Search This Blog

Disclaimar

This blog is totally for learning purposes. Non-commercial. In many of the posts, many snippets have been taken from various thirukkural blogs, books available online freely only for learning purpose without any intention of plagiarism or to make money. I have given due credit, link wherever possible. If you want your content to be removed, or you want more credit to be provided, please do let me know in the comment section of any of the posts. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (குறள் 215)

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங்

குறள் 436
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
என்குற்ற மாகும் இறைக்கு.
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
தன் - தன்னுடைய
குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

தன்குற்றம் - தன்னுடைய குற்றங்களை, (தனது நாட்டின் / குடும்பத்தின் குற்றங்கள்)

நீக்குதல் - ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்

நீக்கிப் - கண்டு உணர்ந்து பின்பு களைந்து சரி செய்து

பிறர் - அயலார், அன்னியர்

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

பிறர்குற்றங் - பிறர் குற்றங்களை

காணுதல் - அறிதல்; காண்டல்; சந்தித்தல்; செய்தல்; வணங்குதல்.

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

காண்கிற்பின் - பின்பு காண்கின்றவன் நீதி சொல்கின்றவன்

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பது வேற்றுமைப் பொருளில் அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு

என்குற்ற மாகும் - என்ன தவறு/குற்றம் வரும்/நிகழும் 

இறை - உயரம்; தலை; கடவுள்; தலைவன்; அரசன்; உயர்ந்தோன்; மூத்தோன்; பெருமையிற்சிறந்தோன்; கணவன்; பறவையிறகு; கடன்; வீட்டிறப்பு; மறுமொழி; மணிக்கட்டு; குடியிறை; சிறுமை; அற்பம்; காலவிரைவு; சிவன்; பிரமன்; மாமரம்.

இறைக்கு - அந்த தலைவனுக்கு ?

முழுப்பொருள்
ஒருவர் முதலில் தன்னுடைய குற்றங்களை கண்டுப் பிடித்து, உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். தன்னுடைய குற்றங்கள் என்றால் தன் குற்றங்கள் மற்றும் தன் குடும்பத்தில் உள்ள இடையுறுகள். 

அப்படித் தன்னுடைய குற்றங்களை நீக்கிவிட்டு பிறரின் மேல் உள்ள குற்றங்களை கண்டு நீதி சொல்கின்ற அளவிற்கு உள்ள ஒருவனுக்கு எந்த தவறு நிகழும் ? நிகழாது என்று சொல்லாமல் சொல்கிறார் திருவள்ளுவர்.

பொதுவாக பிறர் குற்றங்களை காண்பது மிக எளிது. ஏனெனில் அதில் நமது செயல் என்றோ அல்லது உழைப்பு என்றோ எதுவும் இல்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்யமுடியும். அதனால் தான் பிறர் குற்றம் காண்பதை ஒரு வேலையாகவே பிறர் செய்கின்றனர்.  அதுவே நமது குற்றங்களை கண்டுப்பிடித்தால் அதனை திருத்துவதற்கு நமது உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. அதனால் தான் அதனை பலர் செய்வதில்லை.

மேலும், பிறர் குற்றங்களை காண்பதால் நமக்கு என்ன பயன்? (தவறு செய்யும் நண்பர்களை நல்வழிப்படுத்துவது வேறு). ஒரு பயனும் இல்லை. அதுவே நம் குற்றங்களை நீக்கி நம்மை செம்மைப்படுத்திக்கொண்டால் நமக்கு நன்மை நிகழும். 

அதுமட்டுமின்றி ஒரு அரசர் தன்னுடைய (ஆட்சியிலும் நிர்வாகத்திலும் உள்ள) குற்றங்களை முதலில் நீக்கிப் பிறருடைய குற்றங்களை நீக்கினால் அவருக்கு தவறும் நிகழாது.

ஒருவர் தன்மேல் குற்றங்களை வைத்துக்கொண்டு அடுத்தவருக்கு வியாக்யானம் அளித்தால் பின்பு எதிராலி என்ன சொல்வார் ? முதலில் உன்ன திருத்திக்கோ, அப்புறம் எங்கள திருத்தலாம்னு தான் சொல்லுவார் என்பதையும் நினைவில் கொள்க.

ஒப்புமை
”தங்குற்றம் நீக்கல ராகிப் பிறர்குற்றம்
எங்கேனும் தீர்த்தற் கிடைப்புகுதல்” (பழமொழி 124)

மேலும்: அஷோக் (இதில் அவர் சொன்ன நிகழ்வு காந்தி வாழ்வில் நடந்த நிகழ்வு)

பரிமேலழகர் உரை
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் - முன்னர்த் தன் குற்றத்தைக் கண்டு கடிந்து, பின்னர்ப் பிறர் குற்றங்காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது? 

விளக்கம் 
('அரசனுக்குத் தன் குற்றம் கடியா வழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாம்; அது கடிந்தவழி முறை செய்தலாம்' என்பார், 'என் குற்றம் ஆகும்' என்றார்; எனவே, தன் குற்றம் கடிந்தவனே முறை செய்தற்கு உரியவன் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
தன் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் - முன்பு தன் குற்றத்தைக் கண்டு அதை நீக்கிவிட்டுப் பின்பு பிறர் குற்றத்தைக்காண வல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என் - அரசனுக்கு வரக்கூடிய குற்றம் யாது ? ஒன்று மில்லை.

இது குடிகளின் வழக்குத் தீர்த்துத் தண்டித்தல் பற்றியது. பிறர் குற்றங்கண்டு தண்டிப்பவன் முன்பு தான் அக்குற்றமில்லாதவனா யிருத்தல் வேண்டும். அரசன் தன் குற்றத்தை நீக்காது பிறர் குற்றத்திற்குத் தண்டிப்பதே கு ற் ற மா ம். அங்ஙன மன்றித்தன் குற்றத்தை நீக்கியபின் தண்டிப்பின் அது முறைசெய்தலாம். அது அவன் கடமையாதலால் 'என்குற்ற மாகும்' என்றார். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை.

மணக்குடவர் உரை 
தனக்குள்ள குற்றத்தை நீக்கிப் பிறர்மாட்டுள்ள குற்றத்தை ஆராயவல்லனாயின் அரசனுக்கு என்ன குற்ற முளதாம். இது தன்மாட்டுள்ள குற்றத்தை நீக்குதலே யன்றிப் பிறர் மாட்டுள்ள குற்றத்தையும் கடிய வேண்டுமென்றது. 

மு.வரதராசனார் உரை
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை
ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்

சாலமன் பாப்பையா உரை
படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!.

தன்னிடம் குற்றம் உள்ளபோது, அடுத்தவர்களின் குற்றத்தைக் கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியாது போவது இன்னும் ஓர் அவலம்.

அதையும் வள்ளுவர் சொல்லுகிறார்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் 
என்குற்ற மாகும் இறைக்கு

தன்னுடைய குற்றங்களை முதலில் நீக்கிவிட்டு, பிறகு அடுத்தவர்களுடைய குற்றத்தை நீக்கினால் மன்னவனுக்கு ஒரு குற்றமும் வராது.

தன்னுடைய குற்றத்தை நீக்கிக் கொள்ளாத போது, பிறருக்கு நீதி சொல்லுவது நகைச் சுவையைத்தான் உண்டாக்கும்.

டாக்டர் ஒருவர் கையில் சிகரெட்டைப் புகைய விட்டுக் கொண்டே, நோயாளியைப் பார்த்து சிகரெட் பிடிக்காதே என்றால் நோயாளி சிரிப்பானா இல்லையா?

வருமானத்திற்காக அரசே தவறான செயல்களில் இறங்குமானால் குடிமகனும் வருமானத்திற்காக தன்மானத்தை விற்கும் செயலைச் செய்யத் துணிவார்கள் இல்லையா? கோன் எவ்வழி குடிகள் அவ்வழிதானே?

பிறர்குற்றம் நீக்கும் முன்னே தன் குற்றம் நீக்கு. முதலில் உன் முதுகைப் பார் என்பது கிராமத்துப் பழமொழி.

அடுத்தவனைக் குற்றம் சொல்ல சுட்டு விரலை நீ நீட்டும் போது, மற்ற விரல்கள் உன்னைச் சுட்டுகின்றன என்கிறது ஒரு பாட்டு.

Thirukkural - Management - Personality Development - Being Proactive
Before a King finds fault with and in others, he has to remove the faults in him as a preventive measure. When a king can remove his faults, weaknesses, and shortcomings and points out the faults of others to them, he will be considered faultless and his suggestions will be acceptable.  Though Kural 436 is directly addressed to a King, the advice is applicable to everyone who wants to develop a professional personality.

How can a King be faulted who 
His own fault before seeing that of others.

English Meaning - As I taught a kid - Rajesh
Before one finds fault with and in others, he/she has to remove the faults in him/her as a preventive measure. When one can remove his/her faults, weaknesses, and shortcomings and points out the faults of others to them, he/she will be considered faultless and his/her suggestions will be acceptable. The main thing here is not just about being aware of one's faults but it is also removing them. Because, when finding faults is relatively easier, but when one removes them it takes a lot of effort. Spiritually speaking it makes one humble and one can understand how one can/could have done things differently. Also, correcting others is not going benefit us. Whereas if we correct ourselves, it will benefit us and it can also inspire and benefit our family and others. 

Questions that I ask to the kid
When you start looking for your faults, what should you do and what is the result of it?
Before pointing others faults, what should you do? 

2 comments:

  1. "தன் குற்றங்களை நீக்கி விட்டு, பின் அடுத்தவர்களின் குற்றங்களை நீக்க முயற்சித்தால், இறைவனே கூட நம் மீது குற்றம் காண முடியாது"....... இப்படி பொருள் கொள்ளலாமா?

    ReplyDelete
  2. இறை என்பது இங்கு தலைவன் என்ற பொருளில் எடுத்தால், இது Self-Leadership-ஐ குறிக்கும். ஆதலால் தன்னையே குறிக்கும். இறைவன் வந்து தவறு கண்டுப்பிடிப்பது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் மனத்துக்கண் மாசிலன் என்று தான் அறன்வலியுறுத்தால் அதிகாரத்தில் கூறியிருக்கார் வள்ளுவர். தன்னெஞ்சே தன்னை சுடும் என்பதும் வாய்மை அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

    ஆதலால் இங்கு self-leadership தான் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இறைவன் என்பவர் “வேண்டுதல் வேண்டாமை இலான்-அடி சேர்ந்ஹாருக்கு” என்று கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூறியிருப்பார். இறைவன் கருணையின் வடிவாய் கொண்டால் ஏன் இறைவன் வந்து நம்மை குற்றம் கண்டுப்பிடிக்க ஏன் வரவேண்டும்?

    மேலும், எல்லாவற்றையும் பிறர் வந்து நமக்கு ஏன் சொல்ல வேண்டும்? (இந்த பள்ளிக்கூடத்தில் படி, இந்த கல்லூரியில் படி, engg/medical/account/etc படி, இந்த மாதிரி companyல சேரு, இந்த வயசுல கல்யானம் பன்னிகோ, இத செய், இத செய்யாத) .. எல்லாதையும் இறைவன்/மத்தவங்க வந்து சொல்லனும் நு எதிர்ப்பாக்கதேவையில்லை
    நம்மைவிட நமக்கு நல்ல ஒரு நீதிமான் இருக்க முடியுமா என்ன?
    self-leadership - is owning up our life @ownership

    i hope it helps

    ReplyDelete