மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு

குறள் 458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து
[பொருட்பால், அரசியல், சிற்றினஞ்சேராமை]

பொருள்
மன - நெஞ்சம்; எண்ணம்; விருப்பம்; இந்துப்பு.

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம்.

நன்கு - அழகு; மிகுதி; நல்லது; நலம்; நிலைபேறு; நன்னிமித்தம்; மகிழ்ச்சி; மிகவும்; இதம்.

உடையர் -  உடையார் - - செல்வர்; சுவாமி சிலவகுப்பார்களின்பட்டப்பெயர்இலங்கையில்ஒருகிராமஅலுவலர்.

ஆயினும் - ஆனாலும்; ஆவது உம்மைப்பொருளில்வரும்எண்ணிடைச்சொல்.

சான்றோர்க்கு - அறிவொழுக்கங்களால்நிறைந்தோர்; சங்கப்புலவர்; வீரர்.

இன - இனம் - வகை; குலம் சுற்றம் சாதி கூட்டம் திரள் அரசர்க்குஉறுதிச்சுற்றம்; அமைச்சர்; உவமானம்

நலம் - நன்மை; இன்பம்; உதவி; கண்ணோட்டம்; அழகு; அன்பு; ஆசை; குணம்; பயன்; புகழ்; உயர்வு; நல்வாழ்வு; நிறம்; செம்மைநிறம்; விருச்சிகராசி; எருதின்விதை; சுக்கு; அறம். 

ஏமாப்பு - பாதுகாப்பு; அரணாதல், வலியாகுதல்; செருக்கு; கருத்து.

உடைத்து - இருக்கும்

முழுப்பொருள்
நம்மை சுற்றி எவ்வளவு கேடுகள் இருப்பினும் துன்பங்கள் இருப்பினும் மனதை நன்றாக பேணிக்கொண்டால் அதாவது நமது எண்ணங்களை நன்றாக பேணிக்கொண்டால் நமக்கு நன்மைகள் ஏற்படும், இன்பங்கள் ஏற்படும். இருந்தாலும் ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு கலந்தாலும் அக்குடம் முழுக்க நஞ்சாகிவிடும். அதுப்போல நமது எண்ணங்களும் மனமும் நலமாக இருந்தாலும் மனதின் திட்பம் ஆழமாக இருந்தாலும் நம்முடைய சுற்றத்தில் நாம் வைத்துக்கொள்ளும் ஒரு உறவு முள்ளாக/நஞ்சாக இருந்தால் அது நாளடைவில் சிறுக சிறுக நம்மை அறியாமலேயே நஞ்சாக்கிவிடும் ஏனெனில் தீய பழக்க வழக்கங்கள் துவத்தில் இன்பம் போன்றே இருக்கும். துன்பத்தை இன்பம் போன்று தரும் அவா துன்பத்துள் துன்பம் என்று முன்பு அவா அறுத்தலில் பார்த்தோம். தீய உறவுகளும் அவாவை/ஆசையினை போன்று தான். ஆதலால் நமது மனதின் நலம் போல நமது இனத்தின் நலமும் முக்கியம். ஆதலால் ஒரு சான்றோர் அல்லது சான்றோர் பாதையில் செல்லும் ஒருவர் தனது இனத்தை நன்கு தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இனம் நம்மை தீயவற்றில் இருந்து பாதுக்காக்கும் நல்வழிப்படுத்தும். இகழ்ச்சி வராமல் காக்கும். 

மேலும் நமது மனம் ஒருவித குரங்கு போன்றதாகும். அது எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிழந்து தவறுகளை செய்யலாம். அப்பொழுதெல்லாம் நமது நல்ல நட்புகள் உறவுகள் வந்து தோள்க்கொடுத்து நம்மை நம்முடைய நல்வழிப்பாதையில் செலுத்தும். தேவையெனில் நம்மை ஒரு அதட்டு அதட்டி கண்டிக்கும் ஏனெனில் நமது உறவுக்கு/ நட்புக்கு அந்த உரிமை உண்டு. 

சிற்றினத்துடன் சேராதே. சான்றோர் இனத்து இரு.

மேலும்: அஷோக் உரை

பரிமேலழகர் உரை
மனநலம் நன்கு உடையராயினும் மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து
('நன்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.

மணக்குடவர் உரை
மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து. இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

மு.வரதராசனார் உரை
மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை
மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment