கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்

 

குறள் 1126
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்
[காமத்துப்பால், களவியல், காதற்சிறப்புரைத்தல்]

பொருள்
கண் - விழி; கண்ணோட்டம்; பீலிக்கண்; கணு; மரக்கணு; தொளை; மூங்கில்முரசடிக்குமிடம்; மூட்டுவாய்; பெருமை; இடம்; ஏழனுருபு; அறிவு; பற்றுக்கோடு; உடம்பு; அசை; உடலூக்கம்.

உள் - உள்ளிடம்; உள்ளம்; மனம்; இடம்; மறை; மனவெழுச்சி; ஒருகுறிப்புவினைப்பகுதி; தொழிற்பெயர்விகுதி; ஏழாமவேற்றுமைஉருபு; உள்ளான்என்னும்பறவை.

உள்ளுதல் - நினைதல்; ஆராய்தல்; நன்குமதித்தல்; மீண்டும்நினைத்தல்; இடைவிடாதுநினைத்தல்.

கண்ணுள்ளின் - கண்ணுள் - கூத்துவகை; அரும்புத்தொழில்; கண்ணிற்குள்.

போகார்  - போகமாட்டார்; அதினின்றும் அகலாதவர்

இமைப்பின் - இமைத்தல் - இமைகொட்டுதல்; ஒளிவிடுதல் சுருங்குதல் தூங்குதல்

பருவரு-த்தல் - paruvaru-   5 v. intr. பருவா-. To be distressed in mind; மனம்வருந்துதல்.இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார் (குறள், 1127, மணக்.).

பருவரார் - அதனாலும் வருந்தி அலமுறாத

நுண்ணியான் - கூரியஅறிவுடையோன்; அமைச்சன்.

நுண்ணியர் - நுட்பமாக என்கண் நிறைந்தவர்

எம் - யாம்' என்பது பொருள் வேற்றுமைப்பட வரும் பொழுது திரியும் நிலை; எம்முடைய; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி.

காதல் - அன்பு; காமவிச்சை; பத்தி; வேட்கை; ஆவல்; மகன்; சிற்றிலக்கியவகையுள்ஒன்று; கொல்லுதல்; தறித்தல்; ஆந்தைக்குரல்.

காதலவர் - காதல் கொண்டவராக, மனம் விரும்புவராக; என்னுடைய காதலர்

முழுப்பொருள்
காதலி தன் காதலனின் காதல்பற்றி இப்படி கூறுகிறாள். என் காதலன் என் கண்களின் உள்ளே இருக்கிறார். அதனைவிட்டு அவர் போகமாட்டார். அவரை என் கண்களில் அவரை வைத்திருக்கும் பொழுது கண்களை இமைத்தால் ஒரு கன நொடி அவரை சிறைப்படுத்துவதுப் போல் ஆயினும் அதற்காக அவர் மனம் வருந்தமாட்டார். ஏனெனில் எனது அச்செயல் காதலால் என்பதை உணரக்கூடிய நுண்ணிய அறிவுப்படைத்தவர் அவர். அத்தகைய காதலனை தனது காதலாக பெற்றதாக நயமாகவும் மெல்லிய கர்வத்துடனும் கூறுகிறாள் காதலி.

ஆங்கிலத்தில் possessiveness தமிழில் உடைமை என்பதின் ஒரு மெல்லிய வெளிப்பாடே இது. வீட்டில் கணவன் தன்னைவிட்டு எங்கும் செல்லக்கூடாது  என்று மனைவி நினைப்பாள். என்னடா இது எப்ப பார்த்தாலும் கூடவே இருக்கவேண்டும் என்கிறாளே, எனக்கு வேறு வேலை இல்லையா என்று நினைக்கும் கணவன்மார்களே அதிகம். அவர்கள் நிலைமையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது ஏனெனில் கணவன்மார்களுக்கு மற்றவேலைகளும் இருக்கிறது தானே. இக்குறளை நினைத்துக்கொண்டு மனைவியின் அன்பை புரிந்துக்கொள்ளலாம். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(ஒருவழித்தணப்பின்கண் தலைமகனைத் தோழி இயற்பழிக்கும் என்று அஞ்சி அவள் கேட்பத் தன்னுள்ளே சொல்லியது.) (தாம் காணாமை பற்றிச் சேய்மைக்கண் போயினார் என்று கருதுவார் கருதுக,) எம் காதலர் கண்ணுள்ளின் போகார் - எம்முடைய காதலர் எம் கண்ணகத்து நின்றும் போகார்; இமைப்பின் பருவரார் - யாம் அறியாது இமைத்தேமாயின் அதனால் வருந்துவதும் செய்யார்; நுண்ணியர் - ஆகலான் காணப்படா நுண்ணியர். (இடைவிடாத நினைவின் முதிர்ச்சியான் எப்பொழுதும் முன்னே தோன்றலின் 'கண்ணுள்ளின் போகார்' என்றும், இமைத்துழியும் அது நிற்றலான் 'இமைப்பின் பருவரார்' என்றும் கூறினாள்.).

மணக்குடவர் உரை
என் கண்ணுள் நின்று நீங்கார்; இமைப்பேனாயின், இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார்: ஆதலான் எம்மாற் காதலிக்கப்பட்டார் நுண்ணியவறிவை யுடையார்.

மு.வரதராசனார் உரை
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

சாலமன் பாப்பையா உரை
என் அன்பர் என் கண்ணை விட்டுப் போகமாட்டிடார்; ஒருவேளை நான் அறியாமல் இமைத்தால் வருந்தவும் மாட்டார். பிறர் அறிய முடியாத நுட்பத் தன்மையர் அவர்.

1 comment: