Search This Blog

திருக்குறள்

அறம் பொருள் காமம் - குறள் வரிசை பதிவு வரிசை

ஒவ்வொரு பாலின் அதிகாரங்களும் (அதன் சுட்டிகளும்) இந்த முதன்மை பதிவின் சுட்டியில் உள்ளன. தேவைக்கேற்ப கீழ்காணும் சுட்டியை தட்டவும் அறத்து...

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி

குறள் 306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்.

சினமென்னும் - சினம், வெகுளியாகிய விலக்கத்தக்கவை
சேர்ந்தாரைக் – யார் அவற்றைக் கொள்கிறார்களோ
கொல்லி – அவர்களையே அழிக்கும் தன்மையது (முந்தைய குறள்களைப் பார்க்க)
இனமென்னும் – (அத்தகைய சினமானது), தம்மைச் சார்ந்தவர்களாகி, தவத்துக்கு உறுதுணையானவர்களை
ஏமப் – தன்னுடைய சேமத்துக்கு, நலத்துக்கு
புணையைச் – கட்டுக்காவலாக, உறுதியாக, உதவியாக, கரையேற்றும் தோணியாக இருப்பவர்களைச்
சுடும் – தீங்கென்னும் தீயினால் சுட்டெரித்து, அவர்களை விலக்கிவிடும்

மேலும்: அஷோக்

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
சினம் என்பது யாரிடம் இருக்கிறதோ அவர்களை அழித்து விடுவதோடு அவருக்கு வாழ்வில் பேருதவியாக இருக்கும் அருநட்பையும் கெடுத்து விடும் என்று எடுத்துக் கூறுகிறது இக்குறள். எவ்வாறு என ஆராய்வோம். பரு உடலில் விண் துகள் தொடரியக்கமான நுண் உடல் எனும் சூக்கும ஆற்றல் எங்கும் விரைவாக உடல் முழுவதும் நிரம்பி ஓடிக் கொண்டிருக்கிறது. விண் துகள் விரைவான தற்சுழற்சி இயக்கம் உடையது. அதனால், அச்சுழற்சி விரைவிலிருந்து தொடர்ந்து ஒரு அலை தோன்றி, உடல் முழுவதும் இறைவெளியோடு கலந்து சீவகாந்தமாக இயங்குகிறது. மனத்தால் ஆகும் உடற் கருவி இயக்கங்களும், செயல்களால் ஆகும் உடற் கருவி இயக்கங்களும், சீவ காந்த அலையில் திரள்களை உண்டு பண்ணுகின்றன. ஒவ்வொரு திரளும் குறிப்பிட்ட குணநலன்களை உடையது (Characteristic Magnetic Domain) ஆகும். இவற்றைக் கருமையத்திலுள்ள சீவகாந்தச் சுழல் ஈர்த்துச் சுருக்கி நிழலில் நிழல் போன்று இருப்பு வைத்துக் கொள்ளுகிறது. இதுவே வினைப்பதிவு ஆகும். பிறகு அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கும் மன அலைச்சுழல் விரைவுக்கும் ஏற்ப கருமையத்தில் சுருங்கியுள்ள பதிவுகள் மூளையின் செல்களால் விரித்துக் காட்டப்பட்டு எண்ணங்களாகின்றன. அதற்கேற்றவாறு உடல் கருவிகள் தூண்டப்பட்டு செயல்களாக மலர்கின்றன. மனிதனுடைய கருமையத்தில் அளவற்ற செயல்திறமைகளும், அறிவின் ஆற்றல்களும் அமைந்துள்ளன. அவற்றின் முழுமையும் நோக்கமும் அவன் தோற்றத்துக்கும் மூலமான இறைநிலையை அறியவும் அடையவும்தான் ஆகும். 

புலன் கவர்ச்சியால் மனம் சிறு சிறு பொருளையும் இன்பங்களையும் துய்த்தலால் அறிவுத் திறமையும், ஆற்றலும் தடைபட்டு, தேக்கமுற்று, அதன் இயக்க விரைவு தன்முனைப்பு என ஆகிறது. இந்த தன்முனைப்பு, பொருட்கள் மீதும் மக்கள் மீதும் தொடர்பு கொண்டு, பேராசை, சினம், கடும்பற்று முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு உணர்ச்சிவயமான  குணங்களாவும் மாறுகின்றன. இந்த உணர்ச்சிவயமான ஆறு குணங்களோடு மனிதன் செயல்புரியும்போதுதான், பொய், சூது, கற்பு நெறி பிறழ்தல், கொலை, களவு எனும் ஐந்து பெரும் பழிச் செயல்களைப் புரிகிறான். மனித குல வாழ்வில் துன்பங்களும், சிக்கல்களும் பிணக்குகளும் போர்களும் உண்டாகின்றன.

இத்தகைய கேடுகளை விளைவிக்கும் உணர்ச்சி வயமான குணங்களில் சினமும் ஒன்று. சினம் ஒருவரிடம் எழும்போது உடலிலும் மனதிலும், சுற்றத்தாருக்கும் சில சில கேடுகள் ஏற்படும். அக்கேடுகள் வினைப்பதிவுகளாகி, அடிக்கடி அதே எண்ணம், அதே செயல், எழுந்து வாழ்வைத் துயர் அடையச் செய்யும்.

சீவகாந்த அலையே மனம். புலன்களை விழிப்பு நிலையில் இயக்கும்போது மன அலைச்சுழல் வினாடிக்கு 14 முதல் 40 வரையில் இருப்பதாகக் கணக்கெடுத்துள்ளார்கள். விஞ்ஞானிகள் அதற்குரிய கருவியான (E.E.G) எலக்ட்ரோ என்செப்லோகிராம் கொண்டு இந்த நிலையில் இயங்கும் மன அலைக்கு பீட்டா அலையென்றும் பெயர் கொடுத்திருக்கிறார்கள். சினம் எழும்போது பீட்டா அலை மிகவும் விரைவு கொள்ளும். அதனால், சீவகாந்த ஆற்றலை மிகுதியாகச் செலவாக்கி விடும். இந்த விரைவான உணர்ச்சிவயப்பட்ட அலையால் காந்த ஆற்றல் குறைவுபடுகிறது. இயற்கை அதை உடனே சமன் செய்யத் தொடங்குகிறது. ஒவ்வொரு உயிர்த்துகளிலும் தற்சுழல் விரைவு அதிகமாகிறது. இதனால் காந்த ஆற்றல் கூடி அதன் இருப்பில் சமநிலைக்கு வருமேயானாலும், தொடர் விளைவுகளை சிந்திப்போம். விரைவான தற்சுழற்சி உயிர்த்துகள் அடையும்போது, அவன் ஒவ்வொன்றுக்கும் இடையில் இயல்பாக அமைந்துள்ள இடைவெளி அதிகமாகிறது. இதனால் சூக்கும உடலின் பருமன் பெருகுகின்றது. உதாரணம்: தண்ணீரை சூடேற்றினால் நீர் ஆவியாகி அதன் பருமன் விரிவடைந்து, ஒன்றுக்கு நூறாக விரிவடைவது போல, தூல உடலுக்குள் இருக்கும் சூக்கும உடல் (உயிர் ஆற்றல்) விரிவு பெற்றால், உடலை விட்டும் அது வெளியே பிதுக்கம் (Extension) பெறும். அப்படி வெளியே போகும் உயிராற்றல் மீண்டும் உடலுக்குத் திரும்பாது. இதனால் உயிரின் திணிவு குறைந்து வலுவு குறையும். மேலும் உயிராற்றல் விரிவு மூளை செல்களில் மோதும். என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சிந்திக்கும் நிலையே மாறி ஒரு வித போதை நிலையுண்டாகும். பொருளை அழிக்கவோ, மக்களின் உடலுக்கும் மனதுக்கும் துன்புறுத்தவோ தக்க செயல்கள், முரட்டுச் செயல்கள் உருவாகும். 

மேலும் அதன் தீயவிளைவுகளைக் கணிப்போம். சூக்கும ஆற்றலின் விரிவு இரத்தத்தை விரைவாக ஓடச் செய்து, இரத்த அழுத்தத்தை விரைவாக ஓடச் செய்து, இரத்த அழுத்தத்தை (Blood Pressure) அதிகரிக்கும். இதனால், இருதயத் துடிப்பும், நரம்புகள் இயக்கமும் பாதிக்கப்பட்டு கை, கால்கள் நடுக்கமும் உண்டாகும்.

இவ்வளவு விளைவுகளும் ஒரு தடவை சினம் கொள்ளும்போது சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ தவிர்க்க முடியாதபடி ஒரு மனிதனுக்கு ஏற்படுகிறது. அடிக்கடி சினம் கொள்பவர்கள் உடல்நலமும், மனவளமும் என்ன ஆகும் ? இந்த விளக்கங்களை உள்ளடக்கியே, சினம் சேர்ந்தாரைக் கொல்லி எனப்படுகிறது. சினம் கொள்ளும் மனிதன், வளத்தையே அழிக்கிறது என்பதுதான் பொருள். 

மேலும் ஒரு எச்சரிக்கை கொடுக்கிறார். "இனம் எனும் ஏமப் புணையச் சுடும்" என்று. மிகவும் மதிப்புடைய இன்றியமையாத நட்பையும் சுற்றத்தையும் வெறுப்பு கொண்டோடச் செய்யும் என்பதே இதன் கருத்து. இது எவ்வாறு என்று சிந்திப்போம். 

மனிதனுக்குப் பொதுவாக யாரிடம் சினம் எழுகிறது ? யார் மீது சினம் உண்டாகிறது ? யார் ஒருவர் அவர் நலனுக்காகவே அன்போடும் பணிவோடும் அக்கரையோடும் உதவி செய்கிறார்களோ அல்லது தொண்டு செய்கிறார்களோ அவர்கள் மீதுதான் அடிக்கடி சினம் எழுகிறது. நலம் செய்பவர்களைப் பாராட்ட வேண்டும். நன்றி செலுத்த வேண்டும். இதுதான் மனிதப் பண்பு. மாறாக அவர்மீது சினம் கொண்டால், அந்த இழிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் வருந்துவார். அவர் வருத்த அலை சினம் கொண்டவர்களுக்குச் சாப அலையாகப் பதிவாகும். விளைவு உறவிலே உள்ள அன்பும் பிடிப்பும் குறையும் அல்லது முறிந்து போகும். சாப அலைப் பதிவினால் மனதின் அமைதி நிலை பாதிக்கப்படும். இவையெல்லாம் உணர்ந்த பேரறிஞர் திருவள்ளுவர் சினம் என்பது அது யாரைச் சேருகிறதோ அவர் நலம் அழிப்பதோடு அவருக்கு உள்ள அன்புள்ள நட்பையும், உறவையும் கெடுத்துவிடும் என்று கூறுகிறார், உலக மக்கள் உய்ய வேண்டுமென்ற கருணை உள்ளத்தோடு.

“கறந்த பால் முலைபுகா, கடைந்த வெண்ணெய் மோர்புகா, 
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா, 
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டும்போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே”
- சிவவாக்கிய

ஆத்திச்சூடி
ஆறுவது சினம்
கடிவது மற
சுளிக்கச் சொல்லேல்
வெட்டெனப் பேசேல்.
முனைமுகத்து நில்லேல்.
வாது முற்கூறேல்
தீவினை அகற்று
நைவினை நணுகேல்
நொய்ய உரையேல்
நோய்க்கு இடம் கொடேல்.
மனம் தடுமாறேல்

நன்றி: அம்மன் தரிசனம்


ற்றங்கள் படகு போன்றவர்கள். கோபம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, ஒரு கொள்ளிக் கட்டையாகி அப்படகிலே ஓட்டை போடுகிறது. விளைவு? எல்லாரும்தானே மூழ்க வேண்டும்?

தோணியை எரித்துவிட்டுக் கடலைத் தாண்ட முடியுமா? சுற்றங்களைத் தொலைத்துவிட்டு அமைதி காணமுடியுமா? ஆனால் கோபம் தோணியை எரிக்கிறது. பாதி வழியில்...

ஆனாலும் பாருங்கள். இந்தக் கோபத்தைப் பலரால் விட முடியவில்லை. கோபத்தின் விளைவாக எல்லாம் இழந்து பிச்சைக்காரன் ஆனான் ஒருவன். ஆனாலும் சக பிச்சைக் காரனிடத்தில் தன் கோபத்தைக் காட்டிக் கொண்டுதானிருந்தான்.

சிலர் கோபத்தில் தன்னைத் தானே வதைத்துக் கொள்வதும் உண்டு. தனக்குத்தானே சூடும் போட்டுக் கொள்ளுதல், தன்னைத் தானே பட்டினி போட்டுக் கொள்ளுதல்... இப்படி சுயதண்டனை அளிப்பதும் உண்டு. இதுவும் கூடாது.

இதுவரை யாரும் கோபத்தால் யாரையும் திருத்த முடிந்ததில்லை. கோபத்தால், தான் எதிர்பார்த்த பலனை அடைந்ததுமில்லை.

யாராவது தவறு செய்தால் அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். தவறுகளைத் திருத்த அதுதான் வழி.

ஒரு குழந்தை சிலேட்டில் ஓர் எழுத்தைத் தவறாக எழுதிவந்து காட்டுகிறது. தலையில் குட்டுவைக்கிறோம். அது நல்ல பலனைத் தருமா?

குழந்தை அழ ஆரம்பிக்கும். குட்டுப்பட்டது மறக்கும் வரை எழுதுவதில் கவனம் செலுத்த முடியாமல் போகும் அதற்கு. அதே போலத்தான் பெரியவர்களின் நிலையும் இருக்கிறது.

எப்போதோ, இராமன் எறிந்த மண் உருண்டை கூனியின் மீது பட்டுவிட்டதாம். அது பட்டாபிஷேகத்தைச் சிதறடித்துவிட்டது. அறியாமல் செய்த சிறு தவறுக்குக் கூட, பழிவாங்கத் துடிக்கும் உலகம் இது.

நாம் “திருத்துகிறேன் பார்” என்று செய்யும் தவறுகளை எப்படி பாவிக்குமோ? என்ன பலனைத் திருப்பித் தருமோ யார் கண்டார்? ஆகவே கோபம் கொள்வது தனக்குத்தானே தீமை தேடுவதாகவே முடிகிறது.

பரிமேலழகர் உரை
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புனையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புனையையும் சுடும். 

விளக்கம்
(சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்; 'தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, 'உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; 'இந் நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்,' என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியயராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம் என்னும் ஏமப்புணை' என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.)

ஞா. தேவநேயப் பாவாணர் உரை
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி- சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்- தன்னைச் சேர்ந்தவரை மட்டுமின்றி, அவருக்குத் துன்பக்காலத்தில் ஏமப் புணைபோல் உதவும் இனத்தாராகிய தன்னைச் சேராத வரையுஞ் சுடும்.

சேர்ந்தாரைக்கொல்லி என்னும் பெயரிலுள்ள பலர்பா லீறு ஏனை நான்கு பாலையுந் தழுவும். இத்துறவறவியலிற் கூறப்பட்டுள்ள அறங்களுட் சில இருவகை யறத்திற்கும் பொதுவென்பது முன்னரே கூறப்பட்டது. அவற்றுள் வெகுளாமை என்பது ஒன்று. இருவகை யறத்தார்க்கும் இனமாக உள்ளவர் துன்பக் காலத்தில் உதவித் தூக்கியெடுத்தலால், அவரை ஏமப்புணையாக உருவகித்தார். ஏமப் புணையாவது, நடுக்கடலிற் கப்பல் மூழ்கும்போது கலவர் ஏறித்தப்பும் ஏமப் படகு. (life-boat) வாழ்க்கைக் கடலைக்கடக்கும் இல்லறத்தார்க்கு இடுக்கட் காலத்தில் உதவிக்காக்கும் இனத்தார் ஏமப்புணையார்; பிறவிக் கடலைக் கடக்கும் துறவு பயில்வார்க்குத் தவவோகங்களில் தவறு நேர்ந்து அவர் கெடும் நிலையில் அவரைத்திருத்தி ஆற்றுப்படுத்தும் முழுத்துறவியர் ஏமப்புணையார். 'சேர்ந்தாரைக்கொல்லி' தீக்கு ஒரு பெயர்.

சுடுதல் சேர்ந்தவரை வருத்துதலும் சேர்ந்தவரைச் சேர்ந்தாரைத் தாக்குதலும். கனல்தீ உடல் தொடர்பு கொண்டாரை மட்டும் வருத்த, சினத்தீ உடல் தொடர்பு கொண்டாரொடு உளத்தொடர்பு கொண்டாரையும் வருத்தும் என்பதாம். புணையையும் என்னும் எச்ச உம்மை தொக்கது. வெகுளி என்னுஞ் சொல்லின் வேர்ப்பொருளே எரிவது என்பதாம். வேகு-வெகுள்-வெகுளி.

மணக்குடவர் உரை
சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும். 
சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.

சாலமன் பாப்பையா உரை
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

வ.உ.சிதம்பரனார் உரை
பொருள்: சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - வெகுளி என்று சொல்லப் படும் தீ, இனம் என்னும் ஏம புணையை சுடும் - சுற்றம் என்று சொல்லப்படும் காப்புத் தோணியை எரிக்கும்.

அகலம்: தான் சேர்ந்த பொருளை அழித்தலால் ‘தீ சேர்ந்தாரைக் கொல்லி’ என்ற பெயர் பெற்றது. கொல்லி என்பது வினையாலணையும் பெயர். இத் தீ ஏனைய தீப் போலல்லாமல் தன்னைச் சேர்ந்தாரையும் தன்னைச் சேராதாரையும் ஒருங்கு அழிக்கும் என்றார்.

No comments:

Post a Comment