குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்


குறள் 549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்
[பொருட்பால், அரசியல், செங்கோன்மை]

பொருள்
குடி - பருகுகை; மதுபானம்; மதுவுண்டமயக்கம்; புருவம்; குடியானவன்; குடியிருப்போன்; ஆட்சிக்குட்பட்டகுடிகள்; குடும்பம்; குலம்; வீடு; ஊர்; வாழிடம்.

புறங்காத்து - புறங்கா-த்தல் - puṟaṅ-kā-   v. tr. id. +To guard, protect, save; பாதுகாத்தல். வழிபடுதெய்வ நிற்புறங் காப்ப (தொல். பொ. 422).

ஓம்பிஓம்புதல் - காப்பாற்றுதல், பாதுகாத்தல், பேணுதல், வளர்த்தல்; தீங்குவாராமற்காத்தல்; போற்றுதல்; உபசரித்தல்; சீர்தூக்குதல்; பரிகரித்தல்; தவிர்த்தல்; விலக்கல்; நீக்குதல்; உண்டாக்குதல்.

குற்றம் - பிழை; பழி; துன்பம்; உடற்குறை; தீங்கு; அபராதம்; தீட்டு.

கடிதல் - ஓட்டுதல், நீக்குதல்; அழித்தல்; கண்டித்தல்; கோபித்தல்; விரைதல்; கொல்லுதல்; வெட்டுதல்; அடக்குதல்.

வடு - தழும்பு; மாம்பிஞ்சு; இளங்காய்; உடல்மச்சம்; உளியாற்செதுக்கினஉரு; புண்வாய்; குற்றம்; பழி; கேடு; கருமணல்; செம்பு; வாள்; வண்டு; பிரமசாரி; இளைஞன்; வைரவன்; புத்திசாலிப்பையன்.

அன்று - அந்நாள்; மாறுபாடு ஓர்அசைச்சொல்.

வேந்தன் - எல்லாஆற்றலும்பெற்றஅரசன்; இந்திரன்; சந்திரன்; சூரியன்; வியாழன்.

தொழில் - செயல்; அலுவல்; தந்திரம்; பெருமை; வினைச்சொல்; ஏவல்; திறமை; களவு.

முழுப்பொருள்

இன்னா செய்யாமை அதாவது பிறருக்கு துன்பம் செய்யாதே என்று கூறுவார் திருவள்ளுவர். ஆனால் தன் நாட்டுமக்களை பகைவரிடம் இருந்து காத்து, குற்றங்களை குறைக்க தண்டித்தல் அவசியம் என சில விதிவிலக்குகளை அனுமதித்துள்ளார் திருவள்ளுவர். பிறரிடமிருந்து காப்பாற்றி, தாம் மட்டும் தண்டிப்பதில் என்ன நீதி என்று அதில் குறை காணமுடியாது. ஏனெனில் ”மையிலே மையிலே இறகு போடு என்றால் போடாது, பிடுங்கித் தான் ஆகவேண்டும்” என்ற சொலவாடையை நினைவில் கொள்க. 

1) தன் நாட்டில் உள்ள குடிமக்களை புறப்பகைகளிலிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் போர் செய்ய நேரிடும் அங்கே உயிர் இழப்புகள் நேரிடும். பகைவர் வந்து பல உயிர்கள் இழப்பதை விட சில உயிர்களை சேதங்களை சகிக்கலாம். எல்லையில் பகைவர் ஊடுருவுதலை தடுத்து பல உயிர்களை காப்பாற்ற சில உயிர்களை எல்லைகளில் கடும் குளிரிலும் வெயிலிலும் காவல் காப்பது தேவையானது தான். இவற்றை செய்வதனால் அரசனுக்கு பழி அன்று. அதை செய்வதே அரசனின் தொழில். அதுவே அரசனின் அறமாகும். இதற்கு வருத்தப்பட தேவையில்லை.

இது தான் அணு ஆயிதங்களை பல நாடுகள் தயாரிப்பதன் நோக்கமாகும். அணு ஆயிதம் இருக்கிறது என்னும் அச்சமே போரினை உயிர் இழப்பினை தவிர்க்கும். (ஆனால் பல நேரங்களில் அணு ஆயுதம் ஒருவித அச்சுறுத்தல் ஆயுதமே. பிற நாடுகளை நாட்டாமை செய்வதற்கும் ஆதிக்கம் செய்வதற்கும் பயன்படுத்த படுகிறது. குறிப்பாக அமேரிக்க அதிபர் எங்கு சென்றாலும் அவருடன் அணு ஆயுதங்களை உலகில் எங்கிருந்தும் இயக்கும் கருவிகளை சுமந்துக்கொண்டிருப்போர் இருப்பர்). 

2) உள் நாட்டில் பல வகை குற்றங்கள் நடைப்பெறும். அதற்கு வாய்ப்புகள் பல. உதாரணமாக கொள்ளை, கொலை, ஏமாற்றுதல், வஞ்சம், ஊழல், லஞ்சம், விதி மீறுதல், சாலை விதிகள் மீறுதல், இயற்கையை அழித்தல், இயற்கையை சேதப்படுத்துதல், இயற்கைவளங்களை சுறையாடுதல், இயற்க்கை வளங்களை மாசுப்படுத்தல், தகவல்களை திருடுதல், கலவரம் உண்டாக்குதல், மக்களின் மனதில் அச்சம் உண்டாக்குதல், அலுவகத்தில் வேலை செய்யாது இருத்தல், வருமான வரி செலுத்தாது இருத்தல், வருமானத்தை மறைத்தல், தரம் அற்ற பொருளை செய்தல், தரம் அற்ற சாலைகளை அமைத்தல், நேரம் கடத்துதல், தவறான நீதி வழங்குதல், நடுவுநிலைமை தவறுதல், சார்புநிலைக்கொண்டு இருத்தல், பிறரை அடிமையை வைத்திருத்தல், பிறரின் கல்வியை தடுத்தல், சாலை விதி மீறுதல், குடித்துவிட்டு வண்டி ஓட்டுதல், விதிகளை மீறியதனால் ஏற்படும் சாலைவிபத்துக்கள், அலட்சியமாக இருத்தல்  (உதாரணமாக சாலையில் பாதுக்காப்பு இன்றி குழிகளை தோண்டி மூடாமல் விதல், மின்சார கம்பிகளை பாதுக்காப்பின்றி தொங்கவிடுதல்), குழந்தைகளை கடத்துதல், குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைத்தல், குழந்தைகளை கடத்தி பாலியில் தொழிலில் ஈடுபடுத்தல், மனிதர்களை குழந்தைகளை கடத்தி பாலியில் தொழில் ஈடுபடுத்துதல் உடல் உறுப்புகளை திருடுதல், போதை மருந்துகளை தயாரித்தல் விநியோகித்தல், காட்டு விலங்குகளை (தந்ததங்களுக்காவும், தோலுக்காகவும், கொம்புக்காவும், மருந்துக்காவும், உணவுக்காகவும் என எவ்வித காரணத்திற்காகவும்) கடத்தி கொலை செய்தல், என பல குற்றங்களை முடிவில்லாமல் பட்டியிடலாம். இவற்றையெல்லாம் கண்டு அறிந்து அல்லது புகார் வந்தால் விசாரித்து குற்றங்களை கடிய / கண்டிக்க வேண்டும். தேவையெனில் தண்டிக்க வேண்டும். இவற்றை செய்வதனால் அரசனுக்கு பழி அன்று. அதை செய்வதே அரசனின் தொழில். அதுவே அரசனின் அறமாகும். இதற்கு வருத்தப்பட தேவையில்லை.

ஒப்புமை

“குடிபுறம் காத்தோம்பும் செங்கோலான்”  (கலி.130:19)
“கிளர்வேந்தன் தன்னாடு
வாட்டான்நன் றென்றல் வனப்பு” (சிறுபஞ்ச.8)
“குடிபுறம் காத்து” (பெருங் 5.8:20)
“குடிபுறம் காத்து” (மணி 23:11)

கம்பராமாயணக் கிட்கிந்தா காண்டப்பாடலில் கம்பர் இவ்வாறு கூறுகிறார்.

நாயகன் அல்லன்; நம்மை நனிபயந்து எடுத்து நல்கும்
தாய் என, இனிதுபேணி, தாங்குதி தாங்குவாரை;
ஆயது தன்மையேனும், அறவரம்பு இகவாவண்ணம்,
தீயன வந்தபோது, சுடுதியால் தீமையோரை. (கம்ப.அரசியல் 34)

குடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில் எவரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு ஏற்ற முறையாகும் என்பது இப்பாடல் சொல்லுவது. ‘கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்’ (குறள் 550) ‘தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால், ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து‘ (குறள் 561), ’கடிதோச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர்’ (குறள் 562), ‘கடுமொழியும் கையிகந்ததண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்‘ (குறள் 567) என்னும் குறளிகளிலும், இக்கருத்தினையே வள்ளுவர் கூறுகிறார். அரசனைத் தாய் என்று சொல்லி, கம்பர் குழந்தையைக் காப்பதுபோல், தண்டித்தலும் தாயின் கடமையே அன்றி தவறல்ல என்று சொல்லுகிறார். 

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
(துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதிதருமம்' என்றார்.).

மணக்குடவர் உரை
குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில்.

மு.வ உரை
குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

சாலமன் பாப்பையா உரை
அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.

No comments:

Post a Comment