இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்

 

குறள் 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
இளி-த்தல் - iḷi-   11 v. cf. இளி¹-. [M. iḷi.]tr. 1. To disgrace, condemn; அவமதித்தல் (W.) 2. To laugh, scorn, ridicule; பரிகசித்தல்.(W.)--intr. To grin; to show the teeth, as incringing or in craving servilely; பல்லைக் காட்டுதல் 

தக்க - takka   தகுந்த, adj. part. see under தகு.

இளித்தக்க -  இழிவைத் தரக்கூடிய

இன்னா - துன்பம்; தீங்குதருபவை; கீழ்மையான; இகழ்ச்சி வெறுப்பு

செய்தல் - இயற்றுதல்; உண்டாக்கல்; சம்பாதித்தல்; ஒத்தல்

செயினும் - செய்தாலும் 

களித்தல் - மகிழ்தல்; கள்ளுண்டுவெறிகொள்ளுதல்; மதங்கொள்ளுதல்; செருக்கடைதல்; நுகர்தல்

களித்தார்க்குக் - கள்ளுண்டு தற்காலிகமாகவாது கவலை மறந்து மகிழ்ந்திருந்தார்க்கு

கள் - மது; தேன்; வண்டு; களவு; பன்மைவிகுதி; அசைநிலை.

அற்று - அத்தன்மையது; அதுபோன்றது; ஓர்உவமஉருபு; ஒருசாரியை

அற்றேல் - அப்படியானால்

அற்றே - அப்படியானால்

கள்வ - கள்வம் - திருட்டுச்செயல்; கவர்ச்சியுள்ளது.

நின் - உனது

மார்பு - நெஞ்சு; முலை; வடிம்பு; தடாகம்; அகலம்; கருப்பூரவகை; நான்குமுழஅளவுள்ளநீட்டலளவை.

முழுப்பொருள்
உண்பவர்க்கு மகிழ்ச்சியை தருவது கள். ஆனால் அது தற்காலிகமான மகிழ்ச்சியே. கள் உண்டதற்காக இவ்வூர் மக்கள் அவமதிப்பர். ஆக மொத்தம் கள்ளினால் பெற்ற தற்காலிக மகிழ்ச்சியைவிட பெற்ற இகழ்ச்சியே அதிகம். ஆயினும் கள்ளுண்பவர் இகழ்ச்சிக்குப் பின்னரும் கள்ளை நாடியே செல்கிறார்.

முன்னர் குறிப்பிட்டதுப்போல் கள்ளை பற்றி கூறிய தலைவி இப்பொழுது தனது தலைவனின் மார்பை கள்ளுடன் ஒப்பிடுகிறாள். அதாவது அவள் விரும்பிய தலைவனின் மார்பில் சாய்ந்து இன்பத்தை பெற்றாள். ஆனால் பிரிந்து சென்ற உடன் தலைவன் இல்லாமல் துன்பத்தில் வாடி இவ்வூராரின் ஏசுதலைப் பெற்றாளாம். 

ஆயினும் ம்கிழ்ச்சியை பெற்ற கள்ளுண்டோர் பின்பு இகழ்ச்சியைப் பெற்றாலும் கள்ளை நாடுவதைபோல், தான் விரும்பிய தலைவனுடன் கூடல் இன்பத்தை பெற்ற தலைவி, பிரிவின் துன்பத்தில் வாடியப்பிறகும் கூட, தலைவனின் மார்பையே நாடுகிறாள் அவனுடன் முயங்க. 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”மகிழ்ந்ததன் தலையும் நறவுண் டாங்கு” (குறுந்:165:1)
“நோயும் இன்பமும் ஆகின்றது மாதோ
....................................................
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே” (நற்.294:2-9)

பரிமேலழகர் உரை
(தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு. (அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.).

மணக்குடவர் உரை
பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

சாலமன் பாப்பையா உரை
இந்த வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.

No comments:

Post a Comment