பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

 

குறள் 1089
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து
[காமத்துப்பால், களவியல், தகையணங்குறுத்தல்]

பொருள்
பிணை - இணைக்கப்படுகை; உடன்பாடு; பொருத்து; கட்டு; உத்தரவாதம்; விலங்குகளின்பெண்; பெண்மான்; பூமாலை; புறந்தருகை; விருப்பம்; தெப்பம்.

ஏர் - உழுபடை, கலப்பை; உழவுமாடு; உழவுத்தொழில்; எழுச்சி; தோற்றப்பொலிவு; அழகு; நன்மை; ஒப்பு; ஓர்உவமவுருபு.

மருளுதல் - மயங்குதல்; வெருவுதல்; வியத்தல்; ஒப்பாதல்.
வெருவுதல் - அஞ்சுதல்.
மடநோக்கும் - Bashful, timid look;  மருண்டபார்வை

நோக்கும் - நோக்குதல் -  பார்த்தல்; கருதுதல்; கவனித்தல்; திருத்துதல்; பாதுகாத்தல்; அருளுதல்; ஒத்தல்; ஒப்பிட்டுப்பார்த்தல்; படித்தல்; விரும்புதல்; கண்காணித்தல்.

நாணும் - நாணுதல் - வெட்கப்படுதல்; மனங்குன்றுதல்; பயபக்திகாட்டுதல்; அஞ்சுதல்; பிணங்குதல்; அடங்குதல்; குவிதல்.

உடையாட்கு – உடைய பெண்ணவளுக்கு

அணி - வரிசை; ஒழுங்கு ஒப்பனை அழகு அணிகலன் முகம் படைவகுப்பு செய்யுளணி; இனிமை அன்பு கூட்டம் அடுக்கு அண்மை ஓர்உவமஉருபு.

எவனோ  - வேறு ஏது 

ஏதில - பிறமாது; மாற்றாள்; சக்களத்தி.

தந்து - தரும்?

முழுப்பொருள்
பெண்மான்கள் அழகுடன் கூடிய அச்சப்பார்வையைக் கொண்டு இருக்கின்றன. அதுப்போல் என் காதலியும் புறத்தே அழகுடன் கூடிய அச்சப்பார்வையையும் ஆனால் உள்ளத்தே நாணமும் கொண்டு இருக்கிறாள். இவை அவளை எவ்வளவு அழகாக காட்டுகின்றன. அப்படி இருக்கையில் அவள் அணிந்துள்ள அணிகலன்கள் / நகைகள் அவளுக்கு பிற எந்த அழகை தந்துவிடும்? அவள் அவற்றை ஏன் அணிந்துக்கொண்டு இருக்கிறாள்?

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
(அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து? (மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.).

மணக்குடவர் உரை
பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய
வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும். இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.

மு.வரதராசனார் உரை
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?.

சாலமன் பாப்பையா உரை
பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?.

No comments:

Post a Comment