குறள் 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
[பொருட்பால், அரசியல், கல்லாமை]
பொருள்
கல்லார் - கல்வியறிவற்றவர், கீழ்மக்கள்.
கல்லா தவரும் - கல்வி கற்காதவர்கள்.
நனி - மிகுதியாய், naṉi s. narrowness, நெருக்கம்; 2. adj. & adv. much, very greatly, intensely.
நனி - நன்-மை, மிகுதியாய் (வந்து நனி வருந்தினைவாழியென் னெஞ்சே (அகநா. 19).), நெருக்கம், பெருமை
நல்லர் - நல்லவர் ஆவார்கள்
கற்றார் - கற்றவர்கள் ;சான்றோர்
முன் - இடத்தால்முன்; காலத்தால்முன்; உயர்ச்சி; முதல்; பழைமை; ஏழனுருபு; மனக்குறிப்பு; காண்க:முன்றோன்றல்.
கற்றார்முன் - நன்கு கற்றவர்கள் முன்னே
செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்
சொல்லாது - பேசாமல்
இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.
பெறின் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.
இருக்கப் பெறின் - இருப்பார்கள் என்றால்.
முழுப்பொருள்
முன் குறிப்பு: கற்றவர்கள் முன் கல்லாதவர்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது இக்குறள். கற்றவர்கள் இருக்கும் ஒரு அவை என்று மட்டும் அல்லாது, கற்றவர்கள் முன்னே எப்பொழுதும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது இக்குறள். ஏன் நான் அப்படி பொருட்படுத்திக்கொண்டேன் என்றால் இது அரசியலில் வருகிறது அமைச்சியலிலோ அவையவயிலோ அல்ல.
கற்றவர்கள் முன் கல்லாதவர்கள் கற்கும் முனைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் முன் தனக்கு தெரிந்த அரைகுறையானவற்றை பயனில்லாமல் பேசக்கூடாது. வெறும் வாய் மூடி இருப்பதனால் மட்டும் அல்ல கற்கும் முனைப்புடன் இருப்பதனாலேயே அவர்கள் நல்லவர்கள் ஆகின்றனர்.
அது மட்டும் இன்றி அரைகுறையானவற்றை கற்றவர்கள் முன் பேசினால் கல்லாதவர்கள் எவ்வளவு மூடர்கள் என்று தெரிந்து விடும். அதுமட்டும் இன்றி அவர்கள் பயனில்லாமல் பேசுகிறார்கள். அவர்களுக்கு கற்பதில் ஆர்வம் இல்லை என்றும் வெட்டிப்பேச்சில் திளைக்கிறார்கள் என்றும், இவர்கள் வாய்ச்சொல் வீரர்கள் என்றும் உணர்வார்கள் கற்றவர்கள். ஆதலால் தங்கள் பேச்சைக் குறைப்பார்கள் (சிற்றினம் அஞ்சும் பெருமை / பையலோடு இணங்கேல்.). இதனால் கல்லாதவர்கள் கற்கவேண்டியவற்றை தான் இழப்பார்கள்.
ஆதலால், கற்றவர் முன் பேசாமல் அவர்கள் உரைப்பதைக் கேட்பதேச் சாலச் சிறந்ததாகும்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் இப்படிச் சொல்லுவார் (நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,)
.................
.................
.................
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ
.................
.................
.................
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ
.................
.................
.................
மேலும் அஷோக்
ஆத்திச்சூடி
பையலோடு இணங்கேல்
வாது முற்கூறேல்
வல்லமை பேசேல்
வெட்டெனப் பேசேல்
ஓதுவது ஒழியேல்
ஞயம்பட உரை
குறட் கருத்து (நன்றி: திரு. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன்)
கல்விதான் உயர் செல்வம் என்றுரைத்த வள்ளுவனார்
கல்லார்கள் கண்களினைப் புண் என்றும் உண்ர்த்தியவர்
எல்லோரும் அவ்வழியில் இனிதாய் நடக்கையிலே
இதை மாற்றி ஒரு குறளை நகைப்பாக்கி வைக்கின்றார்
கல்லாதார் தமைப்பற்றி கருத்தொன்று சொல்லுகின்றார்
நல்லார் அவர் மிகவும் நல்லார் என்றுரைக்கின்றார்
எல்லோரும் அவரிடத்தில் என்னவென்று கேட்டு நின்றால்
சொல்லுகின்றார் ஒரு கருத்தை அவரன்றி யார் சொல்வார்
கல்லார் மிகச் சிறந்தார் மிகச் சிறந்தார் என்றுரைக்க
கல்லார்க்கு நல்ல வழி காட்டுகின்றார் வள்ளுவரும்
நல்லார் நிறைந்திருக்கும் நற் சபைக்குள் சென்று விட்டால்
நாடு நிறைக் கற்றவரின் மேல் சபைக்குள் வந்து விட்டால்
பொல்லாத தன் வாயைத் திறக்காமல் மூடி விட்டால
போதும் அவர் போற்றுதற்கு உரியவராய்ப் பொலிந்திடுவார்
சொல்லாமல் சொல்லுகின்றார் வள்ளுவப் பேராசானும்
சோதனையில் அவர் வெல்ல மாட்டார் என்றுறுதியுடன
நன்றி அம்மன் தரிசனம்
கல்லாதவர்கள் கூட மிக மிக நல்லவர்கள்தான். ஆனால் அவர்கள் படித்தவர்கள் முன்னே வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் குட்டு வெளிப்பட்டுவிடும். அவர்கள் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால், கேட்டவர்களின் காதுகளிலிருந்து ரத்தமே வழிந்தாலும் ஆச்சரியமில்லை. அது எவ்வளவு பெரிய ஹிம்சை! அந்த ஹிம்சை செய்யாதவர்கள் நல்லவர்கள்தாமே!
நாலடியாரில் ஒரு பாட்டு இதே விஷயத்தைச் சற்று கடுமையாகச் சொல்லுகிறது.
கற்றவர்கள் சபையிலே கல்லாதவன் வாய்திறப்பது நாய் குரைப்பதற்குச் சமமாகும். அவர்கள் பேசாமல் இருந்தால் நாய் மௌனமாக இருப்பதற்குச் சமமாகும் என்றே சொல்லுகிறது.
பரிமேலழகர் உரை
கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதாரும் மிக நல்லராவர்; கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின் - தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண் ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.
விளக்கம்
(உம்மை . இழிவுச் சிறப்பு உம்மை; தம்மைத்தாம் அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்' என்னும், கூடின் ஆண்டுத் தம்மை வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை விரும்புவராகலானும் 'நனி நல்லர்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண் சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.)
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
கற்றார்முன் சொல்லாது இருக்கப்பெறின்-தம் அறிவின்மையையும் தகுதியின்மையையும் உணர்ந்து, கற்றோரவையின் கண் உரைநிகழ்த்தும் வகையில் தாம் ஒன்றுஞ் சொல்லாது முழு அடக்கமாயிருப்பராயின்; கல்லாதவரும் நனி நல்லர்-கல்லாத வரும் மிக நல்லவரேயாவர்.
உம்மை இழிவுசிறப்பு . அவையின்கண் அமைதியாயிருக்குங் கல்லாதார், பிறராற் பழிக்கப்படாது தம் சிறு மதிப்பைக் காத்துக் கொண்டும், அவையோர்க்கு வெறுப்பை விளைத்து அங்குநின்றும் அகற்றப்படாது அறிஞர் உரைகேட்டு இன்புறுவதொடு அறிவடைந்தும் , நல்லவராவ ராதலால் ' நனிநல்லார்' என்றார். ' நனி' உரிச்சொல்.
கல்லாது நீண்ட வொருவ னுலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு-மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே யிரா அ
துரைப்பினும் நாய்குரைத் தற்று. (நாலடி. 254)
மணக்குடவர் உரை
கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின். சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.
மு.வரதராசனார் உரை
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.
சாலமன் பாப்பையா உரை
கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.
எழுத்தாளர், வசனகர்த்தா சுஜாதா - ஒரு கம்பராமயணம் விழாவில் (சுட்டியை சொடுக்குக)
இந்த விழாவில் (கோவை கம்பன் கழக விழா) பேசியவர்கள், பேசப் போகிறவர்கள் எல்லாரும் என்னைவிட அதிகமாக கம்பனைப் படித்து ஆராய்ந்து தேர்ந்தவர்கள். இவர்களுக்கிடையில் அரைகுறையான என்னை அழைத்துப் பேச வைத்திருப்பது, அதுவும் கம்பனைப் பற்றி பேச வைப்பதிலிருந்து நான் எவ்வளவு தூரம் தப்பாக மதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. இருந்தும் இந்தச் செயலை, இந்தப் பெரியவர்களின் பெருந்தன்மைக்கு உதாரணமாகக் கொண்டு தெரிந்ததைப் பேசுகிறேன்.
“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்”
(படிக்காதவர் படித்தவர் முன் பேசாமல் இருப்பதே நல்லது)
என்று வள்ளுவர் எச்சரித்தாலும் “அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளைகள் தரையில் கீறினால் தச்சரும்” காயமாட்டார்கள் என்று கம்பனே உத்தரவாதமாய் சொல்வதால் “ஆசை பற்றி” அறைகிறேன்.
நன்றி ரிஷ்வன்
கற்றவர் அவையில்
கல்லாதவன் கூட எதுவும்
சொல்லாமல் இருந்தால்
நல்லவனாகவே கருதப்படுவான்
No comments:
Post a Comment