குறள் 417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
[பொருட்பால், அரசியல், கேள்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
[பொருட்பால், அரசியல், கேள்வி]
(For meaning in English, scroll to the bottom of this post)
பொருள்
பிழைத்து - பிழைத்தல் - குற்றஞ்செய்தல்; பலியாதுபோதல்; சாதல்; தவறிப்போதல்; உய்தல்; கேட்டினின்றுதப்புதல்; உயிர்வாழ்தல்; வாழ்க்கைநடத்துதல்; நீங்குதல்; இலக்குத்தவறுதல்.
உணர்ந்தும் - உணர்தல் - அறிதல்; நினைதல், கருதுதல் ஆராய்தல் இயல்புணர்தல்; ஊடல்நீங்குதல்; தெளிதல் துயிலெழுதல் பகுத்தறிதல் நுகர்தல் தொட்டறிதல்; பாவித்தல்
பேதைமை - மடமை, உய்த்துணராமை, அவிவேகம், பேதமை, அறிவின்மை
சொல்லார் -சொல்லமாட்டார்கள்
இழைத்து - நுட்பமாக
இழைத்தல் - செய்தல்; குழைத்தல் தூற்றல் செதுக்குதல் வரைதல் மூச்சிரைத்தல்; கூறுதல் நுண்ணிதாகஆராய்தல்; பூசுதல் வஞ்சினங்கூறுதல்; கலப்பித்தல்; அமைத்தல் இழையாக்குதல்; மாத்திரைமுதலியனஉரைத்தல்; பதித்தல்
ஈண்டல் - நெருங்குதல், கூடுதல் நிறைதல் விரைதல்
ஈண்டிய - நிறைந்த
கேள்வி - கேட்டல்; கற்கை; வினா; நூற்பொருளைக்கற்றறிந்தவர்; சொல்வதைக்கேட்டல்; கல்வி; சத்தம்; வேதம்; நூல்; சொல்; அறிக்கை; விசாரணை; இசைச்சுருதி; ஏலம்கேட்டல்; யாழ்
அவர் - அவர்
முழுப்பொருள்
கேள்வி ஞானம் ஒரு மிக சிறந்த செல்வம். அதனை பிறரிடம் இருந்து நாம் பெறுகிறோம். ஆனால் அக்கேள்வி பிழையாக உணர்ந்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. அப்படி பிழையாக உணர்ந்ததை வெளியே பேசினால் நமது பேதைமை வெளிப்பட்டுவிடும். ஆனால் கேள்வியை பெற்றவர் கேள்வியோடு நில்லாமல் நுணுகி ஆராய்ந்து தன்னிடமோ அல்லது பிறரிடமோ தருக்கம் செய்து அல்லது நூல்களை ஆராய்ந்து கற்று தனது அறிவை செம்மைப் படுத்துவார் எனில் அவர் வெளியே பிழைப்பட பேசி தனது பேதைமையை காட்டமாட்டார்.
இன்றைய காலகட்டங்களில் பல சொற்பொழிவுகளை பல தளங்களில் (உதாரணமாக Whatsapp, Youtube, Facebook) அரைகுறையாக கேட்டுவிட்டு வெளியே எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் பேசுபவர்கள் மிக மிக அதிகம். அவரிடம் அவர் கேள்வியாக கேட்டதை தாண்டி ஒரு விஷயம் அதிகம் கேட்டாலோ அல்லது ஒரு புள்ளிவிவரம் கேட்டாலோ கூறமாட்டார். ஒன்றும் இல்லை உதாரணமாக கோவிலில் ஆகம முறைப்படி பூஜை செய்யவில்லை என்று நொட்டை சொல்லுவோரிடம் எத்தனை ஆகம முறைகள் உள்ளன என்று கேட்டால் கூட கூற திராணி அற்று இருப்பார்கள். இவர்கள் குறைக்கூடம். கூத்தாடத்தான் உதவும்.
கேள்வியாக ஒரு செய்தியை பெற்றுக்கொள்வதில் தவறில்லை. ஏனெனில் அது என்றோ ஒருநாள் நமக்கு உதவும். அல்லது பிறருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கவும் உதவும். ஆனால் ஆராய்ந்து அறிந்துக்கொள்ளாமல் அதில் வித்தகன் போன்று பேசினால் நம் பேதைமை வெளிப்பட்டுவிடும்.
மேலும் கேள்வியாக பெரும் அறிவை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமல் தன்னுடைய அறிவையும் பயன்படுத்தி ஆராயவேண்டும். "எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்பது கேள்விக்கும் பொருந்தும். அப்பொழுது தான் பிழையாக கற்றிருந்தால் அவற்றை நீக்க முடியும்.
சொல்லிக்கொடுக்காமலேயே, ஒர் இசைச்சூழலில் வளரக்கூடிய சிலருக்கு இசைத் தானாகவே அவர்களிடத்தில் ஊறிவிடுகிறது. கல்வி கற்பிக்கப்படும் இடங்களில் இருப்பவர்களும் கூட தாமாகவே சில செய்திகளை அறிந்திருப்பதை பார்க்கலாம்.
“கல்வியில் பெரியன் கம்பன்” என்ற வழக்கு இருப்பதினாலேதான், “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்ற வழக்கும் வந்தது. இந்த வழக்கிலே காணவேண்டியது, அஃறிணைப் பொருளுக்கும் அறிவு இருக்கும், கற்றவர்களை அணுகி இருந்தால் என்பதுதான்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
”உறழா மயங்கி உறழினும் என்றும்
பிறழா பெரியோர்வாய்ச் சொல்” (பு.வெ.167)
இந்திய மரபினைப் பொறுத்தவரை கற்றலுக்கான இடத்தினை விடக் கேட்டலுக்கான இடம் முக்கியமானது.கற்றலைக் கொண்டு கேட்டலை நிலைநிறுத்தும் பணியையே மரபு முன்னர் பெரும்பாலும் செய்தது.கேட்டல் என்பது தன் தரப்பினைப் பற்றிய அனைத்தும் அறிந்த தகுதியுடைய சீடனிடம் கற்றறிந்த குரு உரைப்பது.கேட்பவனின் தகுதியும் சொல்பவரின் தகுதியும் சரியான பாதையினைத் திறந்து விடும். மாறாகக் கற்றல் என்பதோ அதைச் செய்ய முயலும் அனைவருக்குமான பொதுத்தளத்தினை உருவாக்கிக் கொடுப்பது.அதற்கான நெறிமுறைகளை மட்டுமே கொண்டது.கற்றலுக்குத் தேவையான தகுதிகள் கேட்டலுக்குத் தேவையான தகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. அறிவு என்பதே கேட்டலின் வழியாகவே நிலைநிறுத்தப்பட்ட காலம் சென்ற நூற்றாண்டில்தான் மாறியது.அதுவரை கேட்டலின் வழியாக வந்தடைந்த அறிவினைக் கற்றலின் வழியாக பயில முயன்று இரண்டுக்கும் உரிய வேறுபாடுகளைக் கைக்கொள்ளாமல் சொற்பொருட்பேதத்தால் அதன் மாளாச் சுழலுக்குள் சிக்கிய நபர்கள் உண்டு.
பரிமேலழகர் உரை
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை உடையார்.
('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் : பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை
ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின சொல்லார், ஆராய்ந்துணர்ந்து நிரம்பிய கேள்வியை யுடையார். இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.
மு.வரதராசனார் உரை
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
சாலமன் பாப்பையா உரை
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
English Meaning - As I taught a kid - Rajesh
Listening and learning from others is important and valuable. At the same time, when we listen and learn from others, we might have learnt it wrongly or we might have been taught wrongly. Hence, irrespective of what we have learnt, we will not talk or teach something wrong/stupid to others and expose our ignorance/stupidity. Hence, when we learn from others, we should go beyond that. We should analyze it, question it, read it, verify the facts if required, debate and achieve the true understanding and sharpen our knowledge. Because that is the process of listening from others and learning.
Questions that I ask to the kid
1) What should you do and not do after you listen and learn from others? Why?
2) Can you trust what you learn from others by listening? If so, what should you do and what you should not do? Why?
No comments:
Post a Comment