இடும்பைக்கே கொள்கலம்

குறள் 1029
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு
[பொருட்பால், குடியியல், குடிசெயல்வகை]

பொருள்
இடும்பை - துன்பம்; தீமை நோய் வறுமை அச்சம்
இடும்பை - துன்பம். ஏமஞ்சாலா விடும்பை (தொல். பொ. 50).
- தீமை. பூதம் . . . இடும்பை செய்திடும் (மணி.1, 22). 
- நோய். கரப்பிடும்பை யில்லாரைக் காணின் (குறள், 1056)
- தரித்திரம்.இடும்பையா லடர்ப்புண்டு (திவ். பெரியதி. 1, 6, 5).
- அச்சம். (திவா.)

கொள்கலம்  - பண்டம் இடுங்கலம், பனையோலைமூங்கில் இவற்றால் ஆகிய பிழா. (சது.), அணி; ஆடை; சாந்து, சந்துமாலை முதலியனபெய்கலம்; பனையோலை, மூங்கில்இவற்றால்ஆகியகூடை

கொள்கலம்பண்டமிடுங்கலம்; அணி; ஆடை; சாந்து, சந்துமாலைமுதலியனபெய்கலம்; பனையோலை, மூங்கில்இவற்றால்ஆகியகூடை..

கலம் - உண்கலம்; பாண்டம்; குப்பி; கப்பல்; இரேவதி; அணிகலன்; யாழ்; கலப்பை; ஆயுதம்; ஓலைப்பாத்திரம்; ஒருமுகத்தலளவை; பந்தி; வில்லங்கம்.

கொல் - உயிர்க்கொலை
கொல் - கொல்லுதல் - வதைத்தல்; அழித்தல்; வெட்டுதல்; கதிரறுத்தல்; துன்பப்படுத்துதல்; கெடுத்தல்.

குடும்பம் - சமுசாரம்; உறவினர்; குலம்; மனைவி; ஒருகுடிசையிலுள் ளோர், இனத்தார், உறவின்முறையார், குடி

குற்றம் பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு
மறைத்தல் - மறையச்செய்தல்; மூடுதல்; தீதுவாராமற்காத்தல்.

குற்ற மறைப்பான் - குற்றங்களை, துன்பங்களை ஒளித்து வைப்பவன்

உடம்பு -  சரீரம், உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண்அல்லதுபெண்ணின்குறி

முழுப்பொருள்
முன் குறிப்பு: இக்குறளை புரிந்துக்கொள்ளும் பொழுது மற்ற உரைகளை வாசித்தேன் (பொதுவாக அதுவே வழக்கம்). பெரும்பாலான உரைகள் கூறும் பொருள்: ஒருவனுடைய ஒரு குடும்பத்தின் துன்பங்களின் நீக்கும் உடம்பு துன்பங்களை தாங்கிக்கொள்ளும் ஒரு கூடையா / அதற்கு இன்பமே இல்லையா ? என்று பொருள் கூறுகிறது. ஆனால் நான் இக்கருத்தில் இருந்து வேறுப் படுகிறேன். 

ஒவ்வொரு குடும்பத்திற்கு பல துன்பங்கள் வரும். அத்துன்பங்கள் பிழை, பழி, உடற்குறை, தீங்கு என்று பல வடிவங்களில் வரும். அத்தகைய துன்பங்களை மறைக்க, அதாவது ஒளித்து வைக்க ஒருவன் முற்பட்டால் என்னவாகும் ? அவனுடைய உடம்பு துன்பங்களை மட்டும் தாங்கும் பெற்றுக்கொள்ளும் ஒரு பாத்திரமாக (கூடை) அமையும். 

அதாவது குடும்பத்திற்கு வரும் துன்பங்கள் நல்லதிற்கு, அதில் இருந்து விடுபட / நீக்க பாடுப்பட வேண்டும். அப்படிச் செய்தால் அத்துன்பம் நம்மை ஒன்றும் செய்யாது. இல்லையெனில் அத்துன்பங்களை மறைக்க முயற்சித்தால் நமக்கு துன்பம் தான் வந்துக்கொண்டே இருக்கும். ஒரு துன்பத்தை நீக்கினால் நாம் அதை மறுபடியும் வராதுவண்ணம் பார்த்துக்கொள்வோம். ஆனால் அதுவே மறைத்தால் பின்பு மறுபடியும் அதை வேறு ஒரு நாள் செய்வோம். 

பின் குறிப்பு: திருவள்ளுவரின் சொல்லாட்சி இங்கு நாம் கவனிக்க வேண்டும். திருவள்ளுவர் "குற்றம் நீக்குவான் உடம்பு" என்று சொல்லி இருந்தால், குறளின் அர்த்தத்தை குடும்ப துன்பங்களை நீக்கும் உடம்பு துன்பங்களை தாங்கும் ஒரு கூடையா என்று கொள்ளலாம் ? ஆனால் மறைப்பான் என்று கூறுக்கிறார். மறை என்றால் ஒளித்துவைப்பது என்று பொருள். நீக்குவது என்று பொருளாகாது. 

உதாரணம்: நமது குடும்பத்தில் ஒருவர் சூது ஆடி ஒரு பெரிய தொகையை இழந்துவிடுகிறார். அவரை நாம் அதில் இருந்து மீட்டு எடுக்க வில்லை என்றால் குடும்ப மானம் போய்விடும் என்று பலர் எண்ணுவர். ஆனால் சூது ஆடி இழந்தது தவறு. அதை மறைக்க முனைய கூடாது. இல்லை, அவரை நான் காப்பாற்றுகிறேன் என்று அந்த தொகையை வரிந்துக்கட்டி செலுத்தினால் செய்த தவறு தற்காலிகமாக மறையும். ஆனால் அந்த நபர் இதில் இருந்து பாடம் கற்காமல் பின்பு அதே சூதை மறுபடியும் சில பல நாட்கள், மாதங்கள், ஆண்டுங்கள் கழித்து செய்வார். நாம் தான் மறுபடியும் வருந்த வேண்டும். 

ஏன் அப்படி சொல்கிறார் திருவள்ளுவர் ?
விடை : 

ஒப்புமை
”நெடும்பல் மால்வரை தூர்த்து நெருக்கவும்
துடும்பல் வேலை துளங்கிய தில்லையால்
இடும்பை யெத்தனை யும்படுத் தெய்தினும்
குடும்பந் தாங்கும்ம் குடிப்பிறந் தாரினே” (கம்ப.சேதுபந்தன.53)

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

நல்லவரின் வீட்டுக்குள் துன்பம் வந்தால்
நடக்கின்ற கதையதனை கொஞ்சம் கேட்போம்
வல்லதுவாய்த் துன்பமது கருதிச் சென்றால்
வதை படுமாம் துன்பம் அவர் வீட்டிற்குள்ளே
நல்லதுவாய் வருவதெல்லாம் கருதுகின்ற
நாயகரைத் துன்பம் அது என்ன செய்யும்
அல்லல் பட்டு அது அழுமாம் அய்யோ என்று
அழகாகச் சொல்லுகின்றார் வள்ளுவனார்

ஆத்திச்சூடி
கௌவை அகற்று.
துன்பத்திற்கு இடம் கொடேல்.
தீவினை அகற்று.

பரிமேலழகர் உரை
குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு - மூவகைத் துன்பமும் உறற்பாலதாய தன் குடியை அவை உறாமற்காக்க முயல்வானது உடம்பு; இடும்பைக்கே கொள்கலங் கொல் - அம்முயற்சித் துன்பத்திற்கே கொள்கலமாம் அத்துணையோ? அஃது ஒழிந்து இன்பத்திற்கு ஆதல் இல்லையோ?

விளக்கம் 
(''உறைப்பெயல் ஒலைபோல, மறைக்குவன் பெரும நிற் குறித்து வருவேலே'' (புறநா. 290) என்புழியும் மறைத்தல் இப்பொருட்டாயிற்று. 'என் குடிமுழுதும் இன்புற்றுயரவே நான் இருமையும் எய்துதலான் இம்மெய் வருத்த மாத்திரம் எனக்கு நன்று' என்று முயலும் அறிவுடையான், அஃதொரு ஞான்றும் ஒழியாமைநோக்கி, 'இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ' என்றார். இது குறிப்பு மொழி. இவை இரண்டு பாட்டானும் அவர் அது செய்யும் இயல்பு கூறப்பட்டது.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு-அடிமைத்தனம், அறியாமை, வறுமை என்னும் மூவகை நிலைமையாலும் தன்குடிக்கு வருந்துன்பங்களை நீக்கப் பாடுபடும் குடிசெயல் தலைவனது உடம்பு ; இடும்பைக்கே கொள்கலங் கொல்-துன்பத்தையே இட்டு நிறைத்துவைத்தற்கு ஏற்பட்டதொரு ஏனமோ!

மூவகைத் துன்பநிலைமையாலும் முட்டுண்டு வருந்துங் குடியை முன்னேற்ற முயலுந் தலைவன், வாழ்நாள் முழுதும் அல்லும் பகலும் ஓயாது படும் மெய்வருத்தத்திற்கு அளவின்மையால், அவன் உடம்பு இடும்பையே இடும் பையோ என்று ஓர் அறிஞன் இரங்கிக் கூறியவாறு. ஏகாரம் பிரிநிலை. ’கொல்’ வினாவிடைச்சொல். ஓகாரம் இரங்கலிடைச் சொல். மறைத்தல் தடுத்தலும் நீக்குதலும். ’குற்றம்’ வகுப்பொருமை. இவ்விரு குறளாலும் குடிசெய்யும் வகை கூறப்பட்டது.

மணக்குடவர் உரை 
சுற்றத்தார்மாட்டு உளதாகிய குறையை மறைக்கக் கருதுவான் உடம்பு துன்பத்திற்குக் கொள்கலமாம். 

மு.வரதராசனார் உரை
தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

சாலமன் பாப்பையா உரை
தன்னால், விலங்குளால், பருவ மாற்றங்களால் துன்பப்படும் வீட்டையும், நாட்டையும் அத்துன்பங்களில் இருந்து காக்க முயல்பவனின் உடம்பு, துன்பத்திற்கு மட்டுமே கொள்கலமோ? இன்பத்திற்கும் இல்லையோ?.

No comments:

Post a Comment