குறள் 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
[அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்]
பொருள்
அகன் அமர்ந்து - உள்ளம் குளிர்ந்து; உள்ளத்தின் உவப்புடன்
ஈதலின் - தானம் செய்தல்
நன்றே - அதனை விட நன்று
முகன் அமர்ந்து - முக மலர்ச்சியுடன் ஒருவர் முன்
இன்சொலன் - இனிய மனதிற்கு இதமான சொல்லை
ஆகப்பெறின் - கூறுபவராக இருந்தால்
முழுப்பொருள்
உலகலில் தானம் செய்வது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது, எவ்வளவு நன்மை பயக்க கூடியது என்று எல்லோரும் அறிவோம். அதுவும் மனமுவந்து தானம் செய்வது சிறப்பானது. அதனினும் சிறப்பு என்று ஒன்று உண்டோ? இருக்கிறது. மற்றவர்களிடம் பேசும் பொழுது முக மலர்ச்சியுடன் கனிவாக பேசுவது.
ஏன் இதை திருவள்ளுவர் சொல்லுகிறார் என்று எண்ணினேன். நாம் அன்றாடம் பல இன்னல்களை சந்திக்கிறோம் இவ்வுலகில். நமது கோவங்களையும் விரத்திகளையும் மற்றவரிடம் காட்டினால் இவ்வுலகம் நரகம் ஆகிவிடும். நமக்கு அது தீமையே விளைவிக்கும். நம்மை விட்டு மக்கள் விலகுவர். அது நமக்கு நல்லது அல்ல. எவ்வளவு தானம் (கோயிலில் அன்னதானம் செய்வதில் தொடங்கி) செய்தாலும் நாம் இனிய மனிதராக இல்லை என்றால் என்ன பயன்.
மேலும்: அஷோக் உரை
ஒப்புமை
குறள் 84
பரிமேலழகர் உரை
அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். (இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.)
மணக்குடவர் உரை
மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின். அறத்துப்பால், இல்லறவியல், இனியவைகூறல்,
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
முகன் அமர்ந்து இன்சொலனாகப் பெறின்-ஒருவரைக் கண்டபொழுதே முகமலர்ந்து இனிய சொல்லும் உடையனாகப் பெறின்; அகன் அமர்ந்து ஈதலின் நன்று-அது மனமுவந்து ஒரு பொருளைக் கொடுத்தலினும் சிறந்ததாம்.
வெறுநோக்கினும் வெறுஞ் சொல்லினும் ஒரு பொருளைக் கொடுத்தலே உண்மையிற் சிறந்ததாயினும், மக்கள் பொதுவாக வெளிக்கோலத்திற்கே வயப்படுவதால், அகமலர்ச்சி வெளிப்படாத கொடையினும் முகமலர்ச்சியோடு கூடிய இன்சொல்லே நல்ல தென்றார்.
மு.வ உரை
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்
சாலமன் பாப்பையா உரை
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
குறளும் பொருளும் - பா.ராகவன் உரை
ஈகை நல்லது. இன்சொல் அதனினும் நல்லது.
பொருள்: முகம் மலர்ந்து இன் சொல்லன் ஆக பெறின் - முகம் மலர்ந்து இனிய சொல்லை யுடையன் ஆகப் பெற்றால், அகம் மலர்ந்து ஈதலின் நன்று - (அஃது) உள்ளம் உவந்து ஈதலைப் போல (ஓர்) அறமாம்.
அகலம்: சொல்லன் என்பது செய்யுள் விகாரத்தால் லகர வொற்றுக் கெட்டு நின்றது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘அகனமர்ந்து’, ‘முகன மர்ந்து’. அப் பாடங்களைக் கொள்ளாததற் குரிய காரணங்களை ‘அகமலர்ந்து செய்யாள்’ என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்திற் காண்க. ‘ஏகாரம்’ அசை.
கருத்து: இன்சொல் கூறல் ஈகையைப் போல ஓர் அறமாம்.
No comments:
Post a Comment