குறள் 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
பொருள்
உளர் - உடந்தை; உடையவர்; வாழ்கின்றோர்.
உளர் என்னும் - உடலோடு வாழ்கின்றோர்
மாத்திரை - அளவு, கணம், காலவிரைவு, எழுத்தினளவு, குளி கை (medicinal pill)
மாத்திரையர் - மாத்திரையார் - எதற்கு சமம் என்றால்
அல்லால் - மற்றபட்டி, அக்குணம் உள்ளவர்களை தவிர வேறு எவரிடம்
பயவாக் - பிறருக்கு பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத
களர் - உவர்நிலம், களர்நிலம், உப்புமண்; பயிரிட உதவாத நிலம்.
அனையர் - They are like. அன்னர்--அன்னார். Such persons
கல்லாதவர் - கல்வி கற்காதவர்கள்
முழுப்பொருள்
கல்வி கல்லாதோர் உயிர் உடமில் ஒட்டிக்கொண்டுள்ள ஒரு மிக சாதாரணமான/ கேவலமான உடம்பு என்கிறார் திருவள்ளுவர். இவர்கள் எதற்கு ஒப்பாவர்கள் என்றால் பயனே தராத விளைச்சலே தராத களர் நிலத்திற்கு. கல்வி இல்லாதவர்கள் மற்றவர் யாருக்கும் எவ்வித பயனையும் தர மாட்டார்கள். [அத்தகைய நிலம் இவ்வுலகத்திற்கு பாரம் போன்றே இந்த மனிதர்களும் உலகிற்கு பாரம்]. அதனையே திருவள்ளுவர் கூறுகிறார்.
திருவள்ளுவர் இதனை ஏன் நிலத்திற்கு உவமை படுத்துகிறார்? நிலம் என்பது ஒரு தடவை மட்டும் பயன் தரக்கூடியது அல்ல. பல முறை பல நூற்றாண்டுகள் பயன் தரக்கூடியது. அதுப்போலவே கல்வியும் பல முறை பல நூற்றாண்டுகள் பயன் தரக்கூடியது. ஆகவே கற்க வேண்டிய அவசியத்தை சொல்லாமல் சொல்கிறார்.
மேலும்: அஷோக் உரை
பரிமேலழகர் உரை
கல்லாதவர் - கல்லாதவர், உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி; பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர். (களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும் நன்கு மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை
உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர் நிலத்தை யொப்பர் கல்லாதவர்.
இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கல்லாதவர்-நூல்களைக் கல்லாதவர்; உளர் என்னும் மாத்திரையர் அல்லால் - உடம்போடுள்ளனர் என்று பிறர் சொல்லும் அளவினராதலன்றி; பயவாக்களர் அனையர்-பிறர்க்குப் பயன் படாமையால் ஒன்றும் விளையாத உவர்நிலத்தையே ஒப்பவராவர்.
"களர்நிலத்துப் பிறந்த வுப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினுங் கற்றுணர்ந் தோரைத்
தலைநிலத்து வைக்கப் படும்."
என்று நாலடியார்(133) கூறுவதால், இங்குக் களர் என்னுஞ் சொற்குக் "காலாழ்களரின் நரியடும்" (500) என்னுங் குறளிற் போல் உளைநிலம் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும். உளை நிலையான சேற்றுநிலம். கல்லாதான் பயவாமையாவது அறிவாற் பிறர்க்குதவாமை.
"பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவுங்
கல்லாதார் வாழ்வ தறிதிரேற்-கல்லாதார்
சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற்
கோதென்று கொள்ளாதாங் கூற்று."
என்னும் நாலடிச் செய்யுள்(106) இங்குக் கவனிக்கத்தக்கது. மாத்தல் அளத்தல். இவ்வினை இன்று வழக்கற்றது. மா என்பது பல்வேறு அளவுகுறித்த சொல். மா+அனம்=மானம்=அளவு, படி. (மேலை வடார்க்காட்டு வழக்கு). மா+திரம்=மாத்திரம்=அளவு. அவன் எனக்கு எம்மாத்திரம் என்பது நெல்லைவழக்கு. இதன் விலை எம்மாத்திரம் (எம்மாத்தம்) என்பது மேலைவடார்க்காட்டு வழக்கு. வௌவினன் முயங்கு மாத்திரம் (கலித் 47:22). மா+திரை=மாத்திரை (மருந்தளவு அல்லது எழுத்தொலியளவு). அளவு-அளபு=மாத்திரை.
"மாத்திரை எழுத்தியல் அசைவகை எனா அ"(தொல்.செய்.1.)
"கண்ணிமை தொடியென அவ்வே மாத்திரை".(எழுத்-7),
மா என்பது தொன்று தொட்டு வழங்கி வரும் தமிழ்க் கீழ்வா
யெண்ணுப்பெயர்களுள் ஒன்று. அதன் அளவு(1/20) (1/30)
மா (ம.), மாவு (தெ.).
அரைமா, ஒருமா, ஒருமாவரை (ஒருமாரை), இருமா, மும்மா, நான்மா, மாகாணி என்பன அவ்வளவால் எற்பட்ட எண்ணுப் பெயர்கள்.
ஒரு வேலியில் இருபதிலொன்றான நில அளவு மா எனப்படும்.
"மாநிறை வில்லதும் பன்னாட் காகும் "(புறம். 184)-
ஓர் எடையில் இருபதிலொன்றான நிறையும் மா எனப்படும் (தொல்.180, உரை).
இங்ஙனம் பல்வேறு அளவு குறித்த மா என்னும் முதனிலைத் தொழிலாகுபெயர், ஆரியர் வருகைக்கு முற்பட்ட குமரிநாட்டு முழுத்தூய்மைத் தமிழ்ச்சொல். ஆதலால் இருக்குவேதத்தில் மா, மாத்ரா என்னும் சொற்கள் ஆளப்பட்டிருத்தல் நோக்கி மயங்கற்க. மா என்னும் முதனிலை போன்றே, அதனின்று திரிந்த மாத்திரம், மாத்திரை என்ற சொற்களும் தூய தமிழ் என அறிக. இன்றும் அது மாத்திரம், கேட்டமாத்திரத்தில், மாத்திரைக்கோல் (வரையிட்ட அளவுகோல்) எனப்பொது வழக்காக வழங்குதல் காண்க.
அளபு, மாத்திரை என்னும் இருசொற்களும் தமிழின் சொல் வளத்தையே காட்டும். "மாத்திரையின்றி நடக்குமேல்" (நாலடி242) என்பதனால், மாத்திரை என்பதன் அடிப்படைப்பொருள் அளவு என்பதேயென்று அறிந்து கொள்க. மாத்திரம்-மாத்ர(வ.), மாத்திரை-மாத்ரா (வ.) metrum (L.), metron(Gk.), meter(E.) metre, (E.) என்னும் மேலையாரியச்சொற்கள் mete (மதி=அளவிடு) என்னும் முதனிலையினின்று திரிந்தவை.
மு.வ உரை
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்
சாலமன் பாப்பையா உரை
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்
நன்றி: ரிஷ்வன்
உயிரோடு இருந்தாலும்
பயிர் விளையாத
களர் நிலத்துக்கே
கல்லாதவர் ஒப்பாவர்.
நன்றி: மழலைகள்
உவர் நிலம் ஒன்றுக்கும் உதவாது. விளையாத உவர் நிலம் ஒன்றுக்கும் பிரயோசனமில்லை. அதேபோல் கல்லாதவர் உயிரோடு இருப்பதால் ஒருவருக்கும் பிரயோசன்மில்லை, அவரால் பயனில்லை என்கிறார் வள்ளுவப் பெருமான். ஆகையால் இளைஞர்களே, மாணவர்களே, பல தடைகள் வந்தாலும் மனச்சக்தியினால் படிப்பை முடிக்க வேண்டும். கல்விக்கு அளவே கிடையாது, படித்துக்கொண்டே போகலாம், யாருக்காவது எதாவது கேட்க வேண்டுமா?"
No comments:
Post a Comment