உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்

 

குறள் 1287
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து
[காமத்துப்பால், கற்பியல், புணர்ச்சிவிதும்பல்]

பொருள்
உய்த்தல் - செலுத்துதல்; கொண்டுபோதல் சேர்த்தல் நடத்துதல் அமிழ்த்தல் நுகர்தல் கொடுத்தல் அனுப்புதல் குறிப்பித்தல் அறிவித்தல் ஆணைசெலுத்துதல்; ஆயுதத்தைச்செலுத்துதல்; உய்யச்செய்தல்; நீக்குதல்

அறிந்து - அறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் 
உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

புனல் - ஆறு; நீர்; குளிர்ச்சி; பூராடநாள்; வாலுளுவை; வாய்குறுகியகுப்பிகளில்நீர்மப்பொருளைஊற்றஉதவுங்கருவி.

பாய்தல் - தாவுதல்; நீர்முதலியனவேகமாய்ச்செல்லுதல்; மேல்நின்றுகுதித்தல்; நீருள்மூழ்குதல்; எதிர்செல்லுதல்; பரவுதல்; வரைந்துபடிதல்; விரைந்தோடுதல்; தாக்குதல்; விரைவுபடுதல்; அகங்கரித்தல்; மடிப்புவிரிதல்; கூத்தாடுதல்; ஓடிப்போதல்; தாக்கிப்பேசுதல்; குத்துதல்; வெட்டுதல்; முட்டுதல்.

பாய்பவரேபோல் -  பாய்பவரைப்போல; தாவுபவர் போல

பொய்த்தல் - பொய்யாதல்; தவறுதல்; பின்வாங்குதல்; கெடுதல்; பொய்யாய்ப்பேசுதல்; வஞ்சித்தல்

அறிந்துஅறிதல் - உணர்தல்; நினைத்தல் மதித்தல் பயிலுதல் அனுபவித்தல் 
உறுதிசெய்தல்; புதிதாய்க்கண்டுபிடித்தல்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

புலந்து - புலத்தல் - மனம்வேறுபடுதல்; துன்புறுதல்; வெறுத்தல்; அறிவுறுத்துதல்.


முழுப்பொருள்
ஓடும் ஆற்றில் பாய்ந்தால் அது நம்மை அமிழ்த்தி கொண்டு செல்லும். அதனை அறிந்திருந்தும் ஆற்றில் பாய்பவர்போல் சிலர் உள்ளனர். யார் அது? 

தலைவனின் பிரிவால் வாடும் தலைவி தலைவன் வந்த உடன் பிரிவாற்றாமையை காரணம் காட்டி ஊடல் செய்யவேண்டும் என்று நினைக்கிறாள். ஆனால் அப்படியே ஊடினாலும் இறுதியில் ஊடலில் இருந்து பின்வாங்க நேரிடும் என்பதை அறிவாளாம் தலைவி. பொய்யாக ஊடி பின்பு பின்வாங்கி தலைவனுடன் கூடுவாள் தலைவி. 

இதைத் தான் திருவள்ளுவர் இங்கு சுட்டிக்காட்டுகிறார். ஆறு அமிழ்த்துக்கொண்டுச் செல்லும் என அறிந்தும் ஆற்றில் பாய்பவர்ப் போல, பிரிவின் பின் வந்து சேர்ந்த தலைவனுடன் ஊடினாலும் இறுதியில் கூடல் தான் நிகழும் என அறிந்தும் எதற்கு தலைவி பொய்யாக ஊடவேண்டும்?

மேலும்: அஷோக் உரை


பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.).

மணக்குடவர் உரை
தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

மு.வரதராசனார் உரை
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.

No comments:

Post a Comment