தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச்

குறள் 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]

பொருள்
தெரிந்த - தெரிதல் - தோன்றுதல்; விளக்கமாதல்; அறிதல்; ஆராய்தல்; தெரிந்தெடுத்தல்; அரித்தெடுத்தல்; காணும்ஆற்றலைப்பெற்றிருத்தல்; மனமறிதல்; கேட்டல்.

இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

தெரிந்த இனத்தொடு - ஒருவர் ஒரு செயலை செய்ய அதற்குத் தேவைதான ஆற்றலுடைய அதை முடிக்கக்கூடிய சரியான துணை மக்களுடன் 

தேர்ந்து - தேர்தல் - tēr-   4 v. tr. 1. [M. tēruka.]To examine, investigate, inquire into; ஆராய்தல் (பிங்.) தேர்ந்து செய்வஃதே முறை (குறள், 541). 2.To understand, know; அறிதல் தேர்ந்தனன்முருகன் வாய்மை (கந்தபு. மூவாயிர. 81). 3. Toconsider, deliberate, ponder well; சிந்தித்தல் 4. To elect; தெரிந்தெடுத்தல். Mod. 5. To seek;தேடுதல். சிறுவெண்காக்கை நீத்து நீரிருங்கழி யிரைதேர்ந்துண்டு (ஐங்குறு. 162). 6. To ascertain,form a conclusion; நிச்சயித்தல் பேதைபாகனேபரமெனத் தேர்ந்துணர் பெரிய (திருவிளை. புராணவர.8). 7. To acquire, obtain; கொள்ளுதல் (பிங்.)8. To doubt, question; ஐயுறுதல் (குறள், 144,உரை.)--intr. To be well versed, proficient in;பயிற்சியடைதல். நூல்களிற் றேர்ந்த மதி

எண்ணி - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

தேர்ந்தெண்ணிச் - தாங்கள் செய்து முடிக்க வேண்டிய செயலை பற்றி நன்கு ஆராய்ந்து, தெளிவுபெற்று, திட்டமிட்டு 

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

செய்வார் - செய்வார்கள்; செயல் செய்வோர்

செய்வார்க்கு - செய்யும் தலைவனுக்கு (அரசனுக்கு)

அருமை - அபூர்வம், மேன்மை, வருத்தம், இன்மை,

அரும்பொருள் - முயன்று உணரும் இயல்புடைய சொற்பொருள்; பெறுதற்கு அரிய பொருள்; செயலால் அடைய முடியாத அரிய பொருள்

யாது - எது; இராக்கதன்; பிசாசு; கள்; நினைவு

ஒன்றும் - ஒன்றும்

யாதொன்றும் - எது ஒன்றும்

இல் - இல்லை; இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

முழுப்பொருள்
ஒரு செயலை செய்து முடிக்க அச்செயலை முடிக்க வல்ல ஆற்றலுடைய மக்கள் வேண்டும். அத்தகைய சரியான துணை அன்பர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். 

ஒரு செயலை துவங்கும் பொழுது நாம் எங்கு செல்கிறோம், எதை நோக்கி செல்கிறோம் என்ற நோக்கம் (goals, objectives) என்ற தெளிவு வேண்டும். அதன் பிறகு அந்த நோக்கத்தை குறிக்கொளை அடைவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை ஆராய வேண்டும். பல்வேறு பரிமானங்களில் - சரியான நபர்கள், சரியான இடம், சரியான காலம், நமக்கு இருக்கும் விதிகள், வழக்குகள் - இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு ஒரு திட்டம் தீட்டுவது (Strategy) தான் தேர்ந்து தெளிதல் - தேர்ந்தெண்ணி. அப்படி ஒரு திட்டத்தை தீட்டிவிட்டால் அந்த குறிக்கொளை அடைவதற்கு ஒரு மிகப் பெரிய அடியை எடுத்து வைத்து உள்ளோம். 

ஆனால் அது முதல் அடி. அப்படி எடுத்தச் செயலை ஆராய்ந்து அதற்கு சரியான நபர்களை தேர்ந்து எடுத்து செய்யத்தக்க ஒரு தலைவனுக்கு (அரசனுக்கு) அடைய தக்க அரிதான பொருள் (கடினமான செய்ய முடியாத செயல்) என்று ஒன்றுமே இல்லை. 

முன்னர் ”குறள் 198 அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்” என்று கூறிய வள்ளுவர் அறிவுள்ளவர்கள் அரும்பயனை ஆராய்வார்கள் என்று கூறியுள்ளார். ”தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச்"” என்றாகிய இக்குறளில் அரும்பொருள் என்று அடிக்கோடிடுகிறார் திருவள்ளுவர். ஆதலால் அறிவுள்ளவர்கள் அரும்பொருளை பயனாக கொடுக்கும் வினைகளையே ஆராய்ந்து எண்ணிச் செய்வர் என்பது உள்ளடக்கமாக கொள்ளலாம். 

மேலும், நம்மிடம் திட்டம் இருந்துவிட்டால் போதுமா? அல்ல. நாம் அதை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். அங்கு தான் ஒருவர் மற்றொருவரிடம் இருந்து வேறுபடுகிறார். அதற்கான குறள் தான் கீழே


மேலும்: அஷோக்

பரிமேலழகர் உரை
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்கவல்ல அரசர்க்கு; அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.

விளக்கம் [ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்துபோந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.]

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு-தாம் தெரிந்தெடுத்த சூழ்ச்சித்துணையினத்தோடு கூடிச் செய்யத்தகும் வினையை ஆராய்ந்து பின் தாமும் தனிப்பட எண்ணிச் செய்ய வல்ல அரசர்க்கு; அரும்பொருள் யாது ஒன்றும் இல்-முடித்தற் குரிய வினை எதுவும் இல்லை.

'தெரிந்த இனம்' என்பது வினைகளையெல்லாஞ் செய்யுந்திற மறிந்த இனம் என்றுமாம்.வினையாவன போரும் நால்வகை ஆம் புடைகளைப் பயன் படுத்துமாறும் சந்து செய்தலும் பிறவுமாம்.வெற்றிக்கேற்ற கருவிகளும் வழிகளும் குறைவின்றிக் கையாளப் பெறுதலால், அரிய வினைகளும் எளிதாகக் கைகூடப் பெறுவர் என்பதாம்.

மணக்குடவர் உரை
அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை.

மு.வ உரை
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்
எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை
தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

Thirukkural - Management - Decision Making
No task is a difficult task to a person who carefully chooses the members of his team, then assesses the qualities and strengths of the members, and brings them together to discuss the execution of the task before they start to execute the task, facilitates Kural 462.

Nothing is impossible to those who act
After wise counsel and careful thought.

In one word, executing a task with the support of the right people is 'teamwork.’ All these three actions: 1) choosing the right people, 2) bringing them together and 3) discussing before execution are the qualities of an effective team leader. Most of the modern thoughts on teamwork  are a sequel to this thought by Valluvar.

No comments:

Post a Comment