வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

குறள் 439
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
[பொருட்பால், அரசியல், குற்றங்கடிதல்]

பொருள்
வியத்தல் - செருக்குறுதல்; அதிசயப்படல்; நன்குமதித்தல்; பாராட்டுதல்; கொடுத்தல்; கடத்தல்.

வியவற்க - வியந்து தற்பெருமையில் தருக்கு கொள்ளற்க

எஞ்ஞான்றும் - எகக்காலமும், எப்பொழுதும், எப்போதும்.

தன்னை -தலைவன்; தமையன்; தமக்கை; தாய்.

நயத்தல் - விரும்புதல்; பாராட்டுதல்; சிறப்பித்தல்; பிரியப்படுத்தல்; தட்டிக்கொடுத்தல்; கெஞ்சுதல்; அன்புசெய்தல்; பின்செல்லுதல்; மகிழ்தல்; இன்பமுறல்; இனிமையுறுதல்; இணங்கிப்போதல்; பயன்படுதல்; மலிதல்; மேம்படுதல்; ஈரம்ஏறுதல்; நட்பாடல்; தலைவனைக்கண்டதலைவிதனதுஆசைப்பாடுகூறும்புறத்துறை.

நயவற்க - அதேபோல விழைந்து செல்லவேண்டாம்

நன்றி - நன்மை; உதவி; செய்ந்நன்றி; அறம்.

பயவா - பயக்காத, தாராத, பிறருக்கு பயன் தரக்கூடிய தன்மைய இல்லாத

வினை- தொழில்; நல்வினைதீவினைஎனஇருவகைப்பட்டமுன்னைவினை; வினைச்சொல்; செய்தற்குரியது; பரிகாரச்செயல்; முயற்சி; போர்; வஞ்சகம்; தந்திரம்; கருத்து; தொந்தரவு; சீழ்; இரண்டைக்குறிக்கும்குழூஉக்குறி.

முழுப்பொருள்
எக்காலத்திலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எவ்வளவு வளர்ந்தாலும் எவ்வளவு பெரிய இடர் அல்லது பின்னடைவில் இருந்து மீண்டு வந்தாலும் எவ்வளவு பெருமையும் புகழும் பெற்றாலும் எவ்வளவு செல்வத்தை ஈட்டினாலும் தன்னை தானே வியந்துக்கொள்ளாதே. எப்பேர்பட்ட உயர்ச்சியிலும் எக்காலத்திலும் என்றும் அகங்காரம் கொள்ளாதே. ஏனெனில் செருக்கு கொள்ளுதல் குற்றமாகும். செருக்கு கொண்டால் நம் கண்ணும் அறிவும் பார்க்கவேண்டியவற்றை பார்க்காமல் தவறு செய்யலாம், நம் காதுகள் பெரியோரின் சொற்களை மனம் கொடுத்து கேட்காமல் அவர்களின் சினத்திற்கு ஆளாகலாம், நம் வாய் தீய பணிவற்றச் சொற்களைப் பேசலாம். இவையாவும் துன்பமே விளைவிக்கும். ஏனெனில் அதற்கு வேர் செருக்கு/அகங்காரம். அதனை கொள்ளாதே.


அதுப்போல் நன்மை பயக்காதா அறம் அல்லாத செயல்களை ஒரு பொழுதும் விரும்பாதே. அதை செய்வோரையும் சிறப்பிக்காதே பாராட்டாதே நட்புபாடாதே. ஏனெனில் அவை காலத்தை விரயம் செய்யும் செயல்கள். மேலும் நன்மை பயக்காமல் தீயனவற்றை பயக்கும். அத்தகைய செயல்களை செய்தால் அவை தவறான முன்மாதிரியாக மாறிவிடும். உன்னைப்பார்த்து பலர் செய்வர். 

மேலும்: அஷோக் உரை

ஒப்புமை
”தன்னை வியந்தான் விரைந்து கெடும்” (குறள் 474)

“எம்மை அறிந்திலீர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாங் கொள்வது கோளன்று தம்மை
அரியரா நோக்கி அறனறியும் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள்” (நாலடி 165)

“கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாரட்டப் பாடெய்தும் தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தில் தணியாத
பித்தன்என் றெள்ளப் படும்” (நாலடி 340)


பரிமேலழகர் உரை
எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.
(தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை
எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக. செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.

மு.வரதராசனார் உரை
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

No comments:

Post a Comment