அன்பொரீஇத் தற்செற்று

குறள் 1009
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்
[பொருட்பால், குடியியல், நன்றியில்செல்வம்]

பொருள்
அன்பொரீஇ  - அன்பு + ஓரீ + இ
அன்பு - - தொடர்புடையார் மாட்டு உண்டாகும்பற்று, அன்பொத்த அவர் (பரிபா. 6, 21, உரை), நேசம்; ; நேயம் அருள் பக்தி

ஓரீ - ஓரீற்றா - ஒருமுறையீன்ற பசு.

- மூன்றாம்உயிரெழத்து; பஞ்சபட்சிகளுள்ஆந்தையைக்குறிக்கும்எழுத்து; அண்மைச்சுட்டு; இருதிணைமுக்கூற்றுஒருமைவிகுதி; வினைமுதல்பொருள்விகுதி; செயப்படுபொருள்விகுதி; கருவிப்பொருள்விகுதி; எதிர்காலமுன்னிலைஒருமைவிகுதி; ஏவல்ஒருமைவிகுதி; வியங்கோள்விகுதி; வினையெச்சவிகுதி; தொழிற்பெயர்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.

தற்செற்று - தன் + செற்று
செற்று - கொல்லுதல், அழித்தல், செதுக்குதல், பதித்தல், செறிதல், அழுந்துதல்
செற்று - நெருக்கம்

அறநோக்காது - அறம் + நோக்காது
அறம் - நேர்மை; தருமம்; புண்ணியம்; அறச்சாலை; தருமதேவதை; யமன்; தகுதியானது; சமயம்; ஞானம்; நோன்பு; இதம்; இன்பம்

நோக்கம் - கண்; பார்வை; கிரகநோக்கு; தோற்றம்; உயர்ச்சி; அழகு; காவல்; கருத்து; அறிவு; கவனம்; விருப்பம்; குறிப்பு.

நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

அறநோக்காது நோக்காது - நேர்மை தருமம் விரும்பாமல்

ஈட்டுதல் - கூட்டுதல்; சம்பாதித்தல்
ஈட்டிய - பெற்ற, திரட்டியது, சம்பாதிக்க

ஒண்பொருள் - தன்னை வருத்தித் தேடிய/ ஈட்டிய செல்வம்
ஒண் - oṇ   ஒண்ணு, def. verb. be possible, able; 2. be proper, fit, பொருந்து.
ஒண்மை - விளக்கம்; இயற்கையழகு; நன்மை; மிகுதி; ஒழுங்கு; நல்லறிவு.
பொருள் -  சொற்பொருள்; செய்தி; உண்மைக் கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்கு மதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை.

கொள்வார் பிறர் - கவர்ந்து (கொள்ளையடித்து) செல்வார் கயவர் / கள்வர்

பிறர் - அயலார்.

முழுப்பொருள்
ஒருவர் தன் வியர்வை சிந்தி பொருள் ஈட்டுவது மட்டுமே வாழ்வின் மையமாக வைத்து பொருள் ஈட்டிக் கொண்டு இருப்பவர்கள் ஏராளம். 

அவ்வழியில் செல்பவர்கள் தன் சுற்றம் அதாவது உறவுகள், நண்பர்களை பொருட்படுத்தாது, அவர்களிடம் நெருக்கம் கொள்ளாது, அவர்களிடம் இருந்து தொலைவில் இருந்துக்கொண்டு பொருள் ஈட்டிக் கொண்டு இருப்பர்.

அத்தகையவர்கள் உறவுகள், நண்பர்கள், மக்கள் இன்பம் தனை நோக்காது செல்வத்தின் பின் ஓடிக் கொண்டு செல்வர். அவர்கள் தான் ஈட்டிய செல்வத்தை அவரும் முழுமையாக அனுபவிக்க மாட்டார்கள் அடுத்தவரும் அனுபவிக்க விட மாட்டார்கள். 

ஆனால் காலப்போக்கில் இவர்கள் (வியர்வைச் சிந்தி / வருந்தி தொகுத்த ) ஈட்டிய செல்வம் இவர்கள் அனுபவிக்காமல் பிற கயவர்கள், கள்வர்கள் இவர்களை ஏமாற்றி கொள்ளையடித்து அனுபவிப்பர். ஆக இவர்களின் செல்வம் இவர்களுக்கு பயன் இல்லாமல் அழிந்து போகும்.

ஆக வாழ்வில் பொருள் ஈட்டுவது மட்டும் இன்பம் ஆகாது என்றும், வாழ்வில் அனைவரையும் அரவனைத்து வாழவேண்டும் என்றும் குறியிடுகிறார் திருவள்ளுவர்.

நீ மட்டும் ஓடாதே. கூடி வாழ்.

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”கொடுத்தலும் துய்த்தலும் தேற்றா இடுக்கடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம்....
ஏதிலான் துய்க்கப்படும்” (நாலடி 274)

ஆத்திச்சூடி
ஙப் போல் வளை.
கூடிப் பிரியேல்.
ஊருடன் கூடி வாழ்.
தொன்மை மறவேல்.
கிழமைப்பட வாழ்.

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
அன்பு இன்றி வாழ்வதிலே வெட்கம் இன்றி
அறம் தன்னைப் புறம் தள்ளி செல்வம் சேர்த்து
தன் குலத்தை உறவையெல்லாம் ஒதுக்கி வைத்து
தானும் எதும் அனுபவிக்க எண்ணம் இன்றி
புன் செயலாய்ப் பொருள் தேடி வைக்கும் மாந்தர்
புரியார் அச்செல்வமெல்லாம் வம்பர் கையில்
தன் அருமை தெரியாமல் கேவலமாய்த்
தடுமாறிச் சீரழியும் ஒழிந்தே போகும்

பரிமேலழகர் உரை
அன்பு ஒரீஇ - ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலையொழிந்து; தன் செற்று - வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர் - ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர். 


விளக்கம் (பயனாய அறனும் இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியினுள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.) 

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
அன்புஒரீஇ - ஒருவன் தன் கஞ்சத் தனத்தினால்; உறவினரிடத்தும் நண்பரிடத்தும் அன்புசெய்தலை யொழிந்து; தற்செற்று - தனக்கு வேண்டியவற்றை நுகராது தன்னையுங் கெடுத்து ; அறம் நோக்காது - வறியார்க்கு ஈதலாகிய அறத்தைக் கருதவுஞ் செய்யாது ; ஈட்டிய ஒண் பொருள் பிறர் கொள்வார் - வருத்தித் தேடிய சிறந்த பொருளைக் கள்வரும் கொள்ளைக்காரரு மாகிய பிறரே கவர்ந்து பயன் பெறுவர்.

' ஈட்டிய ' என்பதால் சிறிது சிறிதாக நீண்ட காலம் வருந்தித் தொகுத்த தென்பதூம் ஒண்பொருள் என்பதால் நன்றாய் பயன்படக கூடிய தென்பதும், 'பிறர்' என்பதால் சிறிதும் தொடர்பற்றவ ரென்பதும்,பெறப்படும்.'ஒரீஇ' இன்னிசையளபெடை.

"ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்".

என்று இரட்டுறலாகக் கூறினார் ஒளவையார் (கொ. வே. 4)

ஈயார்= ஈயாதவர், ஈக்கள். தேட்டு= தேடிய சொத்து , தேன்.தீயார்=கொடியவர். தீப்பந்தத்தை யுடைய குறவர்.

மணக்குடவர் உரை
பொருள் தேடுங்கால் பிறர்மாட்டு அன்பு செய்தலையும் நீக்கி, அது தேடினானாகிய தன்னைக் காத்தலுமின்றி அறத்தையுஞ் செய்யாது, தொகுத்த ஒள்ளிய பொருளைக் கொள்வார் பிறர். 

மு.வரதராசனார் உரை
பிறரிடம் செலுத்தும் அன்பையும் விட்டுத் தன்னையும் வருத்தி அறத்தையும் போற்றாமல் சேர்த்து வைத்தப் பெரும் பொருளைப் பெற்று நுகர்பவர் மற்றவரே.

சாலமன் பாப்பையா உரை
பிறர்க்கு ஈயாமல் அன்பை விட்டு விலகி, எதையும் அனுபவிக்காமல் தன்னை வருத்தி, அறத்தை எண்ணாது சேர்த்த பொருளை மற்றவர் அனுபவிப்பர்.

No comments:

Post a Comment