இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்

 

குறள் 1158
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு
[காமத்துப்பால், கற்பியல், பிரிவாற்றாமை]

பொருள்
இன்னாது -  தீது; துன்பு

இனன் - சூரியன்; உறவினன்; ஒத்தவன்; ஆசிரியர்

இல் - இல்லை, இடம்; வீடு இல்லறம் மனைவி மருதமுல்லைநிலங்களின்தலைவியர்; குடி இராசி தேற்றாங்கொட்டை இன்மை சாவு எதிர்மறைஇடைநிலை; ஐந்தாம்வேற்றுமைஉருபு; ஏழாம்வேற்றுமைஉருபு.

ஊர் - கிராமம், மக்கள்சேர்ந்துவாழும்இடம்; இடம்; ஊரிலுள்ளோர்; சந்திரசூரியரைச்சூழ்ந்தபரிவேடம்.

வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; மகிழ்தல்; சுமங்கலியாகஇருத்தல்; விதிப்படிஒழுகுதல்.

அதனினும் - அதனை விட

இன்னாது -  தீது; துன்பு

இனியார்ப் - உள்ளத்துக்கு இனியவரான காதலர்

பிரிவு - பிரிதல்; வகுத்தல்; பாகம்; ஒற்றுமையின்மை; பகுதி; அவிழ்கை; வேறுபாடு; இடையீடு; மூலமதத்தின்வேறுபட்டஉட்பேதம்; இறப்பு.

முழுப்பொருள்
இனன் என்ற சொல்லுக்கு இரு பொருள்களை எடுத்துக்கொள்ளலாம்
1. இனன் - உறவினன்
தலைவி கூறுகிறாள், எனது உறவினன் / தலைவன் இல்லாத ஊரிலே வாழ்வது மிக கொடுமை (ஏனெனில் இவ்வூரில் உள்ள நாங்கள் பழகிய இடங்கள் அவரது நினைவுகளை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும். இவ்வூராரும் அவரைப்பற்றிக் கேட்பர்). ஆனால் அதைவிட கொடுமையானது என் தலைவனை பிரிந்தது இருப்பது ஆகும். 

2. இனன் - சூரியன்
தலைவி கூறுகிறாள், சூரியன் இல்லாத ஊர் இருளில் மூழ்கிப்போகும். அங்கே உயிர்வாழ்தல் கொடுமையாகி விடும். ஆதலால் சூரியன் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பத்தை தரும். ஆனால் அதைவிட கொடுமையானது என் தலைவனை பிரிந்தது இருப்பது ஆகும். 

சூரியன் இல்லாத ஊர் என்பதே பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் தலைவன் இல்லாத ஊர்களில் பல வாழ்கின்றனர். அதில் விழாக்கள், மக்கள் நடமாட்டம் இருக்கும். ஆதலால் துன்பம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் சூரியன் இல்லாத இடம் மிக துன்பமானது என்பதை யாராலும் உணர முடியும். குறிப்பாக, குளிர்காலங்களில் சூரியன் குறைவாக இருக்கும் ஊர்களில் மக்களிடம் சற்று மன அழுத்தம் இருக்கும். அவர்கள் கோடைகாலத்தை கொண்டாடுவர். ஆதலால், சூரியன் இல்லாத ஊர் துன்பமானது என்றே திருவள்ளுவர் கூறியிருக்கவேண்டும். ஆனால் அதைவிட கொடுமையானது தலைவனின் பிரிவு என்று கூறுகிறாள்.

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)

மணக்குடவர் உரை
தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது. இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.

மு.வரதராசனார் உரை
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

No comments:

Post a Comment