பற்றுக பற்றற்றான் பற்றினை

குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு.
[அறத்துப்பால், துறவறவியல், துறவு]

பொருள்
பற்றுதல் பிடித்தல்; பயனறுதல்; ஊன்றிப்பிடித்தல்; ஏற்றுக்கொள்ளுதல்; மனத்துக்கொள்ளுதல்; தொடுதல்; உணர்தல்; தொடர்தல்; நிறம்பிடித்தல்; தீமுதலியனமூளுதல்; தகுதியாதல்; ஒட்டுதல்; பொருந்துதல்; போதியதாதல்; உறைத்தல்; உண்டாதல்; பொறுத்தல்.

பற்றுக – (பற்றை அறுக்கவேண்டுமாயின் ) பற்றிக்கொள்க

பற்று - பிடிக்கை; ஏற்றுக்கொள்கை; அகப்பற்றுப்புறப்பற்றுகளாகியவிருப்புகள்; சம்பந்தம்; ஒட்டு; பற்றாசு; பசை; சமைத்தபாண்டத்தில்பற்றிப்பிடித்திருக்கும்சோற்றுப்பருக்கை; சோற்றுப்பருக்கைஒட்டியுள்ளபாத்திரம்; உரிமையிடம்; தங்குமிடம்; பலஊர்களுடையநாட்டுப்பகுதி; பெற்றுக்கொண்டபொருள்; பற்றுக்கோடு; தூண்; அன்பு; நட்பு; வீட்டுநெறி; செல்வம்; இல்வாழ்க்கை; வயல்; கட்டு; கொள்கை; மருந்துப்பூச்சி; வாரப்பாடல்; சிற்றூர்; கலவைச்சுண்ணாம்புவகை.

பற்றற்றான் – வேண்டுதல் வேண்டாமை இலானை (நினைவு கொள்க வேண்டுதல் வேண்டாமை இலானடி) / பற்று அற்றவன் 

பற்றினை – அவன்மேல் மட்டும் பற்று கொள்க

அப்பற்றைப் – அவன்மேல் கொள்ளும் அப்பற்றையும் 

பற்றுக – பற்றிக்கொள்ளுக

விடுதல் நீங்குதல்; நீக்குதல்; விலக்குதல்; பிரித்தல்; கைவிடுதல்; போகவிடுதல்; அனுப்புதல்; பந்தம்விடுதல்; நிறுத்துதல்; ஒழித்துவிடுதல்; முடித்தல்; வெளிவிடுதல்; செலுத்துதல்; எறிதல்; சொரிதல்; கொடுத்தல்; சொல்லுதல்; வெளிப்படக்கூறுதல்; விவரமாகக்கூறுதல்; இசைவளித்தல்; காட்டித்தருதல்; வெளிப்படுத்துதல்; பிரிதல்; புதிர்விள்ளுதல்; கட்டுஅவிழ்தல்; மலர்தல்; உண்டாக்குதல்; மிகுதல்; தங்குதல்; தவிர்தல்; பிளந்திருத்தல்; பலம்குறைதல்; அறுபடுதல்; விலகுதல்; துணைவினை; விடுதலை.

பற்று விடற்கு – பற்றென்னும் நிலையாமையை துறப்பதற்கு

பற்றை விடவேண்டுமென்றால் பற்றறவவன் மீதான பற்றை பற்றிக்கொள்ளுக” என்று வள்ளுவர் சொல்கிறார். இங்கே பற்றற்றான் என்ற சொல்லுக்கு இறைவன் என்றே பரிமேலழகர் போன்றோர் உரை கூறுகின்றனர். ஆனால் பற்றறுத்த ஞானாசிரியன் என்ற பொருளும் பொருந்துவதே. பற்றற்றவனை பற்றுதல் என்பது பற்றறுக்கும் வழியேதான் என்பதற்கு மேல் உங்கள் கேள்விக்கு ஓர் ஆணித்தரமான பதில் தேவையா என்ன?

ஆனால் ஆன்மீகப் பயணத்தின் இறுதிப்படிகளில் குரு நம்மை விட்டுவிடுவார். நடக்க ஆரம்பித்த குழந்தையை அம்மா விட்டுவிடுவதுபோல. அதன் பின் சீடன் அவனது மெய்ஞானத்தையும் மீட்பையும் அவனே கண்டடைய வேண்டியதுதான். அந்தப்பயணம் முற்றிலும் தனியானது. அங்கே குரு என்றல்ல இறைவனும்கூட இல்லை.

குறளின் பல பாடல்களுக்கு சமணமதத்தின் கோணத்தில் பொருள்கொண்டால் மிக எளிதாகப்புரியும். இன்று நாம் கொண்டிருக்கும் இறை என்னும் கோணத்தில் பொருள்கொள்வதன் சிக்கல் நீங்கள் கொண்டிருப்பது.

இந்து தெய்வங்களில் எதையும் பற்றற்றான் என்று சொல்லமுடியாது. கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களில்கூட அளவற்ற அருளாளன், பெருங்கருணையாளன் என்றே தெய்வம் குறிப்பிடப்படுகிறது.

சமணர்களுக்கு ‘தெய்வங்கள்’ இல்லை. அவர்களுக்கு அருகர்களே முதன்மை வழிபாட்டுருவங்கள். அவர்கள் பற்றறுத்தவர்கள். முற்றிலும் பற்றறுத்தமையால்தான் அவர்கள் தெய்வத்திருக்கள் ஆனார்கள்.

சமண மதத்தில் அன்றாட வழிபாட்டுக்கு, வேண்டுதல்களுக்கு தீர்த்தங்காரர்களின் காவல்தேவதைகளான யட்சிகளையும் தேவர்களையுமே வழிபடுவார்கள். தீர்த்தங்காரர்களிடம் எதையும் வேண்டிக்கொள்ளலாகாது. அவர்களை வழிபடுவது உலகத்தின் பற்றிலிருந்து விடுபடுவதற்காக மட்டுமே. அந்த வீடுபேற்றை மட்டுமே அவர்களிடம் கோரவேண்டும்.

உதாரணமாக, பார்ஸ்வநாதரிடம் நாம் வாழ்க்கைநலன்களை வேண்டக்கூடாது. வாழ்க்கைப் பற்றை அறுத்து மீள்வதற்கான ஞானம், வைராக்கியம், தவம் ஆகியவற்றையே கேட்கவேண்டும். அவருடைய யட்சியான பத்மாவதி அனைத்துச் செல்வங்களையும் அருள்பவள்.

பற்றறுத்த தீர்த்தங்காரர்களைப் பற்றிக்கொள்க, இவ்வுலகத்துப் பற்றுகளை விட்டுவிடுவதற்கான வழி அதுவே—நேரடியாக இக்குறளின் பொருள் இதுதான்.

ஒப்புமை
”உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை
மற்றது தோய்த்துக் கழுவுதல் என்னொக்கும்
பற்றினா னாகிய பாவத்தை மீட்டும்
பற்றொடு நின்று பறைக்குறு மாறே” (வளையாபதி)

“மணஞ்சேரி, பற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே” (சம்பந்தர்.மணஞ்சேரி.10)

“திரு ஆப்ப னூரானைப் பற்றும் மனமுடை யார்வினை
பற்றறுப் பாரே” (சம்பந்தர்.ஆப்பனூர் 1)

“பலவும்பய னுள்ள பற்றும் ஒழிந்தோம்
கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக்
குலவும்பொழில் கூழ்ந்த குரங்கணில் முட்டம்
நிலவும்பெரு மானடி நித்தல் நினைந்தே” (சம்பந்தர்.குரங்கணில் முட்டம்)

“காழி அமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே” (சம்பந்தர்.சீகாழி 4)

“பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்
தேடு வார்பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர்
ஆடு வான் ஆடி அடைந்தனம் அல்லல்ஒன் றிலமே” (சம்பந்தர்.தேவூர் 5)

“கோழம்பம் பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே” (சம்பந்தர்.கோழம்பம் 8)

“பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்” (திருமந்.298)

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
உலகப் பொருட்கள் மீது பற்றுள்ள வரையிலும் மெய்ப் பொருளான இறைநிலையை உணர முடியாது. பிறப்பு இறப்பு எனும் வாழ்க்கைக் கடலைக் கடக்க முடியாது. உடல், உயிர், சீவகாந்தம் மூன்றும் கூடிய சீவனின் உடலுக்கு, பிறப்பு முதல் இறப்பு வரையில் பெரும்பாலும் துன்ப அனுபவங்களாகவே இருக்கின்றது. இந்த உண்மையை ஒரு பேரறிஞர் தொகுத்துக் கூறியிருக்கிறார் ஒரு கவியின் மூலம்.

" வேதநூல் பிராயம் நூறு
மனிதர்தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றுஅதில் பதினை யாண்டு
பேதை பாலகன் அதாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகர் உளானே ! "

இது ஒரு பக்திப் பாடலாக இருந்தபோதிலும் மனித வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை விளக்கிக் கூறுகிறது.

"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு" என்ற குறளில் இறைநிலையுணர்வும், பொருட்கள் மீது பற்று விட்டு மனம் தூய்மை பெற வேண்டியதும் ஒன்றிணைந்து பேறாக உணர்த்தப்பட்டுள்ளன. 

இறைநிலையை அதன் பேரியக்கச் சிறப்புகளை அதன் வியத்தகு விளைவுகளை ஐயமின்றி ஒருவர் உணர்ந்து கொண்ட பின்னர்தான் உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் நீங்கும். பிறவிக் கடலையும் கடக்க முடியும். பொருள் பற்று உடையவர்கள் அடிக்கடி உலகப் பொருட்கள், மக்கள், புலன் இன்பம் இவற்றை நினைந்து நினைந்து மனதை அவற்றிலேயே ஈடுபடுத்திக் கொண்டுருப்பார்கள். ஒவ்வொரு நினைவும் அவர் கருமையத்தில் வினைப் பதிவாகி அது அடிக்கடி மூளை செல்கள்  மூலம் அவ்வப்போது எண்ணங்களாக மலர்ந்து கொண்டிருக்கும். இதனால் மனம் களங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். இக்களங்கமே இறைநிலையை உணர முடியாத தடையாக அமையும். இதனை அழுகணி சித்தர் ஒரு கவியின் மூலம் விளக்குவதை உணர்வோம். 

"காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ
நாட்டார் நம்மை மறித்து நகை புரியப் பார்த்தாலும்
காட்டனை மேலேறி என் கண்ணம்மா
கண் குளிரப் பாரேனோ"

காட்டான் என்றால் உருவமற்றவன் தன் இருப்பை உணரக் காட்டிக்க் கொள்ளாதவன் என்பதாகும். இத்தகிய காட்டான் எனும் உருவமற்ற நிலை பேரியக்க மண்டலம் முழுவதிலும் நிறைந்து இறைவன்(இறைவெளி) ஆகவும், ஒவ்வொரு சீவனிலும் அறிவாகவும் இருக்கிறது. எனவ்வே காட்டான் என்ற சொல் அறிவையும் குறிக்கும். இறைவனையும் குறிக்கும்.

காட்டன் எனும் அறிவானது பேரியக்க மண்டல தத்துவங்களில் பஞ்ச பூதங்களாக உள்ள நிலம், நீர், வெப்பம், காற்று, விண் என்ற ஐந்து நிலைகளையும் தாண்டி இவற்றிற்குப் பிறப்பிடமாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து அதனோடு இணைய முயலும்போது எனது வாழ்க்கையில் நான் பற்று கொண்டு அனுபவித்த வினைப்பதிவுகள் எல்லாம் எண்ணங்களாக அடுத்தடுத்து தோன்றுகின்றன. இந்த நிகழ்ச்சி எப்படியிருக்கின்றதென்றால் எனது வினைப் பதிவுகளிலிருந்து எழும் எண்ணங்கள் என்னை நோக்கி நீ எங்களையெல்லாம் தாண்டிப் போய் கடை நிலையாகவுள்ள பரம்பொருளை உணர்ந்து கொள்ள முடியுமா என்று தடுத்து நிறுத்தி என்னைப்பார்த்து ஏளனமாகச் சிரிப்பது போல் உள்ளது. எப்படியாயினும் எனக்கு உறுதியிருக்கிறது. வினைப்பதிவுகள் என்ற தடைகளை வினைத்தூய்மை, மனத்தூய்மை இவற்றால் நீக்கிகொண்டு என் அறிவைக் கொண்டே இறைவனை அடைவேன் என்ற கருத்தே இக்கவி. உலகப் பொருட்கள் மீது உள்ள பற்றுக்கள் எவ்வாறு இறைநிலையுணரும் பேற்றைத் தடுக்கின்றது என்பதை விளக்குவதற்கே உவமையாக இந்த அழுகணி சித்தர் பாடலை நினைவு படுத்தியுள்ளேன்.

மறை பொருட்களை உணரத் தக்க ஆறாவது அறிவோடு வாழும் உயர்ந்த பிறவியை பெற்ற மனிதனுடைய பிறவியின் நோக்கம் மிக உயர்ந்ததாகும். அது இறை நிலையான மெய்ப்பொருளை உணர்ந்து அறிவின் முழுமையைப்பெற்ற, பிறப்பு இறப்புத் தொடரை அறுத்து விட வேண்டுமென்பதேயாகும். பொருள் பற்றுப் பதிவுகள் அடிக்கடி ஒருவருக்கு எழுந்தால் மனமானது அந்தப் பொருளை அடிக்கடி நினைந்து நினைந்து அதை அடைவதற்கும் அனுபவிப்பதற்கும் தனது ஆற்றலை வாழ்நாள் முழுவதும் செலவிட வேண்டி இருக்கிறது. இதனால் இறைநிலையை நாடுவதற்கும் அதனை உணர்வதற்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை. எனவே இறைநிலையை உணர்வதற்கும் பிறவிக் கடலை நீந்துவதற்கும் பொருள் பற்றை நீக்கி மனத்தூய்மை பெற வேண்டும். இந்த உயர்ந்தப் பேற்றினை பெறுவதற்கு ஒருவர் தானாக் முயன்றால் அந்நிலை கிட்டுவது அரிது. ஏனெனில் அத்தகைய அறிவின் முழுமைப்பேறு போதனை முறை, சாதனை முறை இரண்டும் இணைந்ததாகும். எனவே இந்த உயர்ந்த அறிவு நிலையைப் பெற அறிவில் முழுமை பெற்று பற்று நீங்கிய ஒரு வழிகாட்டியான ஞானாசிரியர் துணை வேண்டும். எனவே முறையாகப் பயின்று பற்று விட்டு வாழும் ஒரு ஞானாசிரியரைப் பற்ற வேண்டும். இந்த நுட்பத்தை உணர்த்துவதே இந்த குறளில் முதற் பகுதில் வரும் "பற்றுக பற்றற்றான் பற்றினை" என்பதாகும்.

வினைப்பயனாகத் தொடர்ந்து வரும் பிறவிக் கடலை நீந்த வேண்டும் என்ற பெருநோக்கம்கொண்ட இறை வேட்பாளருக்கு ஞானாசிரியர் தரும் ஒரு நாள் போதனையால் மட்டும் பற்று விட்டு மனம் தூய்மை அடைந்து விடும் என்று கருத முடியாது. பற்று நீக்குவது போதனை முறை மட்டுமல்ல. சாதனையும் வேண்டும். ஞானாசிரியர் உடனிருந்து அவர் வாழ்க்கை முறையினைப் பின்பற்றி நடந்து பயிலவேண்டும். அத்தகைய நிறைவான அறிவு நிலையைப் பெறும் வரையிலும் ஞானாசிரியர் தொடர்பை விட்டு நீங்காமல் அவரை பற்றி நின்று பயன் காண வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார் குறளாசிரியர். இக்குறளின் கடைப் பகுதியான "அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" என்று, நீ முழுமை பெற்று உனது பொருள் பற்று நீங்கி இறையுணர்வு பெற்று வெற்றியடையும் வரையில் ஞானாசிரியரை பற்றி நில் என்பதே இக்குறளின் பொருள்.

மேலும்: அஷோக்
மேலும்: குவியல்கள்


“எதையும் மிச்சமில்லாமல் விட்டுச்செல்வதற்கு பெயர் தவம். அது முனிவராலேயே இயலும்” என்றார் இளைய யாதவர். “பிறர் தங்கள் விழைவுகளையும் கனவுகளையும் விட்டுச்செல்கிறார்கள். ஏக்கங்களையும் வஞ்சங்களையும் நிலைநாட்டிச் செல்கிறார்கள்.” யுதிஷ்டிரர் “நான் எதிலிருந்தும் விடுபட்டவனல்ல. என் துயரெல்லாம் என் பற்றுகளால் உருவாவதே. பற்றறுக்க என்னிடம் சொல்லவேண்டியதில்லை. என் குடிகளை, நிலத்தை, இளையோரை, அரசியரை, மைந்தரை உளம்துறந்துவிட்டு நான் அடைவதொன்றுமில்லை” என்றார். “எங்கு பற்றிருக்கிறதோ அங்கே துயருள்ளது. எதில் பற்று மிகுகிறதோ அதிலேயே மிகுதுயரும் எழுகிறது. துயரென்பது பற்றின் மறுவடிவம் மட்டுமே” என்றார் இளைய யாதவர்.


அத்வைதம்

திருமூலர், திருவள்ளுவர் அறிவுரை

மொத்தத்தில் விஷயம் என்னவென்றால், அத்வைதந்தான் குறி என்றோ, அல்லது அத்வைதம் வேண்டவே வேண்டாம் என்பதாக த்வைதமே குறியாகவோ ஒரு ஜீவன் எப்படி நினைக்கிறானோ அதற்கேற்பத்தான் அவர்களுக்கு அத்வைத அல்லது த்வைத ஸித்தியை ஈச்வரன் அருளுகிறான்

"ஆசை அறுமின்கள்!ஆசை அறுமின்கள்!
ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்!"

என்று திருமூலர் சொன்னதும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

என்று திருவள்ளுவர் சொன்னதும் ஒன்றுக்கொன்று வித்யாஸமாயிருப்பதாகத் தோன்றினாலும், இப்போது நாம் பார்த்துக்கொண்டு வந்த இரண்டு விதமானவர்களில் ஒவ்வொருத்தரை உத்தேசித்துச் சொன்னதுதான். இப்படிப் புரிந்துகொண்டால் இரண்டு உபதேசமுமே ஸரியானதுதான் என்று தெரியும்.

"ஸத்ய தத்வம் வாஸ்தவத்தில் எப்படியிருக்குமோ அப்படியே நமக்குத் தெரியட்டும். நாம் அதை ஸகுணமாக நினைத்து த்வைதமாக பக்தி பண்ணினாலும் அது நிர்குணமாக இருந்து அத்வைதமான ஞானத்தினால்தான் அடையத்தக்கதாக இருந்தால் நாம் அதை அப்படி அடையும்படியாகவே அது பண்ணுமானால் பண்ணட்டும்" என்று நினைப்பவர்களுக்கு அல்ல திருமூலரின் உபதேசம். ஸகுணமான ஈச்வரனிடம்தான் பற்று வைப்பது என்பதாக (பக்தி எனும்) தங்களுடைய ஸாதனா மார்க்கத்திலேயே பிடிவாதமான பிடிமானம் உள்ளவர்களைப் பார்த்தே திருமூலர் உபதேசம் செய்திருக்கிறார். "இப்படிப் பண்ணாதீர்கள்!ஈச்வரனிடமே யானாலும்கூட ஸகுணமாகத்தான் அவன் நமக்கு வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டு விடாதீர்கள். 'அந்த ஈச்வரனுக்கும் இன்னொரு ஸ்வரூபம், இந்த ஈச்வர ஸ்வரூபத்தைவிடவும் ஸத்யமான ஒரு ஸ்வரூபமிருக்குமானால் அதன் அநுபவம் நமக்குக் கிடைக்கட்டும்' என்று திறந்த மனஸோடு இருங்கள்" என்பதைத்தான் 'ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்" என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆசைப்பட்ட லக்ஷ்யத்தைத்தான் ஈச்வரன் கொடுப்பான், அதற்கு மேலே கொடுக்க மாட்டானாதலால், அவனாகிய ஸகுண ஸ்வரூபத்திலே ஆசை வைத்தால் அதற்குமேல் பெற முடியாது என்ற அபிப்ராயத்தில் சொல்கிறமாதிரி இருக்கிறது.

எல்லாவிதமான ஆசையும் போகவேண்டும், (ஆசை யெல்லாம் போவதென்றால் மனஸ் போனால்தானே முடியும்? - இப்படி மனஸ் அடிபட்டுப் போய் ஞானஸித்தி பெற வேண்டுமென்று லக்ஷ்யம் வைத்துக்கொண்டிருப்ப -வர்களைப் பார்த்து ஆசார்யாள் ஞானத்துக்கு ஸகுணோபாஸனையை உபாயமாக வைத்தார். அவர்களை உத்தேசித்தேதான், ஆசார்யாளைப்போலத் திருவள்ளுவரும் ஈச்வரனிடம் பற்று வைக்கச் சொல்கிறார். இவர் 'அட்வைஸ்' பண்ணுகிறவர்களுக்கு ஈச்வரனிடம் பற்று இருந்தாலும் அதுவே லக்ஷ்யம் என்று வைத்துக்கொண்டு விடவில்லை. எல்லாப் பற்றும் அற்றுப்போன ஸ்திதிதான் அவர்களுடைய லக்ஷ்யம். அதே மாதிரி அப்போது அந்த ஈச்வரனும் இவர்களை த்வைதப் பற்றுடன் நிறுத்திவிடுவதில்லை. த்வைதப் பற்றோடு நின்று போககிறவர்களிடம் அவனும் அப்படி த்வைதமான பற்றுள்ளவனாகத்தான் தன்னையும் நிறத்திக்கொள்கிறான். எப்போதும் அவர்களுடைய பக்தியை ஏற்பது, தாஸ்யத்தை ஏற்பது, கருணை செய்வதுஎன்றால் அவனும் த்வைதப்பற்றுறவுதானே அவர்களிடம் வைத்திருப்பதாக அர்த்தம்? ஆனால் அங்கே திருவள்ளுவரோ அவனைப் பற்றற்றான்" என்றே சொல்கிறார். கடவுள் என்றோ, பகவான் என்றோ, ஆண்டவன் என்றோ எந்த வார்த்தையாலும் ஈச்வரனைச் சொல்லாமல் "பற்றற்றான்" என்றே இங்கே அத்விதீய வஸ்துவாகப் பெயர் கொடுத்திருக்கிறார். 'c ஈச்ரவன் என்று பற்றிக்கொள்வதன் வாஸ்தவத்தில் பற்றற்ற அத்வைத ஸ்வரூபம்.. அதனால் c லக்ஷ்யமாகக் கொண்டிருக்கிற பற்றற்ற அத்வைத ஸ்திதியில் உன்னை அவன் சேர்த்துவிடுவான். பற்று அறுக்க விரிம்பியும் முடயாதவர்கள் ஞானத்துக்கே நேரே ப்ரயாஸை பண்ண வேண்டியதில்லை. அவர்களுடைய லக்ஷ்யமான பற்றற்ற பொருள்தான் பற்றும் படியாக ஈச்வரனாக ஆகியிருப்பது. இப்படி 'ஆகியிருப்பதாக' இல்லாமல் உள்ளபடி இருப்பதான நிலையில் அந்த ஈச்வரனே 'பற்றற்றான்' என்பதை மறந்து போகாமல் அவனை பக்தியில் பற்றிக்கொண்டால் அவனே பற்றுவிட்ட ஞானத்துக்குத் தூக்கி விடுவான்" என்று இத்தனை அபிப்ராயத்தையும் உள்ளே அடக்கித்தான் ரத்னச் சுருக்கமாக இருண்டு வரி பண்ணிவிட்டார்.

ஆசையிலேதான் ஆரம்பித்தோம். அனர்த்த பரம்பரை அதிலிருந்துதான் என்று ஆரம்பித்து எத்தனையெத்தனையோ தினுஸாக ஆசைகளைப் பற்றிப் பார்த்தோம். ஆசையின் அந்த அஸுர பரம்பரைகளை தேவ சக்திகள் என்று சொல்லக் கூடிய உயர்ந்த நல்ல குணங்களால் ஜயித்து அடக்க வேண்டுமென்று பார்த்தோம். கடைசியில் பார்த்தால் அந்த நல்ல குணங்களான தேவ கணங்களும்கூடக் கெடுதல் பண்ணிவிடமுடியும். எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிற ஈச்வரனிடம்கூட ஆசை என்று வைத்துவிட்டால் ஸத்ய ஸாக்ஷ£த்காரம் கஷ்டம்தான் என்கிற அளவுக்குத் தெரிகிறது. நம்முடைய குறி ஆதார ஸத்யந்தான் என்று திர்மானமாக வைத்துக் கொள்ளாவிடடால் நம்முடைய மற்ற குறிகளை நாம் அடையப் பண்ணியே ஈச்வரன் மாயம் செய்துவிடுகிறான் என்று நினைக்கும்படியாக இருக்கிறது. இப்படிப் பலகாலம் பண்ணினாலும், அப்புறம் 'ஐயோ, பாவம்' என்று அவனே உண்மையான, குறிதப்பாத ஞானதாஹத்தைக் கொடுத்து, அப்புறம் அதைப் பூர்த்தி செய்வானென்று வைத்துக்கொள்ளலாம்.

என்றாலும் அவன் என்றைக்கோ அப்படிச் செய்கிறபடிச் செய்யட்டுமென்று இருந்துவிடாமல் நாமும் இடைநிலை ஸாதனைகளில் அல்லது ஸாதனைகளின் இடைநிலையில் பெற்ற அநுபவங்கள் சக்திகள் முதலியவற்றிலேயே ஆசை மோஹம் கொள்ளாமல், ஆசைக்கே இடம் தராததான அத்வைத லக்ஷ்யத்தை அப்போதப்போதும் நினைத்து உறுதிப்படுத்திக் கொள்வதுதான் ச்லாக்யம். அதுதான் விவேகம்.

“பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். உள்ள பற்றுகளை அகற்றுவதற்கே, அப்பற்றைப் பற்ற வேண்டும்.” (பற்று: ஆசை, பற்றுதல்: இறுக்கப் பிடித்துக் கொள்ளுதல் அல்லது பாச, பந்தங்களை விடுதல்)

இராமனின் கருணை (ஆன்மீக கருத்துக்கள்)
ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை. எனவே உறவுகளை எல்லாம் விட்டொழித்து ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு; அவன் தாங்களையே சரணமாகப் பற்றுகிறேன் என்கிறான்.

ஸோ ஹம் பருஷிதஸ் தேந
          தாஸவச்சாவமாநித: I
த்யாக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச
           ராகவம் சரணம் கத: II

பொருள்: (பற்று கொளற்கு) பற்று அற்றான் பற்றினை பற்றுக‡ (வேண்டிய) பொருள்களை அடைவதற்குப் பற்று அற்று நிற்பவனது பற்றுக் கோட்டினைப் பற்றுக ; பற்று விடற்கு(ம்) அப் பற்றை(யே) பற்றுக - உலகப் பொருள்களின் பற்றை விடுவதற்கும் அப் பற்றுக்கோட்டினையே பற்றுக.

அகலம்: பற்றுக் கோடு -பற்றும் கொம்பு. அப் பற்றையே என்பதன் ஏகாரமும், விடற்கும் என்பதன் உம்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. ‘அப் பற்றை’ என்றமையால், ‘பற்றுக் கொளற்கு’ என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது. துறவதிகாரத்தின்கண்ணே பொருள்களைக் கொள்ளுதலைக் கூறுவானேன் என்னின், பொருளில் லாதார் துறவார், துறத்தற்கு அவர்பால் ஒன்றும் இன்மையான். பொருள் இல்லாதார் துறக்க வேண்டின், அவர் துறப்பதற்குரிய பொருள்களை முன்னர்க் கொள்ளல் வேண்டும். பற்று என்னும் சொல் மீண்டும் மீண்டும் வருதலால் இது சொற்பொருட்பின் வரு நிலை யணி.


கருத்து: பொருட்பற்றை விடுதற்கும் பொருளைக் கொள்ளுதற்கும் கடவுளைப் பற்றுக.

பரிமேலழகர் உரை
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை, 'இதுவே நன்னெறி' என்று மனத்துக் கொள்க; அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தால் செய்க, விடாது வந்த பற்று விடதற்கு. 
விளக்கம்
(கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் 'பற்றற்றான்' என்றார். 'பற்று அற்றான் பற்று' என்புழி, ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் 'பற்று' என்றது, பற்றப்படுவதனை 'அதன்கண் உபாயம்' என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும்உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருள்களையும் பற்றி நின்றே இயல்பாகப் பற்றில்லாதவனாகிய இறைவனிடத்துப் பத்தி செய்வதை மனத்திற் கொள்க ; பற்று விடற்கு - விடாது தொடர்ந்து வரும் ஆசைப் பிணிப்பு முற்றும் நீங்குதற்கு ; அப்பற்றைப் பற்றுக - அவ்விறைவன் பத்தியையே ஊழ்க ஒன்றுகைகளால் ( தியான சமாதிகளால் ) இறுகக் கடைப்பிடிக்க.

சார்ந்ததன் வண்ணமாதல் ஆதன் ( ஆன்மா ) இயல்பாதலால், பற்றற்றானைப் பற்றினவன் தானும் பற்றற்றானாவன் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

மணக்குடவர் உரை
பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக. பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.

மு.வரதராசனார் உரை
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.

4 comments:

  1. மிக்க நன்றி இவ்வளவு பெரிய விளக்க உரை கொடுத்தமைக்கு தமிழ் தாயே நமக்கு சகல ஞானம் அருளட்டும் நன்றி

    ReplyDelete
  2. நன்றி அன்புநிலவன்

    ReplyDelete
  3. Paasamaai pattrarutha aryanae, avan sivan

    ReplyDelete
  4. Paasamaai pattrarutha aryanae, (thiruvasagam), sivan

    ReplyDelete