தனக்குவமை இல்லாதான்

குறள் 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
[அறத்துப்பால், பாயிரவியல், கடவுள் வாழ்த்து]

பொருள்
தனக்குவமை –  தனக்கு + உவமை

தனக்கு தன் - தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு.
உவமை - உவமம்; ஒப்புமை; உவமையணி; வினை, பயன், மெய், அடையாளம்

தனக்குவமை – தனக்கு இணையென அடையாளம் அல்லது இத்தன்மையினன் என்று சொல்லக்கூடிய

இல்லாதான் – இல்லாதவன் (உவமைகளுக்கும், இணைகளுக்கும் அப்பாற்பட்டவன்)

தாள் - கால்; மரம்முதலியவற்றின்அடிப்பகுதி; பூமுதலியவற்றின்காம்பு; வைக்கோல்; முயற்சி; தாழ்ப்பாள்; படி; திறவுகோல்; ஒற்றைக்காகிதம்; சட்டையின்கயிறு; விளக்குத்தண்டு; விற்குதை; ஆதி; கடையாணி; வால்மீன்; சிறப்பு; கொய்யாக்கட்டை; தாடை; கண்டம்.

தாள் – அவனுடை அடி

சேர்தல் - ஒன்றுகூடுதல்; இடைவிடாதுநினைத்தல்; கலத்தல்; சம்பந்தப்படுதல்; நட்பாதல்; இயைதல்; உரித்தாதல்; சேகரிக்கப்படுதல்; திரளுதல்; செறிதல்; கிடத்தல்; உளதாதல்; செல்லுதல்; கூடுதல்; பொருந்துதல்; புணர்தல்; பெறுதல்; சென்றடைதல்; ஒப்பாதல்; நேசித்தல்.

சேர்ந்தார் - அடைந்தார்

அல்லால்  - அல்லாமல்

சேர்ந்தார்க் கல்லால் – சேர்ந்தார்க்கு + அல்லால்அடைந்தவர்களைத் தவிர மற்றவருக்கு

மனக்கவலை - ஒன்றைப் பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம்.

மனக்கவலை – ஒன்றைப் பற்றி மனத்தில் உண்டாகும் கலக்கம். மனத்தின்கண் ஏற்படும் கவலைகளும், அதனால் துன்பங்களும்

மாற்றல் – மாற்றுதல், விடுபடுதல் (கவலைகள், துன்பங்களிலிருந்து)

அரிது - rare, அருமை; பசுமை

அரிது – மிகவும் கடினம், இயலாதவொன்று.

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
இந்தக் குறள் மனித மனத்தின் இயல்பைப் பற்றியும் அது அடைய வேண்டிய உயர்வைப் பற்றியும் விளக்குகின்றது. ஐயுணர்வுகளுக்கு எட்டாத் மெய்ப்பொருளை உணர்வதற்காக எழுந்த ஆறாவது அறிவு, அது நாடி அறிந்து உய்ய வேண்டிய மெய்ப்பொருளை புலன் மயக்கத்தால் மறந்து செயலாற்றுகின்றது. அதனால் ஐயுணர்வுகளால் சலிப்பும் துன்பமும் நாளுக்கு நாள் கூடி வருத்துகின்றது. இந்தத் துன்பத்திலிருந்து விடுபட வேண்டுமானால் மெய்ப்பொருளான் தெய்வ நிலையை உணர்ந்து அதனைப் பற்றி நிற்க வேண்டும். வேறு ஒரு மாற்று வ்ழியுமில்லை. 

பரிணாமமடைந்த தோற்றங்களில் ஒன்றைப் போல் மற்றும் பல தோற்றங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்றை விளக்க வேண்டுமானால் அதைப் போல ஒத்திருக்கும் மற்றொன்றைக் காட்டி இது போலவென்று கூறலாம். ஆனால் எல்லாப் பரிணாமங்களுக்கும் முதலும் மூலமும் ஆகிய தெய்வ நிலையோ ஒன்றே ஒன்றுதான். எந்த வகையிலும் அது போல் ஒத்த மற்றொரு பொருள் இல்லை. அதனால் உவமையால் விளக்க முடியாது. இந்தக் கருத்தில் தான் "தனக்குவமையில்லாதான்" என்று தெய்வ நிலையைப் புகழ்படக் கூறியுள்ளார்.

மற்றொரு நிலையை உவமை காட்டி இதுபோலான என்று கூறி விளக்கலாம். ஆனால் அவ்வாறு உவமை காட்டி கூறவொண்ணாத பெருமை வாய்ந்த பரம்பொருளை உணர்ந்து பற்றி நின்றாலொழிய மனக்கவலைகளை மாற்றி அமைதியான் வாழ்வு பெற, வேறு மாற்று வழியில்லை என்பதே இந்தக் குறளின் கருத்தாகும்.

சூரிய ஒளியினால் சூடு பெற்றுக் கடலிலிருந்து ஆவியாக மாறி மேகமாகி அது குளிர்ந்து மழையாகி எந்த இடத்தில் மழையாகப் பெய்தாலும் அந்த நீர், தனக்குப் பிறப்பிடமாகிய கடலை நாடியே ஓடுவதுபோல, இறை நிலையிலிருந்து புறப்பட்டு பல தலைமுறைகளாக சீவன்களில் இயங்கி, மனிதனிடம் இறுதியாக வந்து இயங்கிக் கொண்டிருக்கும் சிற்றறிவு, முற்றறிவான் இறைவனை நாடியே அலைகின்றது. அத்தகைய வளர்ச்சி நிலையில் உடல் தேவைக்கான பொருள், புலன் இன்பம் இவற்றில் ஈடுபடுகிறது. இங்குதான் அறிவானது தான் போக வேண்டிய இடத்தை மறந்து, அடுத்தடுத்து தொடர்பு கொண்ட பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றோடு தொடர்பும், மேலும் பொருள்களும் இன்பமும் எளிதாக மேலும் மேலும் உழைக்காமலே கிடைக்கக் கூடிய வழிகளாகிய அதிகாரம், புகழ் இவற்றின் மீது நிறைவு பெறாத அவாவையும் பெருக்கிக் கொள்ளுகிறது. எவ்வளவுதான் பொருளோ புலன் இன்பமோ, புகழோ, அதிகாரமோ அமைந்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் உயர்வாக வேண்டும் என்ற உணர்ச்சி வயமான மன அலையில் இயங்குகிறது. இதனால் அளவு மீறியும் முறை மாறியும் ஞானேந்திரியங்களையும் கர்மேந்திரியங்களையும் பயன் படுத்த அவைகள் பழுதுபட்டு உடல் துன்பம், மன அமைதியின்மை, செயல் திறமிழத்தல் இதனால் சமுதாயத்தில் மதிப்பிழத்தல் ஆகிய குறைபாடுகளோடு வருந்திக் கொண்டே இருக்க வேண்டியதாகிறது. மெய்யுணர்வு பெற்ற குருவழியால் அறம் பயின்று இறைநிலை விளக்கமும் பெறும் போதுதான் தடம் மாறிய மன ஓட்டம் நேர்மையான இயக்கத்திற்கு வரும். துன்பத் தொடரிலிருந்து விடுதலை கிடைக்கும்; வேறு எந்த வழியும் மனிதன் உணர்வதற்கு இல்லை. இந்தக் கருத்தைத் தான் வள்ளுவர் இறைநிலையறிந்து அதன் வழிவாழ்ந்தால் அன்றி வேறு எந்த வகையிலும் மனக்கவலை மாறாது என்று கருணையோடு எடுத்துரைக்கின்றார்.

மேலும்: அஷோக்

ஒப்புமை
திருநாவுக்கரசரின் திருப்புள்ளிருக்குவேளூர் திருக்குறுந்தொகைப் பாடல் ஒன்று இதே கருத்தை ஒட்டி, இவ்வாறு செல்கிறது.

தன்னுறுவை ஒருவர்க்கறிவொணா
மின்னுருவனை மேனி வெண்ணீற்றனைப்
பொன்னுருவனைப் புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க் கில்லை இடர்களே

“நின்னொடு, புரையுநர் இல்லாப் புலமைநோய்”(முருகு. 279-80)
“தன்னேர் பிறர் இல்லானை” (சம்பந்தர். மீயச்சூர், 3)
“மற்றாரும் தன்னொப்பார் இல்லா தானை” (அப்பர்.பெரியதிருத் 2)
“தன்னானைத் தன்னொப்பார் இல்லா தானை” (அப்பர்.திருவாரூர் 2)
“ஓர் உவமனில்லி” (அப்பர்.வினாவினை.10)
“தனையொப் பாரை இல்லாத் தனியை” (திருவா 442)
“ஒப்புனக் கில்லா ஒருவனே” (திருவா 538)
”தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்” (திருமந்திரம் 7)
“ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா” (திருவாய் 2.3:2)

”வந்தனை அவன்கழல் வைத்த போதலால்
சிந்தைவெங் கொடுந்துயர் தீர்க லாதென்றான்” (கம்ப.பள்ளியடை.58)

குறிப்பு
தனக்கு உவமை இல்லாதவன் என்றது, தனக்கு மிக்காரும் இல்லாதான் என்னும் கருத்தையும் உட்கொண்டது. அவனை ஒப்பாரும் மிக்காரும் இருப்பின் அவர்பாற் சென்று கவலையைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் எழ இடம் உண்டு. அவ்வாறு யாரும் இன்மையின் அவன் ஒருவனே கவலையை மாற்றுவான் என்றபடி.

மனக் கவலையைக் கூறியமையின், சேர்தல் அதன் தொழிலாகிய நினைத்தலைக் குறித்தது.

பரிமேலழகர் உரை
தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
விளக்கம்
("உற்றபல தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.)

மணக்குடவர் உரை
தனக்கு நிகரில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது மனத்துண்டாங் கவலையை மாற்றுத லரிது. வீடுபெறலாவது அவலக்கவலைக் கையாற்றினீங்கிப் புண்ணிய பாவமென்னுமிரண்டினையுஞ் சாராமற் சாதலும் பிறத்தலுமில்லாத தொரு தன்மையை யெய்துதல். அது பெறுமென்பார் முற்படக் கவலை கெடுமென்றார். அதனால் எல்லாத் துன்பமும் வருமாதலின்.

மு.வரதராசனார் உரை
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
எதிலும் ஒப்பற்று விளங்குவதே மகிழ்ச்சியின் அடிப்படை

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தனக்கு உவமை இல்லாதான் - ஒருவகையாலும் தனக்கு ஒப்பில்லாத இறைவனுடைய; தாள் சேர்ந்தார்க்கல்லால் - திருவடிகளை யடைந்தார்க்கல்லாமல்; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழுந்துன்பங்களையும் அவற்றாள் ஏற்படும் கவலையையும் நீக்குதல் இயலாது.

இம்மைக்கும் மறுமைக்கும் உரிய எல்லாப் பொருள்களையும் நலங்களையும், எல்லார்க்கும் என்றும் வரையாதளிக்கக்கூடிய வள்ளல் இறைவன் ஒருவனேயாதலின், அவனையடைந்தார்க்கல்லது துன்பமுங் கவலையும் நீங்காவென்பதாம்.

அருமைச் சொல்லிற்குரிய சின்மை இன்மையென்னும் இரு பொருள்களுள், இங்கு வந்துள்ளது இன்மை.

சாலமன் பாப்பையா உரை
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

கறை கரைந்து காணும் தெய்வம்!

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓரமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்.
நித்தம் நித்தம் உயிருடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வளவு அழகான கவியாய் வடித்திருக்கிறார் பேருண்மையை!

எண்ணம் என்ற மூலம் என்னிடத்தில் இருக்கும் வரை அது எனது எனது என்று என்னையே நினைத்து, என்னைச் சுற்றி வருகிறது.
ஆனால் அதே எண்ணத்தை என்பால் அகற்றி எல்லாமுமான இறையவனை நினைக்கும்போது...
"ஓரு அமைதி" கிட்டுகிறது.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்பின் கிட்டும் அவ்வமைதி பேரமைதி.

அந்த அமைதி நிலையில் நிலைத்து நிற்க. "எழுமின், விழிமின்" என நிலையில் விழிப்புடன், வழிமேல் விழி வைத்து நிற்க, தானாக ஏற்படும் நிறைநிலை. மெய்பொருள் யாதென உணந்திடும் தற்செயலும் இறை செயலேயாம்.

ஒருமுறை அந்நிலையை அடைந்து விட்டால், அந்நிலையை அடுத்து பழகப்பழக, காணும் காட்சியும், நுகரும் நாற்றமும், கேட்கும் ஒலியும் என எல்லாவற்றிலும் நந்தலாலா.

பின் எல்லாக் கறைகளும் களைந்தாயிற்று என்றால், தன் முனைப்பு தானாய்க் கரைந்து போகும்.
கண்ணுக்கினியவனை கண்ணாறக் கண்டு கைக்கொளலாம்!

No comments:

Post a Comment