களவும் கற்பும்

நன்றி: TamilVu

3.1 கைகோள் வகை
கைகோள் என்றால் ஒழுக்கம் என்று பொருள். கைக்கொள்ளப்படும் நெறிகள், பின்பற்றப்படும் ஒழுக்கங்கள் என்றும் குறிப்பிடலாம்.

அளவில்லாத இன்பத்தைத் தரும் ஐந்திணையின் தலைமக்கள் மேற்கொள்ளும் நெறிமுறைகளைக் களவு - கற்பு எனும் இருவகைக் கைகோள் ஆகப் பகுத்து வழங்குவது அகப்பொருள் இலக்கண மரபு ஆகும்.

களவும் - கற்பும்

களவு என்பது தலைவனும் தலைவியும் மேற்கொள்ளும் மறைமுகக் காதல் வாழ்க்கை. அது இயற்கையாய்த் தொடங்கி, தொடர்ந்து நிகழ்வது.

களவு வெளிப்படும் சூழலில் - களவு முறையிலேயே அன்பு கலந்த காதல் வாழ்க்கையைத் தொடர முடியாத சூழலில் - அதனைத் தலைமக்கள் கற்பு வாழ்க்கையாக மாற்றி அமைத்துக் கொள்வர்.வரைவு என்னும் திருமணம் மூலம் களவு - கற்பாக மலரும்.

3.1.1 களவுப் புணர்ச்சி வகை
இருவகைக் கைகோள்களில் முதலாவதாகிய களவு முறையில் தலைமக்கள் கூடும் புணர்ச்சி என்பது நான்கு வகையாக நிகழும். அவையாவன :-

- இயற்கைப் புணர்ச்சி
- இடந்தலைப்பாடு
- பாங்கன் கூட்டம்
- பாங்கியிற் கூட்டம்

இயற்கைப் புணர்ச்சி

முன்னர் அறிமுகம் இல்லாத தலைவனும் தலைவியும் இயற்கையாக ஓரிடத்தில் எதிர்பாராத விதமாகச் சந்தித்தல்; கூடிமகிழ்தல்; அன்பு காட்டுதல் ஆகியவை இயற்கைப் புணர்ச்சிஎனப்படும். இது தெய்வத்தால் நிகழும்; அல்லது தலைவி விருப்பத்தால் நிகழும்.

இடந்தலைப்பாடு

இயற்கைப் புணர்ச்சியின் போது, சந்தித்த இடத்திலேயே தலைமக்கள் மீண்டும் கூடி மகிழ்வது இடந்தலைப்பாடு எனப்படும் (இடம் - முதலில் சந்தித்த இடம், தலைப்பாடு - மீண்டும் கூடுதல்).

பாங்கன் கூட்டம்

தலைவன், தனது பாங்கன் (தோழன்) மூலமாகத் தலைவியைக் காணும் வாய்ப்பைப் பெற்றுக் கூடி மகிழ்வது பாங்கன் கூட்டம்எனப்படும்.

பாங்கியிற் கூட்டம்

தலைவன், தான் விரும்பும் தலைவியின் தோழி வாயிலாகத் தலைவியை மீண்டும் காணும் வாய்ப்பைப் பெற்றுக் கூடி மகிழ்வது பாங்கியிற் கூட்டம் எனப்படும்.

3.1.2 களவுப் புணர்ச்சியின் இருபெரும் திறம்
இயற்கைப் புணர்ச்சி முதலான நான்கு வகைகளிலும் தலைவனும், தலைவியும் சந்தித்துப் பழகும் களவுப் புணர்ச்சி இரு பெரும் திறங்களாக அமையும் என்பது அகப்பொருள் மரபு ஆகும். அவையாவன :-

1. உள்ளப் புணர்ச்சி
2. மெய்யுறு புணர்ச்சி

இக்கருத்தை,
உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும்
கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க்கு உரிய (34)

என்ற நூற்பா எடுத்துக் காட்டுகிறது.

1. உள்ளப் புணர்ச்சி
தலைமக்கள் இருவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு மகிழ்தல்உள்ளப் புணர்ச்சி எனப்படும். மனம் ஒன்றுபட ஏற்படும் காதல் உணர்வே களவில் முதற்கண் நிகழ்வது.

பழி பாவங்களுக்கு அஞ்சுதலும், தக்கது எது என அறியும் ஆற்றலும் உடையவன் தலைவன். அச்சமும், நாணமும், அறியாமையும் உடையவள் தலைவி.

இருவர்க்கும் உரிய இத்தகு இயற்கைப் பெருங்குணங்கள் காரணமாக இருவருமே முதலில் உள்ளத்தால் இணையும் உள்ளப் புணர்ச்சியை மட்டுமே மேற்கொள்வர்.

2. மெய்யுறு புணர்ச்சி
உள்ளத்தால் அன்பு கலந்து ஒன்றிய தலைமக்கள் இருவரும் உடலால் சேரும் சேர்க்கை மெய்யுறு புணர்ச்சி எனப்படும். (மெய் - உடல்)

காலமும் - காரணமும்

மெய்யுறு புணர்ச்சிக்கான காலமும் காரணமும் பற்றியும் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
ஒருவரை ஒருவர் காணுதலாகிய காட்சி, வேட்கை, ஒருதலை உஎ்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்புதல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம் சாக்காடு எனச் சொல்லப்படும் பத்துவகையான வளர்நிலைச் செயல்கள் நிகழ நிகழத் தலைவனும், தலைவியும் உடலால் புணரும்மெய்யுறு புணர்ச்சி மேற்கொள்வர்.

3.1.3 களவுப் புணர்ச்சிக்குரிய இடம்
உள்ளப் புணர்ச்சியும், தொடர்ந்து மெய்யுறு புணர்ச்சியும் நடைபெறும். மெய்யுறு புணர்ச்சியை மேற்கொள்ளும் தலைமக்கள் பகலிலும் இரவிலும் சந்தித்துக் கொள்ளும் இடம் குறி எனப்படும்.

இருவகைக் குறி இடம்

தலைவன், தலைவி இருவரும் சந்தித்துக் கொள்ளும் குறி இடம் இரண்டாகும். அவை
1. பகற்குறி
2. இரவுக் குறி

பகற்குறி - இது பகல் பொழுதில் தலைவனும் தலைவியும் சந்திக்கக் குறித்த இடமாகும். இது தலைவியின் வீட்டின் எல்லையைக் கடந்ததாக அமையும்.

இரவுக்குறி - இவ்விடம் இரவு நேரங்களில் தலைவனும், தலைவியும் சந்திக்க ஏற்ற இடமாகும். இது தலைவியின் வீட்டின் எல்லையைக் கடவாதது. வீட்டை ஒட்டிய பகுதியில் அமைவது.

No comments:

Post a Comment