உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

குறள் 1170
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
[காமத்துப்பால், கற்பியல், படர்மெலிந்திரங்கல்]

பொருள்
உள்ளம் - மனம்; உள்ளக்கருத்து; சொற்றொடரின்கருத்து; எண்ணம்; ஞானம்; அகச்சான்று; ஆன்மா; ஊக்கம்; முயற்சி; உல்லம்; உல்லமீன்வகை.

போன்று - போல

உள்ளம்போன்று - மனம் போன்று; மனம் அவரிடம் செல்கின்றது போல்

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

உள்வழிச் - அவர் இருக்கும் இடத்திற்கு வழி.

செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு

செல்கிற்பின் - அவரிடம் செல்வது

வெள்ளம் - நீர்ப்பெருக்கு; பெருக்கம்; கடல்; கடலலை; நீர்; ஈரம்; மிகுதி; ஒருபேரெண்; உண்மை.

நீர் - தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.

வெள்ளநீர் - கட்டுக்கடங்காத மிக மிக அபாயமான் அளவிலான நீர் பெருக்கு. அதில் நீந்துவது மிக கடினம். நம்மை அடித்து செல்லும். இங்கு கண்ணீர் வெள்ள நீர்ப் போல் பெருக்கு எடுத்து ஓடுகிறது என்கிறார் திருவள்ளுவர்.

நீந்துதல் - நீரில்மிதந்துசெல்லுதல்; கடத்தல்; பெருகுதல்; வெல்லுதல்; கழித்தல்.

நீந்தல - நீந்த தேவையில்லை.

மன்னோ - வாழ்வேனா ?

மன்னோஎன் 

மன் - ஒழியிசை (ஒழிந்தபொருள்தருஞ் சொற்களைத் தருவது.)

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

முழுப்பொருள்
என் மனம் அவர் இருக்கும் இடத்திற்கு செல்கிறது. என் மனம் செல்வதுப்போல் என் கண்களும் செல்லநேர்ந்திருந்தால் நான் ஏன் வெள்ள நீர்ப் போல பெருக்கெடுத்து ஓடும் என் கண்ணீரில் நீந்துகிறேன். இங்கே ஏன் வெள்ள நீர் என்று குறிப்பிடப்படுகிறது என்றால் வெள்ளத்தில் நீந்துவது கடினம், ஒரு கட்டத்திற்கு மேல் முடியாது. உயிரை விடக்கூடும்.

இங்கே நோக்க வேண்டியது ஒன்று, அவள் சென்றால் தான் கண்கள் செல்ல முடியும். ஆக அவள் செல்ல முடியாததை கண்கள் செல்ல முடியவில்லை என்று சொல்கிறாள்.

இதைப் போன்று மற்றும் ஒரு குறள் நாம் பார்த்தோம்
தின்னும் அவர்க்காணல் உற்று (சுட்டியை சொடுக்கவும்)

ஒப்புமை
“நீர்நீந்து கண்ணாட்கு” (கலி.121:10)
“நெடும்பெருங்கண் நீந்தின நீர்” (பு.வெ.313)


பரிமேலழகர் உரை
(நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. 

விளக்கம் 
(அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

மணக்குடவர் உரை
அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா. இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது. 

மு.வரதராசனார் உரை
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

சாலமன் பாப்பையா உரை
என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

1 comment:

  1. உள்ளம் மிக விரைவாகச் செல்லும். அதன் ஆற்றல் அதிகம் தான் .விரும்புபவனை மனம் தான் விரும்பும் வண்ணம் காட்சிப்படுத்தி மகிழ்கின்றது .ஆனால் இது உண்மையா ?என்றால் இல்லை.கனவாகவே போய் விடுகிறது .
    ஆனால் கண்கள் நேரடியாகப் பார்த்தால் அதன் விளைவு மிக உண்மையாக இருக்கும்..

    ReplyDelete