எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு

குறள் 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு
[பொருட்பால், அரசியல், தெரிந்துசெயல்வகை]
(For meaning in English, scroll to the bottom of this post)

பொருள்
எள்ளுதல் - இகழ்தல், இழிவாகப்பேசுதல்; தள்ளுதல்; ஒப்பாதல்.

எள்ளாத - இகழாத 

எண்ணிச் - எண்ணுதல் - எண்ணல், நினைத்தல்; ஆலோசித்தல்; மதித்தல்; தியானித்தல்; முடிவுசெய்தல்; கணக்கிடுதல்; மதிப்பிடுதல்; துய்த்தல்.

செயல் - தொழில்; பொருள்தேடுகை; இழைப்புவேலை; வேலைப்பாடு; காவல்; ஒழுக்கம்; வலிமை; செல்வாக்கு; செய்யல்நிலைமை; சேறு.

வேண்டும் - வேண்டுதல் - விரும்புதல்; விரும்பிக்கேட்டல்; விலைக்குவாங்குதல்; இன்றியமையாததாதல்.

தம்மொடு - தன்னுடன்

கொள்ளுதல் - எடுத்துக்கொள்ளுதல்; பெறுதல்; விலைக்குவாங்குதல்; உரிமையாகக்கொள்ளுதல்; மணம்செய்துகொள்ளுதல்; கவர்தல்; உள்ளேகொள்ளுதல்; முகத்தல்; கற்றுக்கொள்ளுதல்; கருதுதல்; நன்குமதித்தல்; கொண்டாடுதல்; அங்கீகரித்தல்; மேற்கொள்ளதல்; மனம்பொறுத்தல்; ஒத்தல்; பொருந்துதல்; உடலிற்காயம்படுதல்; எதிர்மறைஏவலொருமைவினையொடுசேர்க்கப்படும்ஓர்அசை. 

கொள்ளாத - ஒவ்வாத; பொருந்தாத

கொள்ளாது - எடுத்துக்கொள்ளாது, உரிமைக்கொள்ளாது, அங்கீகரிக்காது

உலகு - உலகம், பூமி நாடு உலகத்தார்(இடவாகுபெயர்), உயர்ந்தோர், சான்றோர் திசை மங்கலச்சொற்களுள்ஒன்று

முழுப்பொருள்
ஒரு செயலை செய்யும் முன் அச்செயல் ஒருவற்கு இகழ்ச்சியை தருமா அல்லது புகழை தருமா என்று ஆராய வேண்டும். இகழ்ச்சியை தராது புகழை பயனை தரும் அச்செயலை எப்படித் திட்டமிட்டு செயல்படுத்தபோகிறோம் என்று நன்கு எண்ண வேண்டும். ஏனெனில் திட்டம் சரியில்லை என்றாலும் செயல்படுத்துதல் சரியில்லை என்றாலும் அச்செயல் தோல்வியில் முடியும். அதுவும் இகழ்ச்சியே. ஆதலால் இகழ்ச்சி பெறக்கூடாது என்று எண்ணி ஒரு செயலை செய்யவேண்டும்.

ஆனால் இகழ்ச்சியை எண்ணாது கணக்கில் கொள்ளாது ஒரு செயலை செய்வோரை இவ்வுலக மக்கள் / சான்றோர்கள் / உயர்ந்தோர்கள் தன்னுடன்  நட்பாக/உறவாக வைத்துக்கொள்ள மாட்டார்கள். 

இக்கருத்து ஆள்வோருக்கு இன்றியமையாததாம். ஏனெனில் தனியொருவரின் பழியும் கேலியும் அவருடனே தீரும். ஆனால் ஆள்வோரின் பழி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதிக்கும், பழிக்கு ஆள் ஆக்கும், கேலிக்கு உரியோராக்கிவிடும். ஆள்வோர்க்கென்று சொல்லப்பட்ட இயல்புகளுக்கு ஒவ்வாதவற்றை செய்தால் உலகம் உவந்து ஏற்காது. எனவே உலகம் பழிக்காத, கேலிபேசாத வகையிலே ஆளுவோர் தம் செயல்களைச் செய்யவேண்டும்.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.
('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை
முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான். இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.

மு.வரதராசனார் உரை
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை
தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

English Meaning - As I taught a kid - Rajesh
One should do a work without taking anything for granted. One should 1) research on the work to be done, 2) analyze the results and consequence of it 3) consider to do only if it doesn't harm anyone, society, environment, doesn't break law and doesn't brink bad repute 4) think through the plan, hurdles, combat plans, resources etc. Only if a person does a work with due diligence and prudence without taking anything for granted, a person would be able to execute a work well. If a person takes things for granted, then the people (in this world) will not accommodate him in their life, projects, work, circle etc.

Questions that I ask to the kid
How should you do work?
What happens when you take a thing for granted? 
How does the world treat those who take a thing for granted?

No comments:

Post a Comment