மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்


குறள் 1180
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து
[காமத்துப்பால், கற்பியல், கண்விதுப்பழிதல்]

பொருள்
மறை - மறைக்கை; இரகசியம்; மந்திராலோசனை; வேதம்; உபநிடதம்; ஆகமம்; மந்திரம்; உபதேசப்பொருள்; சிவப்புப்புள்ளிகளையுடையமாடுமுதலியன; களவுப்புணர்ச்சி; பெண்குறி; உருக்கரந்தவேடம்; திருகுவகை; விளக்கின்திரியைஏற்றவும்இறக்கவும்உதவும்திருகுள்ளகாய்; புகலிடம்; சிறைக்கூடம்; மறைவிடம்; வஞ்சனை; இரண்டாம்உழவு; கேடகம்; எதிர்மறை; விலக்குகை; புள்ளி; சங்கின்முறுக்கு.

பெறல் - பெறுதல் - அடைதல்; பிள்ளைபெறுதல்; பிறப்பித்தல்; அறிதல்; விலைத்தகுதியுடையதாதல்.

ஊர்  - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.
மக்கள்)

ஊரார்க்கு - ஊரார் -  ஊரார், அன்னியர், (தன்னை வீடு, அலுவலுகம் போன்ற சுற்றத்தில் உள்ள 

அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

அன்றால் - அல்ல

எம் - 'யாம்'என்பதுபொருள்வேற்றுமைப்படவரும்பொழுதுதிரியும்நிலை; எம்முடைய; உளப்பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி.

போல் - ஓர்உவமவுருபு; பொய்; ஓர்அசைச்சொல்; உள்ளீடில்லாதது; பதர்; மூங்கில்; வெற்றி; படை; வாள்.

எம்போல் - என் போல்

அறை - அடி; மோதுகை; வெட்டுகை; ஓசை சொல் விடை அலை உள்வீடு வீடு பெட்டியின்உட்பகுதி; வகுத்தஇடம்; பிள்ளைபெறும்அறை; சதுரங்கம்முதலியவற்றின்கட்டம்; மலைக்குகை சுரங்கம் பாத்தி வஞ்சனை பாறை அம்மி சல்லி துண்டம் பாசறை அறுகை

பறை - தோற்கருவி; தப்பு; பறையடிக்குஞ்சாதி; வட்டம்; சொல்; விரும்பியபொருள்; ஒருமுகத்தலளவை; மரக்கால்; நூல்வகை; வரிக்கூத்துவகை; குகை; பறத்தல்; பறவைஇறகு; பறவை.

கண்ணார் -  (அழகிய) கண்களை உடைய

அகத்து - அகம்  - உள்ளம், இருப்பிடம்; பூமி மனை வீடு உள் மனம் அகப்பொருள் 'நான்'என்னும்அகங்காரம்; பாவம் அகம்பாவம் மார்பு ஏழாம்வேற்றுமையுருபு.

முழுப்பொருள்
”என் போன்றவருக்கு மனதில் உள்ளவற்றை பறை அடித்து சொல்வது போல் என் கண்களே அழுது சொல்லிவிடும். அப்படி இருக்கையில் என் மனதில் இருக்கும் இரகசியத்தை இவ்வூரார் அறிந்துக்கொள்வது ஒன்றும் அரிதான / கடுமையான ஒன்று அல்ல. மிக எளிதாகவே என் கண்கள் மூலம் இவ்வூரார் கண்டுக்கொள்வர்”  என்று தலைவி கூறுகிறாள் . 

ஆதலால் என் தலைவன் பிரிந்து சென்ற என் அகத்துன்பத்தை நான் மறைக்க நினைத்தாலும் பறை அடித்துச் சொல்வதுப்போல் என் கண்கள் அழுதோ வாடியோ சொல்லிவிடும்.

மேலும் அகத்துன்பத்தை மற்றவர்கள் உணர்வது கடினமான ஒன்று அல்ல. எளிதாகவே மற்றவர்கள் உணர்ந்துக்கொள்வர்.


மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
('காதலரை இவ்வூர் இயற்பழியாமல் அவர் கொடுமையை மறைக்க வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது) எம் போல் அறைபறை கண்ணார் அகத்து மறை பெறல் - எம்மைப் போலும் அறைபறையாகிய கண்ணிணையுடையார் தம் நெஞ்சின்கண் அடக்கிய மறையையறிதல்; ஊரார்க்கு அரிதன்று - இவ்வூரின்கண் உள்ளார்க்கு எளிது. '('மறை' என்றது ஈண்டு மறைக்கப்படுவதனை. அகத்து நிகழ்வதனைப் புறத்துள்ளார்க்குஅறிவித்தலாகிய தொழிலாம் ஒற்றுமை உண்மையின் 'அறைபறையாகிய கண்' என்றாள். இங்ஙனம் செய்யுள் விகாரமாக்காது, 'அறைபறைக் கண்ணார்'என்று பாடம் ஓதுவாரும் உளர். 'யான் மறைக்கவும் இவை வெளிப்படுத்தா நின்றன' என்பதாம்.)

மணக்குடவர் உரை
எம்மைப்போல அறைபறையாகிய கண்களையுடையார் மாட்டு உளதாகிய மறையை யறிதல் ஊரார்க்கு எளிது.

மு.வரதராசனார் உரை
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

சாலமன் பாப்பையா உரை
அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

No comments:

Post a Comment