அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்


குறள் 1160
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
அரிது - அரியது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

ஆற்றிஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

அல்லல் - துன்பம்

நோய் - துன்பம்; வருத்தம்; பிணி; குற்றம்; அச்சம்; நோவு.

நீக்கி - நீக்குதல் -ஒழித்தல்; விடுவித்தல்; கழித்தல்; ஒதுக்குதல்; அழித்தல்; அகற்றுதல்; பிரித்தல்; திறத்தல்; மாற்றுதல்; கைவிடுதல்.

பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

ஆற்றி - ஆற்றுதல் - வலியடைதல்; கூடியதாதல்; போதியதாதல்; உய்தல் உவமையாதல்; செய்தல் தேடுதல் உதவுதல் நடத்துதல் கூட்டுதல் சுமத்தல் பசிமுதலியனதணித்தல்; துன்பம்முதலியனதணித்தல்; சூடுதணித்தல்; ஈரமுலர்த்துதல்; நூல்முறுக்காற்றுதல்; நீக்குதல்

பின் - பின்னுகை; பின்பக்கம்; இடம்; கடை; பிற்காலம்; தம்பி; பிறகு; ஏழனுருபு.

இருந்து - இருத்தல் - உளதாதல்; நிலைபெறுதல் உட்காருதல் உள்ளிறங்குதல்; உயிர்வாழ்தல் அணியமாயிருத்தல்; உத்தேசித்தல் ஒருதுணைவினை; முல்லைஉரிப்பொருள்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

வாழ்வார் -  வாழ்கிறார்

பலர் - அநேகர்; சபை.
 
முழுப்பொருள்
இவ்வுலகில் மனித வாழ்வில் காதல் என்பது ஒரு அத்தியாயமே. அறம் பொருள் இன்பம்/காமம் ஆகியவற்றை சமநிலையில் பேணுவது அவசியம். ஆதலால் காதலிலேயே ஒருவர் தங்கிவிட முடியாது. குறிப்பாக தலைவன் ஆற்ற பல தர்மங்கள்/கடமைகள் இருக்கின்றன. தனது கடமையை ஆற்றினால்தான் பொருள் ஈட்ட முடியும். பொருள் இல்லையேல் இன்பத்தை இழக்க நேரிடும். ஆனால் பொருள் ஈட்ட வெளியூர்களுக்கு செல்ல நேரிடும். அத்தகைய காலங்களில் தலைவன் தலைவியை பிரிந்து செல்வதை தவிர்க்க முடியாது. 

தலைவனின் பிரிவால் தலைவி துன்பத்தில் உழன்று இருக்கிறாள் போலும். ஆதலால் தோழி கூறுவதாக இப்படி இருக்கக்கூடும் ”தலைவன் தலைவியை விட்டு வேலைநிமித்தமாக பிரியப்போகிறேன் என்று தலைவி கேட்க நேரிடுவது கொடுமையானது தான். ஆனால் அக்கடுமையான பிரிவை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டோர் இருக்கின்றனர். பிரிவுடன் நின்றுவிடுமா அத்துன்பம்? தென்றல், மாலைப்பொழுது, நிலா, இரவு, இசை என்று பலவற்றின் மூலமாக நினைவுகள் நம் மனதை குத்தி குத்தி பசலைநோயினை தரும். ஆனால் துன்பமான காமநோயினை கடந்தோரும் இருக்கின்றனர். ஆதலால் கொடுமையான பிரிவை ஏற்றுக்கொண்டு துன்பமான காதல்நோயினை கடந்து உயிர்வாழும் பலர் இவ்வுலகில் இருக்கின்றனர் என்பதில் நினைவில்கொள் என் தோழியே (தலைவியே). ஆனால் நீயோ (தலைவி) பிரிவை ஆற்றமுடியாத அளவிற்கு உன் தலைவனை நேசிக்கிறாய் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் நீ துன்பத்தில் உழன்றுக்கொண்டு இருக்கிறாய் என்பதையும் மனதில்கொள். மற்றவர்ப்போல் பிரிவு என்னும் இத்துன்பத்தில் இருந்து வெளியே வா. அதுவே உன்னை உயிர்வாழச்செயும். தலைவன் திரும்பி வரும் பொழுது நீ உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா?

மேலும் அஷோக் உரை 

ஒப்புமை
”ஓராங்குத் தணப்ப
உள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே” (குறுந் 38:5-6)

பரிமேலழகர் உரை
(தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றில்லை, என்ற தோழிக்குச் சொல்லியது.) (நீ சொல்லுகின்றது ஒக்கும்,) அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி - பிரிவுணர்த்திய வழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகழும் அல்லல் நோயினையும் நீக்கி; பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர் - பிரிந்தால் அப்பிரிவு தன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர் வாழும்மகளிர் உலகத்துப் பலர். (பண்டையிற் சிறப்பத் தலையளி பெற்று இன்புறுகின்ற எல்லைக்கண்ணே அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரியதொன்றாகலின், 'அரியதனைச் செய்து' என்றும், 'செல்லுந் தேயத்து அவர்க்கு யாது நிகழும'? என்றும் 'வருந்துணையும் யாம்ஆற்றியிருக்குமாறு என்'? என்றும், 'அவ்வளவுதான் எஞ்ஞான்றும் வந்தெய்தும்' என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காதாகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காம வேதனையும், புறத்து 'யாழிசை,மதி, தென்றல் என்றிவை முதலாக வந்து இதனை வளர்ப்பனவும் ஆற்றலரிய வாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம் காதலரை இன்றியமையா 'மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்துஉயிர் வாழ்வார் ஒருவரும் இல்லை' என்பது குறிப்பால் தோன்றப் 'பின் இருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'அரிது' என்பது வினைக்குறிப்புப்பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் பிரிவு என்றாள். செய்து, நீக்கி, ஆற்றி என்பன ஓசை வகையான் அவ்வவற்றது அருமையுணரநின்றன. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது; 'யானும்இறந்து படுவல்' என்பது கருத்து.)

மணக்குடவர் உரை
பொறத்தற்கரியதனைப் பொறுத்து, அல்லல் செய்யும் நோயை நீக்கிப் பிரிவையும் பொறுத்துக் காதலரை நீங்கியபின் தமியராயிருந்து வாழ்வார் பலர். அல்லல்நோய்- காமவேதனை. பிரிவாற்றுதல்- புணர்ச்சியின்மையைப் பொறுத்தல்.

மு.வரதராசனார் உரை
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு, (பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.

சாலமன் பாப்பையா உரை
சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால் அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment