எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே

குறள் 489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்
[பொருட்பால், அரசியல், காலமறிதல்]

பொருள்
எய்தற்கு - எய்தல் - அடைதல், சேர்தல்; அம்பைச்செலுத்தல்; நிகழ்தல்; சம்பவித்தல்; பெறுதல்.

எய்தற்கு - அடைவதற்கு, சேர்வதற்கு, பெறுவதற்கு

அரியது - அரிது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

இயைந்தக் - இயைதல் - பொருந்துதல்; இணங்குதல் நிரம்புதல் ஒத்தல்

கால் - காலம் - பொழுது; தக்கசமயம்; பருவம்; பருவப்பயிர்; விடியற்காலம்; முடிவுகாலம்; தொழில்நிகழ்ச்சியைக்குறிக்கும்முக்காலம்; இசைக்குரியமூன்றுகாலம்; தாளப்பிரமாணம்.

அந் - அந்த 

நிலையே - நிலை -  நிற்கை; உறுதி; தன்மை; நிலைமை; தொழில்; இடம்; தங்குமிடம்; பூமி; காண்க:நிலைத்திணை; தேர்த்தட்டு; கதவுநிலை; தூண்; விளக்குத்தண்டு; நெறி; வழக்கு; ஆசிரமம்; குலம்; மரபுரிமை; இசைப்பாட்டுவகை; பொழுது; முகூர்த்தம்; ஒருநிலவளவுவகை; ஒருவன்நிற்கக்கூடியநீராழம்; பசுஒருதடவைகழிக்குஞ்சாணி; அணிகலத்தொங்கல்.

செய்தற்கு  - செய்வதற்கு; செயல் புரிவதற்கு

அரிய -  அரிது, அருமை; பசுமை; அரியதன்மை; பெருமை கடினம் எளிதிற்கிட்டாமை; சிறுமை இன்மை

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

முழுப்பொருள்
அம்பை எய்தால் இலக்கை அடைய ஒரு தக்க காலம் வேண்டும்/ இருக்கும். அதுப்போல எய்துவதற்கு / அடைவதற்கு / பெறுவதற்கு அரிய காலம் பொருந்தி வரும் பொழுது அந்நேரத்திலேயே அச்செயலை செய்து அவ்வரியபயனை அடைய வேண்டும். காலம் சாழ்ந்து அச்செயலை செய்தால் இலக்கை அடையமுடியாது. பயனும் கிட்டாது. 

இயைந்தக்கால் என்ற சொல்லை நாம் இங்கு கூர்ந்து கவனிக்க வேண்டும். நமது ஆற்றலும் உழைப்பும் திட்டமும் கூர்ந்துநோக்குதலும் கவனமும் ஒருங்கே இருக்கும் பொழுது காலமும் பொருந்தி வரும் பொழுது இலக்கை அடையலாம். வெறும் காலத்தை வைத்து எல்லாவற்றையும் அடைந்துவிட முடியாது. நாமும் நம் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். வளர்த்துக்கொண்டு இலக்கை நோக்கி உழைக்க வேண்டும். இலக்கை மறக்காமல் அதனைப்பற்றி கூர்ந்துநோக்க வேண்டும். இவை எல்லாம் இருக்கும் பொழுது காலமும் நமக்கு ஒத்துழைக்கும்.

நேரத்தைக் கடக்கவிட்டு பின்னர், “தும்பை (மாட்டைக் கட்டும் கயிறு) விட்டு வாலைப் பிடித்தால்” அரிய வாய்ப்பை நழுவ விட்டதற்கு வருந்த நேரிடும்.

”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற சொலவாடை போல் உள்ளது இக்குறளின் தோற்றம்

“எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயலென்று - வையத்து” (யா.வி.சூ.60.மேற்கோள்)

மேலும் அஷோக் உரை

பரிமேலழகர் உரை
எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக்கருதும் அரசர்,தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து கூடியக்கால், அந் நிலையே செய்தற்கு அரிய செயல் - அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.
(ஆற்றல் முதலியவற்றால் செய்து கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும், அது தானே வந்து இயைதல் அரிதாகலின், 'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின் நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும் அது பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய' என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து செய்க என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

அறியாத குறள்கள் - கவிஞர் மகுடேசுவரன் 
அண்டை அயலில் பார்த்திருப்பீர்கள். அந்தக் குடும்பம் சாதாரண நிலைமையில் இருப்பதாக உங்களால் அறியப்பட்டிருக்கும். கணவனும் மனைவியும் சேர்ந்து பணிக்குச் செல்வார்கள். மகனும் படிப்பை முடித்து, புதிதாக வேலைக்குச் செல்லத் தொடங்கியிருப்பான். மற்றவர்கள் பார்வையில் ‘சிரம ஜீவனம்தானோ’ என்ற தோற்றம்தான். 

அந்நேரத்தில் உங்கள் பகுதியிலேயே நல்ல வீடொன்று விலைக்கு வந்திருக்கும். யார் அந்த வீட்டை வாங்கப் போகிறவர்கள் என்ற ஆர்வம் உங்களுக்கு. தற்போதைய சூழ்நிலையில் எப்படி முயன்றாலும் உங்களால் அந்த வீட்டை வாங்க முடியாதுதான். நீங்கள் கேள்விப்படும் செய்தி உங்களையே வியப்படைய வைக்கிறது. 

பாடுபட்டுக்கொண்டிருந்த அந்தக் குடும்பம் அந்த வீட்டை விலைக்கு வாங்குகிறது. எப்படி ? அவர்கள் செயலொன்றே கருத்தாகக் கணிசமாகச் சேமித்து வைத்திருந்திருப்பர். கையிருப்பாக இருந்த தங்கங்களை விற்க முனைந்திருப்பர். அங்குமிங்குமாக சீட்டுச் சேர்த்திருப்பர். அவற்றை எல்லாம் திரட்டி அந்த வீட்டை ஒருவழியாக வாங்கி முடித்துவிட்டனர். பார்வையாளர்களாக இருந்த உங்களுக்கும் உங்களைப்போன்ற மற்றவர்களுக்கும் வியப்புத்தான் மிச்சம் !

உலகின் மிகப்பெரிய நிதிநிறுவனங்களில் முதன்மையானது கோல்டுமேன் சாக்ஸ் என்னும் நிறுவனம். அந்நிறுவனத்தில் தாம் முதலிட்டிருக்க வேண்டும் என்று வாரன் பஃபெட் விரும்பினார். ஆனால், அந்நிறுவனப் பங்குகளின் விலையோ உச்சத்தில் இருக்கிறது. அதன் புகழுக்கோ செயல்திறனுக்கோ எந்த இழுக்கும் ஏற்படவில்லை என்பதால் பங்கின் விலை மேலும் மேலும் உயர்ந்துகொண்டே சென்றதே தவிர இறங்கவில்லை. 

தாம் கருதும் விலைக்கு வந்தாலன்றி எந்தப் பங்கிலும் முதலிடும் வழக்கம் பஃபெட்டுக்கு இல்லை. அந்நிறுவனப் பங்கை வாங்கும் எண்ணம் அவருக்கு இருக்கிறது என்று தெரிந்தால் மேலும் விலை கூடிவிடும் கூடிவிடும் அபாயமும் சந்தையில் நிலவுகிறது. வாரன் பஃபெட் பொறுமையாகக் காத்திருந்தார். 

2008-இல் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தைப்போன்ற மற்றொரு நிறுவனமான லேமன் பிரதர்ஸ் நிதிச் சந்தைச் சூறாவளியில் சிக்கித் திணறி மஞ்சள் கடிதம் கொடுக்கிறது. லேமனின் பங்கு மதிப்புகள் சுழியமாகின்றன. அதே வேகத்தில் அமெரிக்க நிதி நிறுவனங்கள் அனைத்தின் விலைகளும் அதள பாதாளத்திற்கு வீழ்கின்றன. வாரன் பஃபெட்டுக்குத் தெரியும், இவை ஒரு சுழற்சிதான் என்பதும் மீண்டும் நிலைமை சீர்படும் என்பதும். கோல்டுமேன் சாக்ஸின் பங்குகளை கைக்கடக்கமான விலையில் குவிக்கிறார். இப்பொழுது அவரின் கனவும் காத்திருப்பும் நிறைவேறிவிட்டது. 

இத்தகைய செயல்களை எல்லாம் என்னவென்று அழைப்பது ? செய்வதற்கு எளியவை அல்ல இவை. செய்வதற்கு மிகவும் கடினமானவை. விழிப்புணர்வோடு காலங்கருதாது இறுக்கமாகக் கையைக் கட்டிக் காத்திருக்க வேண்டும். மின்னல் தோன்றுவதுபோல் ஒரு வாய்ப்பு மின்னித் தோன்றும். பாய்ந்துபோய்ப் பற்றிக்கொள்ள வேண்டும். அது தோன்றும் தருணத்தை தொடர்ந்து ஆராய்ந்துகொண்டேயிருக்க வேண்டும். 
கொஞ்சம் கண்ணயர்ந்தாலும் வாய்ப்பு காற்றில் கரைந்துவிடும். பத்து நிமிடங்கள் வரிசையொன்றில் காத்திருக்க நேர்ந்தால் நம்மவர்கள் எத்தனை வகையான அலுப்பு சலிப்பான கருத்துகளை உதிர்ப்பார்கள் என்று நாம் அறிவோம். 

அவ்வாறு காத்திருந்து, உரிய காலம் கனிந்ததும் முழு ஆற்றலையும் செலுத்தித் தளரா முனைப்புடன் செய்து முடிக்கும் செயல்களைச் ‘செயற்கரிய செயல்கள்’ என்று வள்ளுவர் அழைக்கிறார். பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருப்பது. காலம் கனிந்ததும் அடித்து நொறுக்குவது. அதுவரை நீங்கள் தடயம் தெரியாமல் காணப்படுவீர்கள். 

எய்தற்(கு) அரியது இயைந்தக்கால் அந்நிலையே 
செய்தற்(கு) அரிய செயல்.

வாழ்க்கையில் எய்துவதற்கு அரிதான ஒன்றை அடைவதற்குரிய வாய்ப்பு அமைந்துவிட்டால் அதை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். செய்துகொண்டிருக்கும் மற்ற சில்லறை வேலைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு அந்த அருஞ்செயலை ஆற்றத் துணிய வேண்டும். ஏனென்றால் அது செய்வதற்கு அரிய செயலாகும். 

அடைவதற்கு அருமையான காலம் அமைந்து வந்துவிட்டால், அதுவே அருமையான செயல்களைச் செய்வதற்கேற்ற நிலைமையாம்.

No comments:

Post a Comment