பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து


குறள் 938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது
[பொருட்பால், நட்பியல், சூது]

பொருள்
பொருள்  - சொற்பொருள்; செய்தி; உண்மைக்கருத்து; செய்கை; தத்துவம்; மெய்ம்மை; நன்குமதிக்கப்படுவது; அறிவு; கொள்கை; அறம்; பயன்; வீடுபேறு; கடவுள்; பலபண்டம்; பொன்; மகன்; தந்திரம்; முலை; உவமேயம்; அருத்தாபத்தி; அகமும்புறமுமாகியதிணைப்பொருள்கள்; அர்த்தசாத்திரம்; தலைமை.

கெடுத்து - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல்.

பொய் - மாயை; போலியானது; உண்மையல்லாதது; நிலையாமை; உட்டுளை; மரப்பொந்து; செயற்கையானது; சிறுசிறாய்.

மேற்கொள்ளுதல் - மேலேறுதல்; மேம்படுதல்பொறுப்பேற்றல்; உறுதிமொழிகூறல்; ஏற்றுக்கொள்ளுதல்; முயலுதல்; வஞ்சினம்உரைத்தல்.

பொய் மேற்கொளீஇ – பொய்யும் சொல்லச் செய்யும்

அருள் - சிவசக்தி; கருணை பொலிவு முதிர்ந்தமாதுளைமரம்; நல்வினை ஏவல்

கெடுத்து - கெடுத்தல் - அழித்தல்; பழுதாக்குதல்; ஒழுக்கங்கெடுத்தல்; அவமாக்குதல்; செயலைத்தடைசெய்தல்; இழத்தல்; நீக்குதல்; நஞ்சுமுதலியவற்றைமுறியச்செய்தல்; முறியடித்தல்; காணாமற்போகுதல்.

அல்லல் - துன்பம்

உழத்தல் - செய்தல்; பயிலுதல்; பழகுதல்; முயலுதல்; வெல்லுதல்; வருந்துதல்; பட்டனுபவித்தல்; துவைத்தல்.
உழப்பு - முயற்சி, ஊக்கம்; வருத்தம்; பழக்கம்; வலிமை.
உழப்புதல் - மழுப்புதல்; குழப்பிப்பேசுதல்; போலிவாதஞ்செய்தல்; காலங்கடத்துதல்.
உழப்பிக்கும் - துன்பப்படுத்தல்

சூது - சூதாட்டம்; சூதாடுகருவி; உபாயம்; வெற்றி; இரகசியம்; தாமரை; காண்க:சூரியகாந்தி; சூழ்ச்சி.

முழுப்பொருள்
சூதின் கேடுகளை இக்குறளில் பட்டியல் இடுகிறார் திருவள்ளுவர்
1. சூது முதலில் அழிப்பது ஒருவரிடம் உள்ள பொருளை. செல்வத்தை அழித்துவிடும். செல்வம் எனில் பொன், அறம், அறிவு, கொள்கை, நன்மதிப்பு, செய்கை என அனைத்தையும் அழித்து விடும்

2. ஒருவரை பொய் சொல்ல வைக்கும் சூது. முதலில் சூது ஆடப்போகிறேன் என்று உண்மையை சொல்ல வைக்காது. ஏனெனில் சூது செல்கிறார் என்றால் எல்லோரும் வந்து தடுப்பர். சூது ஆடி பொருள் இழந்து பிறகு சூதில் இழந்தேன் என்று உண்மையை சொன்னால் அதற்கு இவ்வுலகம் ஏசும். ஆதலால் சூதாடி இழந்ததையும் மறைப்பர். சூதாடி இழந்தப்பின்பும் பாடம் கற்காமல் மீண்டும் சூதாடுவதற்காக பிறரிடம் பொய் கூறியாவது கடன்வாங்குவர், பிறகு அதற்காகத் திருடவும் செய்வர். 

3. சூதினை ஆடுவதால் அருளை இழப்பர். சூது பொருளை கெடுப்பது மட்டுமல்லாமல் மானத்தையும், ஒழுக்கத்தையும் கெடுப்பதால், ஆன்றோர்களும் சான்றோர்களும் இறைவனும் நல்கும் அருள் கிடைக்காமல் ஒழியும்.

4. சூது ஒருவரை துன்பத்தில் ஆழ்த்திவிடும். ஆழ்த்துவது மட்டுமல்லாமல் அதிலேயே உழலவிடும். ஏனெனில் இழந்த செல்வத்தை சூதிலேயே மீட்டு எடுக்கவேண்டும் என்ற தவறான எண்ணத்தை சூது ஒருவரிடம் உண்டுப்பண்ணும். அடிப்படையில் அது சூதின் தன்மை ஆகும். 

பொருளற்றார்க்கு இவ்வுலகில்லை, அருளற்றார்க்கு அவ்வுலகில்லை என்ற சொல்வழக்கு உண்டு என்பதை நினைவில் கொள்க. இது சூது ஆடுவோருக்கு மிகவும் பொருந்தும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
சூது - சூது; பொருள் கெடுத்து - தன்னைப் பயின்றவன் பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ - பொய்யை மேற்கொள்ளப் பண்ணி, அருள் கெடுத்து - மனத்து எழும் அருளைக் கெடுத்து, அல்லல் உழப்பிக்கும் - இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம் உறுவிக்கும். (இத்தொழில்கள் மூன்றற்கும் சூது வினைமுதலாகவும், தோல்வி, வெற்றி, செற்றம் என்பன முறையே கருவிகளாகவும் கொள்க. முன்னதனான் இம்மையினும் ஏனையவற்றான் மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ' என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.).

மணக்குடவர் உரை
சூது, முற்படப் பொருளைக் கெடுத்து அதன் பின்னர்ப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணி அருளுடைமையைக் கெடுத்து அல்லற்படுத்துவிக்கும்

மு.வரதராசனார் உரை
சூது உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும்.

சாலமன் பாப்பையா உரை
சூதாட்டம் பொருளை அழிக்கும். பொய்யைச் சொல்லச் செய்யும்; மன இரக்கத்தைக் கெடுக்கும்; துன்பத்தையும் தரும்.

No comments:

Post a Comment