கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்

thirukkural meaning விளக்கம் அரசியல், பொருட்பால், வெருவந்தசெய்யாமை ,குறள் 570 கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை.
குறள் 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
[பொருட்பால், அரசியல், வெருவந்தசெய்யாமை]

பொருள்
கற்றும் - கற்கை - படித்தல்.

கல்லார்ப் - நெறிநூல்கள் கல்லாதவர்
கல்லார் - கல்வியறிவற்றவர், கீழ்மக்கள்.

பிணி நோய்; கட்டுகை; கட்டு; பற்று; பின்னல்; அரும்பு; துன்பம்; நெசவுத்தறியின்நூற்படை
பிணிக்கும் - நோய், துன்பம், the three kinds of temperament, வாதம் (flatulency), பித்தம் (bile), and சிலேட்டுமம் (phlegm)
பிணித்தல் - சேர்த்துக்கட்டுதல்; வயப்படுத்துதல்.

கடுங்கோல் - கொடுமையான ஆட்சி செய்யும் அரசு (அரசன்)
கோல் - செங்கோல் (அரசு)

அல் - அல்லது - தீவினை [அல்லது கெடுப்பவ னருள்கொண்ட முகம்போல(கலித். 148)], தவிர 

அதுவல்லது - அது அன்றி ,அது அல்லாமல் 
அதுவல்லது - அதைப்போல் தீவினை

இல்லை - வேறு இல்லை
நிலம் - தரை; மண்; பூமி; இடம்; வயல்; பதவி; நிலத்திலுள்ளார்; எழுத்துஅசைசீர்களாகியஇசைப்பாட்டின்தானம்; விடயம்; மேன்மாடம்; கள்ளிவகை

நிலக்குப் - இந்த நிலம் 

பொறை - பாரம், சுமை; கனம்; மலை; சிறுகுன்று; கல்; பூமி; பொறுமை; அடக்கம்; கருப்பம்; வலிமை.

பொறை - காணவேண்டிய தீவினை.
பொறைமை- பொறை, 6. நின்னெஞ்சங் கொண்ட பொறைமைகாணிய (பெருங். உஞ்சைக். 36, 84).
பொறைமை - காண்க:பொறுமை.

முழுப்பொருள்
நெறிநூல்கள் கல்லாதவர்களை மூடர்களை அமைச்சர்களாக கொண்ட அரசன் செய்யும் ஆட்சி எப்படி இருக்கும் ? கல்லாதவரிடம் ஆலோசனை கேட்டு ஆட்சி செய்தால் எப்படி இருக்கும்? கொடுமையான கடுங்கோல் ஆட்சியாக அமையும். 

இங்கு நெறிநூல்கள் மட்டும் என்று பொருள் கொள்ளாமல், நாம் மக்களின் துயரங்களையும் ஏக்கங்களை கல்லாதவர் என்றும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

அதைவிட தீவினையை இந்த நாடும் நிலமும் காணத்தக்கது பொறுத்துக்கொள்வது வேறு ஏதும் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

மேலும் அஷோக்

குறட் கருத்து  (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)

ஏழையரைக் கருதாமல் அவர்கள் கொண்ட
ஏக்கங்கள் உணராமல் ஆட்சி செய்வோர்
நாளையதை எண்ணாமல் தங்கள் ஆட்சி
நடக்க வேண்டும் என்று மட்டும் எண்ணம் கொண்டோர்
கோழைகளை கற்றறிய மாட்டார் தன்னை
கூட்டாக வைத்திருப்பார் அவர்தம் ஆட்சி
பீழை அது மண்ணுக்குச் சுமையே ஆகும்
பெருஞ்சுமையாய் நிலத்திற்கு துன்பம் தரும்



மூடர்களை அமைச்சர்களாகவும், மூர்க்கர்களை அதிகாரிகளாகவும் கொண்டு இயங்கும் அரசுதான் கடுங்கோல் அரசு. கல்வி அறிவு சிறிதுமில்லாத அரசு அது. அதுதான் இந்த பூமிக்குப் பெரிய பாரம்.

அறிவற்ற ஒருவன் தனக்குத் தானே செய்து கொள்ளும் தீமையை ஓர் எதிரிகூட அவனுக்குச் செய்யமாட்டான் என்று வள்ளுவர் இன்னொரு குறளில் கூறியுள்ளார். அறிவற்ற அரசும் தனக்குத் தானே அழிவைத் தேடும். இந்தப் பூமிக்கு அதுதான் பேரழிவு. எத்தனை பெரிய அனுபவ வார்த்தை இது! வரலாறுகளைப் படித்துப் பார்த்தால், இக்குறளின் மகிமை புரியும்.

பரிமேலழகர் உரை
கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும்-கடுங்கோலனாய அரசன் நீதி நூல் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை-அக்கூட்டம் அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை. 

விளக்கம் 
('கடுங்கோல்' என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று 'அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின், 'கல்லார்ப் பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பு ஆகலின், நிலத்திற்குப் 'பொறை அது அல்லது இல்லை' என்றும் கூறினார். நிலக்கு என்பது செய்யுள் விகாரம். இதனான் வெருவந்த செய்தலின் குற்றம் கூறப்பட்டது.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கடுங்கோல் கல்லார்ப் பிணிக்கும் -கொடுங்கோலரசன் அறநூலும் அரசியல் நூலுங் கல்லாதாரைத் தனக்கு ஆள்வினைத்துணைவராகச் சேர்த்துக்கொள்வான் ; அது அல்லது நிலக்குப் பொறை இல்லை -அக்கூட்டமல்லாது நிலத்திற்கு வேறு கனமான பொறை (பாரம்)இல்லை.

கொடுங்கோலன் செயல் அவனாட்சியின்மே லேற்றிக் கூறப்பட்டது. கற்றோர் கடுங்கோலனொடு கூடாமையிற் 'கல்லார் பிணிக்கும் ' என்றும் , ஏனையோரைப் பொறுக்கும் பொறை இயல்பாகவிருந்து பொறையாகத் தோன்றாமையின் ' அதுவல்லதில்லை நிலக்குப் பொறை' என்றுங் கூறினார்.'நிலக்கு' என்பதில் அத்துச்சாரியை தொக்கது.இதனால் நிலமும் அஞ்சும் வினை கூறப்பட்டது.

மணக்குடவர் உரை
கடுங்கோலனாகிய அரசன் அறிவில்லாதாரை அமாத்தியராகக் கூட்டிக் கொள்ளும்; அவ்வரசன் அல்லது நிலத்துக்குப் பாரம் வேறொன்றும் இல்லை. 

மு.வரதராசனார் உரை
கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை
மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

நன்றி ரிஷ்வன்
கொடுங்கோல் அரசன்
கல்லாதவரை அரணாக்கி
தொல்லைதரும் ஆட்சிசெய்வான்
அதைப்போல
அந்நாட்டிற்கு பெரும்சுமை
தருபவை வேறுஇல்லை.

Post a Comment

© 2013–2025 Author Rajesh. Articles on this site can be freely shared online. Publishing the articles—partly or fully—in print, TV, e-books, or other formats requires prior permission from the author Developed by Jago Desain