பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்

 

குறள் 1248
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
[காமத்துப்பால், கற்பியல், நெஞ்சொடுகிளத்தல்]

பொருள்
பரிந்து பரி-தல் - pari-   4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல் பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ 12, ஒழிபு 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல் பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல் நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல் பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல் (W.) 7. To besundered; அறுதல் பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல் வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல் பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல் மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல் பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்  

அவர் - அவன், அவள்என்பதன்பன்மைச்சொல்; ஒருவரைக்குறிக்கும்பன்மைச்சொல்.

நல்குதல் - கொடுத்தல்; விரும்புதல்; தலையளிசெய்தல்; படைத்தல்; வளர்த்தல்; தாமதித்தல்; பயன்படுதல்; உவத்தல்; அருள்செய்தல்..

நல்கார் - விரும்பாதவர் 

என்று - எந்தநாள், எப்போது, என்றைக்கு; என்றுசொல்லி; ஓர்இடைச்சொல்; சூரியன்.

ஏங்கி - ஏங்குதல் - ஒலித்தல்; அழுதல்; இரங்குதல்; திகைத்தல்; மனம்வாடுதல்; அஞ்சுதல்; கவலைப்படுதல்:இளைத்தல்.

பிரிதல் - விட்டுவிலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறுபடுதல்; முறுக்கவிழ்தல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.

பிரிந்தவர் - விட்டு விலகிச்சென்றவர்

பின்  - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

செல்வாய் - செல்லுதல் - நிகழ்தல்; வீழ்தல்; ஆதல்; பரவுதல்; பயனுறுதல்; நிலைத்திருத்தல்; செலாவணியாதல்; வேண்டியதாதல்; பொருந்துதல்; விரும்பிஏற்றுக்கொள்ளப்படுதல்; அடைதற்குரியதாதல்; கழிதல்; தணிதல்; கெடுதல்; இறத்தல்; கிட்டுதல்; அடைதல்; போதல்.

பேதை - அறிவிலி; பெண்; பாலைநிலப்பெண்; ஐந்துவயதுமுதல்ஏழுவயதுவரையுள்ளபருவத்துப்பெண்; வறிஞன்; அலி; கள்.

என் - என்ன; வினாவினைக்குறிப்பு; ஐயக்கிளவி; இகழ்ச்சிக்குறிப்பு; 'எது'அல்லது'எதை'எனப்பொருள்படும்இடைச்சொல்; தன்மைஒருமைச்சொல்; யான்என்பதுவேற்றுமைப்பொருளில்அடையும்திரிபு; ஓர்அசைச்சொல்.

நெஞ்சு - மனம்; இதயம்; மார்பு; நடு; திண்ணக்கம்; தொண்டை; துணிவு

முழுப்பொருள்
தலைவன் தலைவியை பிரிந்து சென்று இருக்கிறான். பிரிவின் துன்பத்தால் தலைவி வாடுகிறாள். அப்பொழுது தலைவி நெஞ்சத்திடம் கூறுகிறாள் “ஏ நெஞ்சே, நாம் விரும்பிய நம் காதலர் நம்மை ஒருகாலத்தில் விரும்பியவர். ஆனால் நம்மைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். உண்மையில் நம்மீது விருப்பம் இருந்தால் இந்நேரம் வந்திருப்பார் அவர். ஆனால் கொடியவர் அவர் நம்மை விரும்பவில்லையே, நம்மிடம் வந்து அன்புக்காட்டவில்லையே என்று வருந்திக்கொண்டு இருக்கும் பொழுது பிரிந்து சென்ற அவர் மீது ஏக்கம் கொண்டு செல்கிறாயே? நீ என்ன பேதையா நெஞ்சே? 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”ஆந்தை குறுங்கலி கொள்ளநம் மாடவர்
காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின்
ஏந்தல் இளமுலை ஈரெயிற்றாய் என்னெஞ்சு
நீந்தும் நெடுவிடைச் சென்று” (கைந்நிலை 21)

“ஒருசிறை இருந்து போன உள்ளத்தோ டூடு வாரும்” (கம்ப.ஊர்தேடு.180)

பரிமேலழகர் உரை
(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பிரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.).

மணக்குடவர் உரை
என்னெஞ்சே! நீ வருத்தமுற்று அவர் அருளுகின்றிலரென்று இரங்கி நம்மைவிட்டுப்போனவர் பின்னே போகாநின்றாய், பேதையா யிருந்தாய். இது தலைமகள் தலைமகனிருந்த தேயத்தை நினைத்துக்கவன்ற நெஞ்சிற்குச் சொல்லியது.

மு.வரதராசனார் உரை
என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

சாலமன் பாப்பையா உரை
என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!.

No comments:

Post a Comment