அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்

 

குறள் 807
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்
[பொருட்பால், நட்பியல், பழைமை]

பொருள்
அழி - அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல் கலைத்தல் குலைத்தல் உள்ளதைமாற்றுதல்; மறப்பித்தல்; தடவுதல் நீக்குதல் நிந்தித்தல் விடைகாணுதல்.

வந்த - வருதல் 

செய்யினும் - செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்.

அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

அறுதல் - கயிறுமுதலியனஇறுதல்; இல்லாமற்போதல்; தீர்தல் பாழாதல் செரித்தல் தங்குதல் நட்புச்செய்தல்; கைம்பெண்

அறார் - மாறாத

அன்பின் - அன்பு - தொடர்புடையோர்மாட்டுஉண்டாகும்பற்று; நேயம் அருள் பக்தி

வழி - நெறி; காரணம்; கழுவாய்; வழிபாடு; ஒழுக்கம்; முறைமை; பின்சந்ததி; மரபு; மகன்; சுற்றம்; உடன்பிறந்தான்; பரம்பரை; நூல்வந்தநெறி; சுவடு; பின்னானது; வழக்கு; பழைமை; மலைப்பக்கம்; இடம்; திரட்சி; வரம்; பின்பு; வினையெச்சவிகுதி; ஏழனுருபு.

வந்த - வருதல் 

கேண்மை - நட்பு; உறவு; கண்ணோட்டம்; வழக்கு

யவர் - அவர்

முழுப்பொருள் 
முகத்தால் மட்டும் அல்லாமல் உண்மையாக மனதால் அன்பால் நெடுந்நாள் கொண்ட நட்பில் ஒரு நண்பர் தமக்கு கெடுதலையும் அழிவையும் செய்தாலும் அந்நட்பில் அன்பு மாறாது இருப்பார் என்றால் அதுவே நட்பாகும்.  உண்மையான அன்புகொண்டவர்கள் நிலை மாறாதவர்கள்.

நாலடியார் பாடலொன்று, இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது. நண்பர் என்று கொண்டவர், அவ்வுறவிலிருந்து விலகி இருப்பதை அறிந்தால், அவரை மேலும் மிகுதியாகப் போற்றி, அவர் நட்புறவில்லில்லை என்று புறத்தே தூற்றாது தமக்குள்ளாகவே அந்நட்பைப் போற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது அப்பாடல்.

தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத்
தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத்
தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை
தம்முள் அடக்கிக் கொளல். (நாலடி 229)

“நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்” (நாலடி 221)

“..............இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்” (நாலடி 227)

“நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக்
கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்” (பழமொழி 16)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்; அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய் வந்த நட்பினை உடையார். ('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு - மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
தமக்கு அழிவுவரும் கருமங்களைப் பழைய நட்டோர் செய்தாராயினும் அவரோடு உள்ள அன்புவிடார்: முற்காலத்து அன்பின் வழியாக வந்த நட்பையுடையவர். இது கேடுவருவன செய்யினும் அமைய வேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

சாலமன் பாப்பையா உரை
தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றையே செய்தாலும் நெடுங்காலமாக நட்பை உடையவர் நண்பர்மீது தாம் கொண்ட அன்பை விட்டுவிடமாட்டார்.

No comments:

Post a Comment