை நாணயம் ஒழுக்கம் என்று உண்மையாக மனிதர்களாக வாழ்பவர்கள் வறுமையில் வாடுவதும். எதனால் என்ற அய்யத்திற்கு
விடை கேட்டு வள்ளுவரிடம் சென்றேன்.

அவரிடம் எனது அய்யம் குறித்து வினவினேன்.

நீ என்ன கருதுகின்றாய் என அவர் என்னையே வினவினார்

தவறானவர்கள் மிகப் பெரிய இடங்களிலே இருக்கின்றனர். அவர்களையும் இந்த மக்கள் வணங்கி நிற்கின்றனர்.
கோயில்களில் கூட அவர்கள் எல்லோருக்கும் முன்னர் நின்று இறைவனைத் தொழுகின்றார்கள். மக்கள் அங்கேயும் கூட அவர்களை
வணங்கி நிற்கின்றனர்.

நல்லவர்களை மக்கள் வணங்கவில்லை என்கின்றாயா என்றார்

இல்லை அவர்களையும் வணங்கத்தான் செய்கின்றனர்.

இரண்டிற்கும் ஏதாவது வேறுபாடு கண்டாயா என்றார்

சரியாகப் பார்க்கத் தவறி விட்டேன் என்றேன்.

இனிப் போய்க் கவனி.ஒன்றைப் புரிந்து கொள்வாய் என்றார் பேராசான்.

கள்ளச் சாராயம் காய்ச்சுவது விபச்சாரத்தைத் தொழிலாகச் செய்வது ஏழைகளின் உழைப்பைத் திருடுவது. எவர்
சொத்தையும் அபகரித்துக் கொள்வது என்று வாழ்பவர்களை ஊரில் மக்கள் வணங்குவதும் அவர்களைக் கண்டால் குழைந்து
நிற்பதும் வார்த்தைக்கு வார்த்தை அய்யா அய்யா என்பதும் அவர்களைத் தொழுவது போல நிற்பதுவும் பார்த்த நீ கொஞ்சம்
அங்கேயே நின்று கவனித்திருந்தால்தான் உண்மை உனக்குப் புரிந்திருக்கும் என்றார்,

ஒருமுறை நின்று பார். அந்தத் தவறானவன் அந்தப் பக்கம் போனதும் வணங்கி நின்றவர்கள் கடவுளிடம்
சினம் கொள்வதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள். இவனையெல்லாம் உடனடியாகத் தண்டிக்காமல் விட்டாயானால் எங்களுக்கு
உன் மீது உள்ள பக்தியே போய் விடும் என்று வேகப் படுவார்கள்.இவனுக்கு ஒரு சாவு வராதா. நல்லவர்கள் வாழ்கின்ற
இடத்தில் இவனைப் போன்றவர்களையும் இறைவன் வாழ வைத்துள்ளானே என்று மிக மிக உள்ளம் வருந்துவார்கள்,


அதே நேரம் நல்லவர்களைக் கண்டவுடன் முக் மலர்ந்து தாள் பணிந்து அவர்களின் ஏழ்மை நிலை குறித்துத்
தங்களின் மன வருத்தங்களை அவர்களிடம் பகிர்ந்து கொண்டு இறைவன் அவர்களுக்கு உடனடியாக எல்லா உதவிகளையும் செய்ய
வேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவார்கள். அய்யா உங்களைப் போன்றவர்களால்தான் மழை பெய்கின்றது. அச்சப்பட்ட ஏழை
மக்கள் உங்களைப் போன்ற நேர்மையாளர்களைப் பார்க்கும் போதே கடவுளை நம்புகின்றோம்.என்றெல்லாம் அவரோடு உரை
யாடுவார்கள். நாங்கல்லாம் உங்கள் பிள்ளைகள் என்பார்கள்.

புரிகின்றதா தம்பி. மக்களால் இவர்கள் இருவருமே நினைக்கப் படுவார்கள். ஆனால் நினைக்க்ப் படுகின்ற முறைதான்
வேறு. தீயவர்களை மனம் நொந்து சாபங்களோடு வணங்குவார்கள். நல்லவர்களை அகமும் முகமும் மலர தெய்வமாகவே வணங்கு
வார்கள்.

குறள்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்


மேலும் அஷோக்


யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி உரை

அறவழி பிறழ்ந்தும் குறுகிய நோக்கத்துடனும் பிறர்க்குதவியின்றி சுயநலத்தோடும் வாழ்பவர்கள் பொருள், புகழ், அதிகாரம், புலன், இன்பம் இவற்றில் மேலோங்கி வளமாக வாழ்வதும், ஒழுக்கம், ஈகை, கடமை எனும் மூன்றிணைப்பு அறவழியில் நெறி பிறழாமல் வாழ்பவர்கள் மனித சமுதாயத்தில் வளம் குறைந்து வருந்தி துன்பம் மிகுந்த வாழ்வை அனுபவிப்பதும், மேலாகப் பார்த்தால் ஒருவருக்கு விளங்காது. ஆழ்ந்து பொறுப்புணர்ச்சியோடு விரிந்து ஆழ்ந்த அறிவோடு சிந்தித்தால் அவற்றிற்குக் காரணம் விளங்கும் என்று கூறுகிறது இக்குறள். தமிழில் அகப்படும் என்ற வார்த்தைக்கு அகம்+படும், சிந்தித்துப் பார்த்தால் அறிவிற்கு எட்டும் என்பதே நினைக்கப்படும் என்ற சொல்லாகும்.

ஒவ்வொரு மனிதனிடமும் மூன்று வகையான் வினை விளைவுகள் இனைப்பாகச் செயல்புரிகின்றன. 1)தனிப்பட்ட முறையில் தான் ஆற்றும் வினை. இதோடு கருத்தொடராக பல்லாயிரம் தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் வினைகள். 2) சமுதாயத்திலிருந்து பிரதிபலிப்பாக விளையும் வினைகள் 3) பேரியக்க மண்டல நிகழ்ச்சிகளான பரிணாமம் இயல்பூக்கம் என்ற தொடரில் இயற்கையின் முதல் நிலையான இறைவெளியும், விண் துகள்களில் எழும் அலைகளும் கூடி பேரியக்க மண்டலம் முழுவதும் காந்தக் களமாகி ஒவ்வொரு பொருளிலும் அதன் அணுக்கூட்டுத் திணிவு நிலைக்கேற்ப ஊறு, ஒலி ஒளி, சுவை, மணம், மனம் ஆகத் தன்மாற்றம் பெற்றூ இயங்கி பல்வேறு விளைவுகளைத் தொடராகக் கொடுத்துக் கொண்டிருக்கும் அருட்பேராற்றலின் திருவிளையாட்டுத் தொடர் விளைவுகள். ஆக மூன்று வகைச் செயல்களுக்கும் அவற்றின் விளைவுகளுக்கும் உட்பட்ட உயிரியக்க நிலையமே மனிதன்.

ஒரு மனிதனுடைய பிறப்பு, முடிவு, வாழும் காலத்தில் ஏற்படும் மன, உடல், பொருள், நட்பு, புகழ், செல்வாக்கு இவற்றின் வளம் இவை மேலே சொல்லப்பட்ட மூவகை விளைவுகளில் எங்கிருந்து இந்த மனிதனுக்கு இந்த வளம் வந்திருக்கின்றது என்ற விளக்கம், விரிந்த அறிவில் ஆழ்ந்து சிந்தித்தால் விளங்கும் என்பதே இக்குறளின் கருத்தாகும். செயலில்லாத விளைவில்லை. விளைவு இல்லாத செயலில்லை. ஒவ்வொரு விளைவின் தரமும் அளவும், காலமும் கொண்டு ஆழ்ந்து ஆராயும்போதுதான் காரணம் விளங்கும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.

வினைத்தூய்மை
வினை எதுவும் நலம் தீது என்பது இல்லை
      விளையும் அதனை ஆற்றுபவர் நோக்கம் கொண்டே
வினையதை நலம்தீது எனப் பிரிப்போம்
      விழிப்புடனே எண்ணம் எழும்போதே தேர்வோம்.
வினை காலம், இடம் தொடர்பு பொருள்களுக்கு ஏற்ப
      வெவ்வேறு அளவு இன்ப துன்பம் நல்கும்
வினைகள்தமை உடல் தகுதி, உலகம் ஒப்ப,
      உயர் இயற்கை நியதி ஒக்க ஆற்றமேலாம்.

உலக நலம் வேட்டல்
அறிவறிந்தோர் எண்ணிக்கை பெருகவேண்டும்
      அன்பு கடமை ஆட்சி அறம் தொண்டெல்லாம்
அறிவறிந்தோர் விளக்கும் வாறுணர்ந்து போற்றி
      அருள் நெறியில் மக்களெல்லாம் வாழவேண்டும்
அறிவறிந்தார் விளக்கத்தால் பழக்கம் சீராம்
      அறக்கல்வி குழந்தைகட்குக் கிட்ட வேண்டும்
அறிவறிந்தோர் அகன்ற கருத்தில் உதிக்கும்
      ஆட்சி முறை மலர்ந்துலகம் உய்ய வேண்டும்.    

பரிமேலழகர் உரை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-கோட்டத்தினைப் பொருந்திய தனத்தை உடையவனது ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்-ஏனைச் செம்மையுடையவனது கேடும் உளவாயின், அவை ஆராயப்படும்.
விளக்கம்
(கோட்டாம்: ஈண்டு அழுக்காறு. 'உளவாயின், என்பது எஞ்சி நின்றது. ஆக்கக் கேடுகள் கோட்டமும் செம்மையும் ஏதுவாக வருதல் கூடாமையின், அறிவுடையரால், 'இதற்கு ஏது ஆகிய பழவினை யாது?' என்று ஆராயப்படுதலின், 'நினைக்கப்படும்' என்றார். ''இம்மைச் செய்தன யான்அறி நல்வினை; உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது' (சிலப்.15:91-93) என நினைக்கப்பட்டவாறு அறிக.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும்-பொறாமை மனத்தானது செல்வமும்; செவ்வியான் கேடும்-பொறாமை கொள்ளாத செவ்விய மனத்தானது வறுமை அல்லது துன்பமும்; நினைக்கப்படும்-எக்கரணியம் பற்றி நேர்ந்தன வென்று ஆராயப்படும்.

இரு நிலைமையும் இயற்கைக்கும் அறநூற் கொள்கைக்கும் மாறாயிருப்பதால் அவற்றிற்குக் கரணியம் பழவினையே என்பது ஆராய்ச்சியால் அறியப்படும்.

"இம்மைச் செய்தன யானறி நல்வினை
யும்மைப் பயன்கொ லொருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது"

என்னும் மாடலன் கூற்றும் (சிலப். 15;91-93.)
"என்செய லாவதி யாதொன்று மில்லை யினித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த வூனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே".

என்னும் பட்டினத்தார் பாடலும், இவ்வகை யாராய்ச்சியைக் குறிக்கும்.

மணக்குடவர் உரை
அழுக்காற்று நெஞ்சத்தானுடைய ஆக்கமும் செவ்விய நெஞ்சத்தானுடைய கேடும் விசாரிக்கப்படும்

பொருள்: அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் - கோடிய உள்ளத்தானது செல்வமும் நேரிய உள்ளத்தானது வறுமையும், நினைக்க கெடும் - (ஒருவன்) நினைக்கும் (கால) அளவில் அழியும்.

அகலம்: மணக்குடவர் பாடம் ‘நினைக்கக் கெடும்’. மற்றை நால்வர் பாடம் ‘நினைக்கப்படும்’. ‘பொல்லாதவர் நன்மை பொருந்துவதும், நல்லார் மிகவன் றுயர் நண்ணுவதும், தொல்லார் வினையால் வரினுந் தொடர்பாய், நில்லா தெனும்வாய் மொழிநிச் சயமே’ - பிரபோத சந்திரோதயம்.

கருத்து: இவ் விரண்டும் வெகு விரைவில் நீங்குவன.

மு.வரதராசனார் உரை
பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

சாலமன் பாப்பையா உரை
பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.


(பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.)

எந்த ஒரு சமுதாயத்திலும் கேடுகளும், தீங்குகளும் மலிந்தே கிடக்கின்றன. நல்லவர் என்பதாலேயே ஒருவர் வெற்றி பெற்று விடுவதில்லை. அதற்கான சூழ்நிலைகளும், நியதிகளும் சமூகத்தில் இருந்தால்தான் நல்லவர்களுக்கு மதிப்பு இருக்கும்.
கேடுகள் நிறைந்த சமூக நிலை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. வள்ளுவர் காலமும் அதற்கு விதிவிலக்கு அல்ல போலும். இந்த நிலைமைகளைக் கண்ணுற்ற வள்ளுவர் அதற்காக வருந்தியுள்ளார். அவருடைய வேதனையின் வெளிப்பாடுதான் மேற்காணும் குறளாக வடிவெடுத்துள்ளது.
அறக்கருத்துக்களை சொல்லி வெற்று உபதேசியாக மட்டும் அவர் இருக்கவில்லை. கார்ல்மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற சமூக விஞ்ஞானியாக வள்ளுவர் திகழ்ந்துள்ளார். அதனால்தான் தான் வாழ்ந்த சமூகத்தில் நிலவிய குறைபாட்டை தனது பாடலில் பதிவு செய்து அதற்கான ஆய்வை மேற்கொண்டு சமூகத்தை திருத்த வேண்டும் என்ற சமூக அக்கறையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த குறட்பா மூலம் புலனாகும் ஆழமான அவரது சமூக நலன் நாடும் வேட்கையையும், ஆய்வு மனப்பான்மையையும் சமூகவியலாளர்கள் வியந்து போற்றுகிறார்கள்.
1330 குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் வகையில் தனித்துவமானதுதான். அவற்றிலும் ஒரு சில குறட்பாக்கள் மற்றவற்றைக் காட்டிலும் சிந்தனைச் செழுமையில் வேறுபட்டு தனித்து மிளிர்கின்றன. அத்தகையவற்றில் ஒன்றுதான் இந்த குறட்பா.
வள்ளுவர் நீதிநூல் மட்டும் எழுதியவர் அல்ல. அவர் ஒரு சமூகப் புரட்சியாளர். அந்த உண்மையை இந்தக் குறட்பா பதிவு செய்து வைத்துள்ளது. அதன் ஆழமான பொருளை நுணுகி ஆராய்ந்து படிக்க வேண்டியது வாசகர்களின் கடமையாகும்.

மேலும்: தினமணி
றம், நியாயம், தர்மம் என்பனவற்றை அந்தந்த நாடும் அந்தந்த சமுதாயமும் அங்கீகரித்துப் பின்பற்றும் பொழுதுதான் நடைமுறையில் இருக்கின்றன. அவை அங்கீகரிக்கப்படாதபோது இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் அறத்தின் விலை வேறு வேறாக இருக்கிறது.

திருவள்ளுவர் காலத்திலும் இந்த நிலையே இருந்தது என்பதை அவர் எழுதியுள்ள, "அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும்' (169) என எழுதுவதால் தெரிகிறது.

கெட்ட எண்ணம் உடையவன் பண வசதியோடு ஜொலிக்கிறான். நல்லவன் வறுமையால் அல்லல்படுகிறான் என்பது அவர்தம் குறட்பாவிலிருந்து கிடைக்கும் செய்தி.

அறத்தை நிலைநாட்ட நல்லவர்கள் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டி இருக்கிறது. போராட வேண்டி இருக்கிறது.

தீமைக்கு இப்படி ஆள் துணையும், தோள் துணையும் தேவைப்படுவதில்லை. நீதி, அநீதிகளை நிலைநாட்டவும் தரம்பிரிக்கவும் எந்தச் சமுதாயத்தில் உறுதிப்பாடு இருக்கிறதோ அந்தச் சமுதாயத்தில் மட்டும்தான் நீதி, அநீதி என்பனவற்றைத் தெளிவாக வரையறுக்க முடியும்; வாழும் கோட்பாடுகளாக ஒப்புக்கொள்ள முடியும்.

English Meaning - As I taught a kid - Rajesh
The wealth in the hands of a person with jealousy at heart, and the destitution/impoverishment of a person, devoid of jealousy, are aberrations/abnormalities/anomalies that (need to/)would be analyzed. Because when one sees a jealous wealthy person, people might salute him/her but behind the back they would wonder how this person is wealthy. Similarly when one person devoid of jealousy is in poverty, then people will also wonder about it. So, one must understand that if we are jealousy people might praise us in front of us but the popular opinion in the society would be bitter. It will hurt us very deeply.

Questions that I ask to the kid
How would a jealous wealthy person be perceived by the society? How would the poverty of a person devoid of jealousy would be perceived?

No comments:

Post a Comment