கதுமெனத் தாநோக்கி தாமே கலுழும்

குறள் 1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
கதுமெனல் - katum-eṉal   - விரைதல், n. Expressiondenoting quickness; விரைவுக்குறிப்பு. கதுமெனக்கரைந்து (பொருந. 101).  

கதும் - விரைவுக்குறிப்பு (swiftly) -
- கற்பு உடை உமையாள் மைந்தன் கதும் என கழுத்தில் இட்டான் (திருவிளையாடற் புராணம்)
- கதும்  எனக் கனல்  பொத்தித் தள்ளு மின் (கம்பராமாயணம்) (விரைவாக நெருப்பை மூட்டி அதில் அவனைத்  தள்ளுங்கள்)

கதும் எனத் - விரைவாக

என - என்னுடைய; என்ன; என்று; ஓர்உவமவுருபு.

தா - ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+ஆ)வலிமை; வருத்தம்; கேடு; குற்றம்; பகை; பாய்கை; குறை.

தா - தானே

நோக்கி - நோக்குதல் - பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நோக்கித் - பார்த்து

தாமே - தானே

கலுழ்தல் - கலங்குதல்; தடுமாறுதல்; அழுதல்; ஒழுகுதல்; உருகுதல்
கலுழும் - கலுழு கண்மழை (தேம்பாவணி) - கண்ணின் மழை வெள்ளம்

இது - இந்த (இந்த முரண்பாடு)

நக - நகைத்தல் - சிரித்தல்; நிந்தித்தல்.

நகத் தக்க துடைத்து - நகத்தக்கது (நகைக்க தக்கது) உடைத்து
நகை - சிரிப்பு
நகைக்க - சிரிக்க

தக்கது - takkatu   n. தகு-. 1. See தகுதி (திவா.) 2. That which is fit or proper; தகுதியானது. தக்கதே நினைந்தான் றாதை (கம்பரா. கைகேயி 102).  

உடைத்து - உடைதல் - இருக்கும்

தக்கது உடைத்து - இயல்பு உடையது

முழுப்பொருள்
காதலரை இக்கண்கள் சற்றும் சிந்திக்காமல் குடுகுடுவென திடுமென்று ஆசையாக பார்த்தது. இப்பொழுது அவரைப் பாராமல் காணவில்லையே என்று கண்ணில் மழை வெள்ளமாய் கண்ணிர் பொழிகிறது. கண்களின் இந்த முரண்பட்ட செய்கையை கண்டால் அவளுக்கு சிரிப்பாக இருக்கிறதாம். ஆக இவளுடைய அவசர புத்தியிற்கு கண்களின் மேல் பழியினை சுமத்துகிறாள்.

”தெப்பானே பிப்பானே” என்று சொல்லுவார்கள். 
விளைவறியாது அவசர அவசரமாக பார்த்ததனாள் தான் இப்பொழுது பார்க்க முடியாமல் அழுகிறாள். 

குறட் கருத்து (நன்றி: திரு.தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

ஓடி ஓடிப் பார்ர்த்ததுவும் இந்தக் கண்கள்
உள்ளமதில் சேர்த்ததுவும் இந்தக் கண்கள்
ஆடிப் பாடி மகிழ்ந்ததுவும் இந்தக் கண்கள்
அயலார்க்குச் சொன்னதுவும் இந்தக் கண்கள்
வாடி வாடி இன்றழுமே இந்தக் கண்கள்
வதை பட்டு துன்பமுறும் இந்தக் கண்கள்
போடி இது சிரிப்பிற்கே இடம் என்கின்றாள்
பொன்னழகி தன் கண்ணைத் தானே இங்கு

உதாரணம்
கல்யாணத்திற்கு முன் மாப்பிள்ளை (வெகு நேரம்) பெண் பார்க்கும் பொழுது, பெண் *சிறிது நேரம்* (ஒரு கண நேரம்) மட்டும் தான் பார்ப்பாள். அதுவும் அவசரம் அவசரமாக அரைகுரையாக. இதன் பின்பு இனிமேல் கல்யாணத்தில் தான் பார்க்க முடியும். அதுவரை அவரை காணாமல் அழுகிறாள். இப்படிப் பட்ட முரண்பட்ட கண்களை பார்த்து சிரிக்கிறாள்.

ஆனால் உண்மையில் அவனை அவசர அவசரமாக பார்த்தது அவள். காணமுடியாமல் அழுகின்றவள் அவள். ஆனால் கண்கள் என்னமோ அவசர பட்டதாகவும், கண்கள் காணாமல் மழைப் போன்று அழுவதாகவும் என்று கண்கள் மேல் பழியினை போடுகிறாள்.

பெண்  *சிறிது நேரம்* தான் பார்ப்பாள் - இது காலத்திற்கு அவ்வளவுவாக பொருந்தாது. 


  


 

பரிமேலழகர் உரை
இதுவும் அது. தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து.

விளக்கம் ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)

மணக்குடவர் உரை
இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.

மு.வரதராசனார் உரை
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

நன்றி: ரிஷவன்
காதலரைக்கண்ட மாத்திரம்
பாய்ந்து சென்று
மகிழ்ந்த விழிகள்.. அவர்
காணாததை எண்ணி
கண்களை குளமாக்குவது
நகைப்பு தரும் நொடிகளாகும்

No comments:

Post a Comment