பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்


குறள் 639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்
[பொருட்பால், அமைச்சியல், அமைச்சு]

பொருள் 
பழுது - பயனின்மை; குற்றம்; சிதைவு; பதன்அழிந்தது; பிணமாயிருக்குந்தன்மை; பொய்; வறுமை; தீங்கு; உடம்பு; ஒழுக்கக்கேடு; இடம்; நிறைவு.

எண்ணும்  - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

மந்திரியின் - மந்திரி - அமைச்சன்; வியாழன்; சுக்கிரன்; குபேரன்; வரும்பொருள்உரைப்போன்; படைத்தலைவன்; புதன்; பித்தம்; காண்க:திராய்.

பக்கத்துள்  - பக்கம் -  அருகு; இடம்; பாரிசம்; நாடு; வீடு; விலாப்புறம்; வால்; அரசுவா; சிறகு; அம்பிறகு; நட்பு; அன்பு; சுற்றம்; கொடிவழி, வமிசம்; சேனை; பதினைந்துதிதிகொண்டகாலம்; திதி; கூறு; நூலின்பக்கம்; கோட்பாடு; அவமானத்தின்உறுப்பினுள்மலைநெருப்புஉடைத்துஎன்றதுபோன்றஉறுதிசெய்வசனம்; துணிபொருள்உள்ளவிடம்; தன்மை; கையணி; ஒளி; நரை; உணவு.

தெவ் - பகை; பகைவன்; போர்; கொள்ளுகை.

ஓர் - ஒன்று; ஓர்அசைச்சொல், (வி)ஆராய்; தெளி.

எழுபது - eḻu-patu   n. ஏழு + பத்து Seventy.  

கோடி - நூறுநூறாயிரம், நூறுலட்சம்; சீலை; புதுச்சீலை; புதுமை; வளைவு; முடிமாலை; தொகுதி; அறுபத்துநான்கஅக்குரோணிகொண்டபடை; இருபது; வரிசை; நுனி; கடலுட்செல்லும்தரைமுனை; மூலை; வீட்டின்புறக்கோடி; விளிம்பு; படையின்பிற்a; தேவைக்குஅதிகமானதண்ணீர்; குறிப்பு:வயிரக்குணங்களுள்ஒன்று; எல்லை.

உறும் - உறுதல் - உண்டாதல்; மிகுதல்; சேர்தல்; இருத்தல்; பொருந்தல்; கூடல்; நேர்தல்; பயனுறல்; கிடைத்தல்; வருந்தல்; தங்கல்; அடைதல்; நன்மையாதல்; உறுதியாதல்; நிகழ்தல்.

முழுப்பொருள் 
எத்தகைய அமைச்சனை ஒரு அரசன்/ தலைவன் தன் அருகில் வைத்திருக்கக்கூடாது? 
பயன் அல்லாதவற்றையும் தீங்கு விளைவிப்பதையும் ஒழுக்கமல்லாதவற்றையும் நாட்டையும் (நிர்வாகத்தையும்) சிதைக்கக்கூடியதையும் தவறான வழிகளையும் குற்றங்களையும் தன்னலத்தையும் நினைக்கும் ஒரு அமைச்சனை ஒரு அரசன் அருகில் வைத்துக்கொள்ளுதல் எண்ணிக்கையில் அடங்கா பகைவர்களை அருகில் வைத்துக்கொள்வதற்கு இணையாகும். அதனால் துன்பமே விளையும். ஆதலால் அத்தகைய அமைச்சரை அருகில் வைத்துக்கொள்ள கூடாது. ”மண்குதிரையை நம்பி சேற்றில் இறங்க கூடாது” என்பதில் நினைவில் கொள்க. 

பல உரைகள் பழுது என்ற சொல்லுக்கு கெடுக்கும் அல்லது தன்னலம் என்ற பொருள்களை மட்டும் எடுத்து உரையாற்றியுள்ளன. ஆனால் பயனற்ற எண்ணங்களும் கேட்டை விளைவிக்கும் முழுவதுமாய் நுணுகி ஆராயாமல் தீட்டிய திட்டம் தீங்கு விளைவிக்க கூடும். அது பெரும் பொருட்சிதைவுகளையும் தீமையையும் நிகழ்த்தும். 

பொதுவாக பார்த்தால், எண்ணாமல் (பழுதான எண்ணங்களை) கூறும் இத்தகைய அமைச்சர்கள் ஒரு விதத்தில் அறிவற்றவர்கள் அல்லது திறன் இல்லாதவர்கள் அல்லது சோம்பேரிகள் அல்லது அலட்சியமானவர்கள் அல்லது சிந்திக்கும் திறத்திலும் எண்ணங்களிலும் கிட்டபார்வை (Myopia) உடையவர்கள் அல்லது தன் கருத்தில் தேவைக்கு அதிகமான அதீத நம்பிக்கை உடையவர்கள் அல்லது பிடிவாதமானவர்கள் அல்லது பிறர் கூறும் அறிவுரைகளை கேட்காமல் உதாசீனம் / அலட்சியம் / நிராகரிப்பு செய்பவர்கள். இத்தகையவர்களை முழுவதுமாக நம்புவது மண்குதிரையை நம்பி சேற்றில் இறங்குவதுப்போல் ஆகும். 

இத்தகைய அமைச்சர்கள் அனுபவம் இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அல்லது தனக்கு திறன் இல்லாத துறைகளில் ஆலோசனை கூறுவர். பெரும் நிதியினை கையாளாத ஒருவரிடம் பெரும் நிதி சார்ந்த செயல்களில் கருத்து கேட்ககூடாது. ஏனெனில் ஒரு சிறு தவறும் பெரிய பொருளாதார நஷ்டத்தை கொடுக்கும். கருத்துகூறியவர் வணிகம் என்றால் பெரிய செயல் என்றால் சில தவறுகள் நடக்கத்தான் செய்யும் பொருளாதார நஷ்டங்கள் தவிர்க்க முடியாது. யாரும் வேண்டும் என்று செய்யவில்லை என்று சப்பைக்கட்டு கூறுவார்கள். முடிந்ததை பற்றி பேசி பயன் என்று தன் தவறுகள் பற்றி பேச அனுமதிக்கமாட்டார் அதாவது (நன்கு எண்ணாமல் கூறியது) தனது தவறு என்றென்பதை மறைப்பர். 

இது அரசக்கு மட்டும் பொருந்தாது. ஒரு நிர்வாகத்தில் அரசருக்கு அடுத்த நிலையில் இருக்கும் உதவியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பொருந்தும். அரசரும் தலைவரும் (அமைச்சரையும் உதவியாளரையும் மட்டும் நம்பாமல்) நன்கு ஆராய்ந்து எண்ண வேண்டும்.

மேலும் : அஷோக் உரை 

பரிமேலழகர் உரை
பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓரெழுபதுகோடி தெவ்உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர். (எழுபது கோடி என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலான் காக்கப்படான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறுதலை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.).

மணக்குடவர் உரை
குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர். இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.

மு.வரதராசனார் உரை
தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை
தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார்.

No comments:

Post a Comment