காலம் கருதி இருப்பர்

குறள் 485
காலம் கருதி இருப்பர் கலங்காது 
ஞாலம் கருது பவர்.
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

கருதி - கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

இருப்பர் - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

கலங்குதல் - நீர்முதலியனகுழம்புதல்; மனங்குழம்புதல்; தெளிவின்றாதல், மயங்குதல்; அஞ்சுதல்; துன்புறுதல்; தவறுதல்.

கலங்காது - தவறாது

ஞாலம் - உலகம், பூமி, நிலம்; உயர்ந்தோர்; மாயவித்தை.

கருதுதல் - எண்ணுதல்; மறந்ததைநினைத்தல்; நிதானித்தறிதல்; உத்தேசித்தல்; மதித்தல்; விரும்புதல்; அனுமானித்தல்; நன்குஆலோசித்தல்; ஒத்தல்.

கருது பவர் - எண்ணுபவர்

ஞாலம் - உலகம் 

காலம் கருதி இருப்பர்  - காலத்தை எண்ணி காத்திருப்பவர் 

கலங்காது - கலக்கமடையாது 
ஞாலம் கருது பவர் - உலகத்தை வெல்ல எண்ணி உள்ளவர் .

முழுப்பொருள்
இந்த உலகத்தையே வெல்ல வேண்டும், கைக்குள்  கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், எதை பற்றியும் கலங்காமல், சரியான காலம் வரும் வரை காத்து இருக்க வேண்டும்.

அதாவது, நமது எண்ணம், குறிக்கோளிற்கு ஏற்ற சமயம் வரும் வரை, இடைப்பட்ட துன்ப தருணங்கள், தடைகள் அவற்றை கண்டு கலங்காமல், பொறுமையோடு, நமக்கான சரியான நேரம் வரும் வரை காத்து இருக்க வேண்டும்.

இதற்கு சான்றாக பலவற்றை கூறலாம். 

வரலாற்றில் பல இடங்களில், சரியான  சமயம் வரும் வரை காத்து இருந்து படை எடுத்த மன்னர்கள் எளிதாக வென்றதை காணலாம்.

கொக்கு கூட தனக்கு  சரியான உணவு (உறுமீன்) வரும் வரை, சிறிய மீன்களை விட்டு விட்டு பொறுமையோடு காத்து இருக்கும் என்பதை தான், 

 "ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு"

என்று கூறுவார்கள்.

ஒப்புமை
”காலம் ஈதெனக் கருதிய இராவணன் காதல்” (கம்ப.பிரமாத்திரப்.164)

“இடத்தொடு பொழுதும்ம் நாடி எவ்வினைக் கண்ணும் அஞ்சார்
மடப்பட லின்றிச் சூழும் மதிவல்லார்க் கரிய துண்டோ” (சீவக.1927)

“கருத்துற நோக்கிப் போந்த காலமும் நன்று காதல்
அருத்தியும் அரசின் மேற்றே அறிவினுக் கவதி யில்லை” (கம்ப.விபீடணன்.107)

பரிமேலழகர் உரை
கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.'
(தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.

மு.வரதராசனார் உரை
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

சாலமன் பாப்பையா உரை
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

No comments:

Post a Comment