இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்

 

குறள் 988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
[பொருட்பால், குடியியல், சான்றாண்மை]

பொருள்
இன்மை - இல்லாமை; வறுமை உடைமைக்குமறுதலை; அறுவகைவழக்கினுள்ஒன்று.

ஒருவற்கு - ஒரு மனிதனுக்கு

இளிவு - இழிவு; இகழ்ச்சி இழிதகவு அருவருப்பு அவலச்சுவைநான்கனுள்ஒன்று; நிந்தை

அன்று- அல்ல, அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

சால்பு - சான்றாண்மை - கல்வி கேள்விகளில் நிறைந்து ஒழுகுந்தன்மை; பெருந்தன்மை; பொறுமை; கள்ளிறக்குந்தொழில்.
சால்பு - மேன்மை; நற்குணம்; சான்றாண்மை; தன்மை; மனவமைதி; கல்வி.

என்னும் - யாவும், எல்லாம்; என்றுசொல்லப்படும்; யாதும்; சிறிதும்

திண்மை - வலிமை; உறுதி; கலங்காநிலைமை; பருமன்; உண்மை.

உண்டாகப் - உண்டாதல் - விளைதல்; செல்வச்செழிப்பாதல்; உளதாதல் நிலையாதல்; கருக்கொள்ளுதல்

பெறின் -  பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

முழுப்பொருள்
ஒருவற்கு சான்றாண்மை எனப்படும் கல்வி கேள்விகளில் நிறைந்த ஒழுக்கம், பெருந்தன்மை, பொறுமை, மேன்மை, நற்குணம், மன அமைதி ஆகியவற்றில் வலிமையும் உறுதியும் உண்மையும் நிலையாக பெற்றால அவர் செல்வத்தில் வறியவராக இருந்தாலும் அவருக்கு வறுமை ஒரு இழிவு அல்ல.

ஒருவர் சால்பினை உடைமை பெற்றால் அவருக்கு வறுமை என்பது ஒரு இழிவு அல்ல. வறுமை என்பது செல்வத்தில் அல்லாமல் சால்பில் இருந்தால் அதுவே இழிவு என்று கூறாமால் கூறுகிறார் திருவள்ளுவர்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்படும் வலி உண்டாகப்பெறின்; ஒருவற்கு இன்மை இளிவு அன்று - ஒருவனுக்கு நல்குரவு இளிவாகாது. (தளராமை நாட்டுதலின், வலியாயிற்று. இன்மையான் வருவதனை இன்மை தானாக உபசரித்துக் கூறினார். சால்புடையார் நல்கூர்ந்தவழியும் மேம்படுதலுடையார் என்பதாம்.).

மணக்குடவர் உரை
ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது. இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.

மு.வரதராசனார் உரை
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

சாலமன் பாப்பையா உரை
சான்றாண்மை எனப்படும் மன ஆற்றல் மட்டும் ஒருவனிடம் இருந்து விடுமானால், வறுமை அவனுக்கு இழிவு ஆகாது.

No comments:

Post a Comment