ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப

 

குறள் 1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா
[காமத்துப்பால், கற்பியல்,  ஊடலுவகை]

பொருள்
ஊடல் ஊடுதல், தலைவன்தலைவியருள்உண்டாகும்பிணக்கு, பொய்ச்சினம்; பகைத்தல்; வெறுத்தல்.

ஊடுக ஊடுதல் - புலத்தல்; வெறுத்தல்; பிணங்குதல்; ஊடுருவுதல்.

மன் -  ஓர்அசைநிலை; எதிர்காலங்காட்டும்இடைநிலை; ஒழியிசைக்குறிப்பு; பிறிதொன்றாகைக்குறிப்பு; மிகுதிக்குறிப்பு; ஆக்கக்குறிப்பு; கழிவுக்குறிப்பு; நிலைபேற்றுக்குறிப்பு; ஒருபெயர்விகுதி; அரசன்; வீரன்; தலைவன்; கணவன்; உத்தரட்டாதிநாள்; பெருமை; இழிவு; மந்திரம்; மணங்கு.

மன்னோ - வாழ்வேனா ?

ஒளி - சோதி; விளக்கம்; சூரியன்; சந்திரன்; விண்மீன்; மின்னல்; வெயில்; கண்மணி; பார்வை; அறிவு; மதிப்பு; தோற்றம்; அழகு; நன்மதிப்பு; கடவுள்; புகழ்.

இழை - நூல்; நூலிழை அணிகலன் கையிற்கட்டுங்காப்பு.

ஒளியிழை -  ஒளி பொருந்திய அணிகளை அணிந்த என் காதலி

யாம் - தன்மைப்பன்மைப்பெயர்

இரப்ப - இரப்பு - வறுமை; பிச்சை யாசிக்கை.

நீடுக - நீடுதல் - நீளுதல்; பரத்தல்; செழித்தல்; மேம்படுதல்; நிலைத்தல்; இருத்தல்; தாமதித்தல்; கெடுதல்; தாண்டுதல்; பொழுதுகடத்துதல்; தேடுதல்; பெருகுதல்.

மன்னோ - வாழ்வேனா ?

இரா - இரவு - இராத்திரி; மஞ்சள் இருள்மரம் இரத்தல் இரக்கம் பன்றிவாகை

முழுப்பொருள்
ஊடலின் பின் கூடல் என்ற சுவை அறிந்தவன் தலைவன். ஒளிபொருந்திய அணிகலங்களை அணிந்த தலைவி தன்னிடம் ஊட வேண்டும் என்று விரும்புகிறான். அப்பொழுது, தான் தலைவியை சமாதானப்படுத்தி பின்பு அவளுடன் முயங்கி (ஊடலிற்குப் பின்னான) கூடலின் (கூடுதல்) சுவையை அடையமுடியும். அப்படிக் கூடுகையில் இந்த இரவு பொழுது நீளவேண்டும் என்று யாசிப்பானாம்/வேண்டுவானாம் தலைவன். ஏனெனில், அப்பொழுதுதான் தலைவியுடன் கூடல் நீளுமாம். கூடல் நீண்டால் சுவையும் நீளுமல்லவா?

வள்ளுவர் மிகவும் அழகாக “யாமிரப்ப” என்ற சொல்லை இடைச் சொல்லாகப் பொருத்தி, அதைப் பின்வரும் வரிக்கும், முன்வரிக்கும் ஒருங்கே பொருந்துவதாக அமைத்துள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது தம் காதலி, தாம் வேண்டி அமைதிப்படுத்திக் கூடுவதற்கு ஏற்ப ஊடவேண்டும் என்றும், தாம் வேண்டிக்கொள்வதற்கு இணங்க, இரவுப்பொழுது நீடிக்கவேண்டும் என்று இருவிதமாகவும் அச்சொல் பொருந்துவது அழகு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்).

மணக்குடவர் உரை
விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.

மு.வரதராசனார் உரை
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

சாலமன் பாப்பையா உரை
ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

No comments:

Post a Comment